அவதாரம்

நீங்கள் பார்க்கிற நான்; நானல்ல. எனக்குள் ஏகப்பட்ட அவதாரங்கள். அது சில நேரங்களில் வாமன ரூபமெடுக்கும்; சில நேரங்களில் விஸ்வரூபமெடுக்கும். என்னைப் போன்றே பலரும் இங்கே பல போலி முகங்களை மாட்டித் திரிகின்றனர். ஏன், நீங்களும் அப்படித்தான். இடம், பொருள், ஏவலறிந்து செயல்பட வேண்டி, பல நேரங்களில் நாம் நாமாக செயல்படாமல், போலி முகங்களையே நிஜமுகமென நம்பிப் பயணிக்க வேண்டியிருக்கிறது.

அவனை நேரெதிரே நின்றுக் கேட்டுவிட, எத்தனை எத்தனை ஆயிரம் கேள்விகள் எனக்குள்ளே விஸ்வரூபமெடுக்கிறது. பிள்ளைகளின் படிப்புச் செலவு, பெற்றோர்களின் மருத்துவச் செலவு, சகோதரியின் திருமணத்திற்காக வாங்கியக் கடன், வீடுகட்ட வாங்கியக் கடன் என நீண்டுக் கொண்டிருக்கும் பட்டியலுக்குமுன், எனக்குள்ளெழுந்த கேள்விகளின் வீஸ்வரூபமானது தானாகவே வாமனமாகிப் போகிறது.

பலருக்கும் வாய்த்திராத அரிய சந்தர்ப்பங்களில், அவர்களின் முகத்திரைக்கு பின்னாலிருக்கிற முகங்களைப் பார்த்ததுண்டு. எத்தனை குரூரம், எத்தனை வஞ்சம், எத்தனை கொலைவெறி. அத்தனையையும் பார்க்கிறபோது, என் மனமானது விஸ்வரூபமெடுக்க என்னை உந்தித் தள்ளும். ஆனால், நீண்ட நேர யோசனைக்குப்பின், வாமனத்தைவிடவும் மிகநுண்ணிய ரூபமெடுக்கச் சொல்லும்; விஸ்வரூபமெடுப்பதெல்லாம் கற்பனைக் காட்சியில் மட்டுமே விரியும்.

ஒருநாள் அத்தனையும் மாறும்; அன்றைக்கு நானும் விஸ்வரூபமெடுப்பேன். அதுவரை எத்தனை எத்தனை போலி முகங்களை மாட்டிக் கொள்ள வேண்டியிருக்குமோ, அத்தனை அத்தனையும் மாட்டிக் கொள்வோம்.

பழிபோடும் உலகம் இங்கே,
பலியான உயிர்கள் எங்கே?
உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்து இருப்போம்
நடப்பவை நாடகம் என்று
நாமும் சேர்ந்து நடித்திருப்போம்.

பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக் கொள்வோம்
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக் கொள்வோம்
கதை முடியும் போக்கில் அதை முடித்துக் கொள்வோம்

- கவிஞர் நா. முத்துக்குமார்