கறிக்குழம்பு

தீபாவளி பேருந்துப் பயணம் பிழிந்தெடுத்தக் கலைப்பில், காலை விடிந்ததுகூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தான் கவிமொழியின் தம்பி. அறைக்கதவை நீண்ட நேரம் யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அவனது தூக்கத்தை கலைத்தது. படுக்கையைவிட்டு எழுந்து, கடுப்போடு கதவைத் திறந்தான். எதிரினில் அவனது அம்மா. “எதுக்குமா இப்படி கதவ தட்டிட்டு இருக்க?“ என கடுகடுத்தக் குரலில் கேட்டுக் கொண்டே, அறைக்குள் போய் மீண்டும் கட்டிலில் படுத்தான். அவனை பின்தொடர்ந்தவாறே “அது ஒண்ணுமில்லடா குட்டி, நீ திங்கள் கெழமை இங்கதான இருப்ப...?“ எனக் கேட்டாள். “ஏம்மா, இத கேக்கதான், இப்படி உயிர் போற மாதிரி கதவ தட்டினியா?“ என்றான் கோபமாக. “அதுக்கில்லடா, இன்னைக்கி சனிக் கெழமையா இருக்கு. பெருமாள் பொறந்த நாளு. அதான்... நீ திங்க கெழமை இங்க இருந்தா, நாம அன்னைக்கி கறி எடுத்து சமைக்கலாமானு கேக்க வந்தேன்“ என தயங்கியவாறே கேட்டாள். ஏனென்றால், அவனுக்கு சாமி என்றால் கொஞ்சமல்ல நிறையவே அலர்ஜி. “கறிக்குழம்பு போச்சே!“ என மனதில் நினைத்துக் கொண்டு, திங்கள் கிழமையும் இங்கேயேதான் இருப்பதாகச் சொன்னான். கூடவே, “மா.. அக்கா வரல?“ எனக் கேட்டான். “இல்லையாம்டா, ஏதோ வேல இருக்காம்“ என்றாள். எல்லா அம்மாவையும் போல, இவனது அம்மாவுக்கும் கடவுள் பக்தி அதிகமோ அதிகம். “இவன் இப்படிலாம் ஈசியா ஒத்துக்க மாட்டானே? என்னவா இருக்கும்? எல்லாம் பெருமாளோடு அருளா இருக்கும்“ என தனக்குத்தானே பேசிக் கொண்டு, சைவ சமையலைத் தொடர்ந்தாள் இவனது அம்மா.

மீண்டும் தூக்க இராக்கெட்டில் ஏறி, செவ்வாய் கிரகம் நோக்கி புறப்பட்டான் இவன். நீண்டநேர ஆழ்ந்த தூக்கத்திற்குப்பின் எழுந்தான். அலைப்பேசியில் நேரத்தைப் பார்த்தான். 11 மணியைத் தாண்டியிருந்தது. குளித்து முடித்தபின், தோசையும் அதற்கு துணையாக வைத்திருந்த உருளைக் கிழங்கு குழம்பையும் வேண்டா வெறுப்பாக வாயில் திணித்துக் கொண்டே, பெருமாளை மனதுக்குள் திட்டித் தீர்த்தான். சாப்பிட்டு முடித்தபின், செய்வதற்கு வேலை எதுமில்லாததால், வெ. இறையன்புவின் “பத்தாயிரம் மைல் பயணம்“ புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான். கண்கள் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் இவனது மனம், முழுக்க முழுக்க கறிக்குழம்பிலேயே இருந்தது.

அறையின் வெளியே, “ஏண்டி, காலைல ஃபோன் பண்ணதுக்கு வேல இருக்கு வரலனு சொன்ன? இப்ப திடீர்னு வந்திருக்க“ என யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தாள் அம்மா. “வேலலாம் முடிச்சிட்டமா, அதான் கெளம்பி வந்துட்ட“ என்றாள் இவனது அக்கா கவிமொழி. இன்னும் ஏதேதோ பேசி, சிரித்துக் கொண்டிருந்தார்கள் மகளும் அம்மாவும். இதையெல்லாம் காதில் கேட்டவாறே புத்தகத்தில் பயணித்துக் கொண்டிருந்தான் இவன்.

கொஞ்சம் நேரத்தில், இருவரும் பேசும் சத்தம் நின்றிருந்தது. “குட்டி...“ என அழைத்தவாறே அறைக்குள் நுழைந்தாள். “சொல்லும்மா“ என்றான். “இந்தாடா போயிட்டு ரெண்டுகிலோ கறி வாங்கிட்டு வாடா“ என கையில் காசைக்  கொடுத்தாள். இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நமக்கு சரியாக காதில் விழவில்லையோ என்ற குழப்பத்தோடு, “என்னம்மா சொன்ன?“ எனக் கேட்டான். மீண்டும் அதையே சொன்னாள். “என்னம்மா சொல்ற? காலைலதான் சனிக் கெழமை... பெருமாளு... அது இதுனுலாம் கதை சொன்ன. இப்போ என்னடானா கறி எடுத்துட்டு வர சொலற?“ என்றான். “சனி கெழமதான், ஆனா உங்க அக்கா ரொம்ப நாளைக்கி அப்புறம் வந்திருக்கா. அதனாலதான்டா“ என்றாள். “ஓ... இப்போ உங்க பெருமாளு ஒண்ணும் சொல்ல மாட்டாரா...“ எனக் கிண்டலடித்தான். சிரித்துக் கொண்டே, “பெருமாளவிட என் பொண்ணுதான்டா முக்கியம், சீக்கிரம் போயி வாடா“ என்றாள். “உன் பொண்ணுக்காக அந்த பெருமாளையே வேணானு சொல்ற. பார்த்துக்க, ராத்திரி வந்து கண்ண குத்தப்போறாரு“ என்றான். “குத்துனா குத்தட்டும், நான் குருடா வேணாலும் இருந்துக்கற. நீ வெட்டிய பேசாம கெளம்புடா“ என்றாள். “சரி, சரி.. நான் கெளம்பறேன்...“ என சிரித்தவாறே சொல்லிவிட்டு, கறிக்குழப்பு சாப்பிடப் போகிற மகிழ்ச்சியில் கடையை நோக்கி மிதிவண்டியை முடுக்கினான். இதையெல்லாம் வெளியில் சுவற்றினோரமாக நின்றபடி, கண்களில் கண்ணீர் கரைபுரளக் கேட்டுக் கொண்டிருந்தாள் கவிமொழி.