மனவாழம்

என்னுள்ளே
எத்தனை யெத்தனை
கேள்வி மின்னல்கள்

ஒவ்வொன்றும்
அடுத்து வரவிருக்கும்
பேரிடியின் முன்னோட்டம்

இடியிடையே
நொடிக்கொருமுறைத் துடித்து
அகமோ அலறும்

இருந்தும்
அத்தனையும் மறைத்து
புறமோ நடிக்கும்

என்னிலெழுகிற
கேள்விகள் என்னையே
பதிலாய் கேட்கிறது

எதிர்படுபவரின்
இதயத்தையும் கடித்து
தின்னப் பார்க்கிறது

அப்பப்பா...
மண்டைக்குள் எத்தனை
முடிவிலி சத்தங்கள்

எலும்பற்றிருந்தால்
என்றைக்கோ ஏகச்சத்தத்தில்
பேரிடியாய் வெடித்திருக்கும்

அதில்
உலககாதுகள் ஒவ்வொன்றும்
ஓசையுணர்வற்று போயிருக்கும்

அணுக்குண்டுகள்
என்னோடு போட்டியிட்டு
தோற்றதெல்லாம் பழங்கதை

அறிவியலும்
ஆராய்ந்தென்னிடம் தோற்று
நிற்பதுதான் புதுக்கதை

எனக்குள்
எழுகிற அழுத்தத்தில்
எண்ணங்களை சமைக்கிறேன்

பொறுமையாய்
எதிர்நோக்கி காத்திருந்தால்
சுவைபட விருந்திருக்கும்

இடையினில்
திறந்தால் என்னோடு
நீங்களும் வெடிப்பதுறுதி

என்னை
நானே முழுமையாய் மீட்கும்வரை
எதற்கும்
கொஞ்சம் தள்ளியே இருங்கள்.


#Stress: Overloaded