சாம்பலாய் எரிந்த காடு

 ஒரு எளிமையான தத்துவத்தை புரிந்துக்கொள்ளுதல் நினைப்பதுபோல அவ்வளவு எளிமையில்லை. நுட்பங்களை உச்சிமுகர ஒரு பேரனுபவம் தேவையாய் இருக்கிறது. பேரனுபவத்திற்கும் புரிதலுக்கும் ஒரு மகா மட்டமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்திருக்க வேண்டும் அல்லது பணயம் வைக்க வேண்டும். இன்னதுதான் இது, இதன் மூலம் இதுதான், இப்படி நிகழ்ந்திருந்தால் இப்படித்தான் என ஒருபோதும் முன்னறிவிக்கை கிடைப்பது கிடையாது. ஓடும் படகைப் போல பாதையிலிருந்து திரும்பவேண்டிய அல்லது திசைமாற வேண்டிய சூழலேற்படின் திரும்பியாக வேண்டும். பாதையில் பயணிப்பதை பின் பார்த்துக் கொள்ளலாம். உயிர்த்திருத்தல்தான் இந்த பேரியியற்கையின் ஆதிப்புள்ளி.

திரும்புதல் சாத்தியமற்றது என்றானபோதும் ஒரு போருக்கு முன்னான வீரனைப்போல, புயலிலும் பூக்களைத் தாங்கி நிற்கும் ஒரு மெல்லிய செடியைப்போல, இறுதிச் சொட்டு தீர்ந்திடினும் தன் எச்சங்களை, தன் தொடர்ச்சியை மீதம் வைத்து செல்லும் மீன்களைப் போல, தன்னைத் தேட யாருமில்லை, தனக்காக ஏதுமில்லை என்றறிந்தப் பின்னும் இன்னொருமுறை தற்கொலைக்கு முயலும் முயற்சியை ஒத்திப்போட்டு தன் பழைய நிலைக்கு திரும்பும் தனிமையாளனைப்போல வாழ்க்கையின்மீதும், வாழ்தலின்மீதும் துளியளவு காதலேனும் தேவையாய் இருக்கிறது. இந்த வாழ்க்கையானது எத்தனை கொடூரமானதாக இருந்தாலும் ஒரு புன்முறுவலோடு மீண்டும் துவங்குதல் அவசியமாகிறது. யாருக்கும் தன் பயணத்தை முடித்துக் கொள்ள இங்கே விதிக்கப்படவில்லை. ஏதோவொடு வடிவத்திலோ, வடிவமற்றோ பயணித்துக் கொண்டேதான் இருக்கிறது இந்த மொத்த பிரபஞ்சமும்.

தனித்தவொன்றென்று எங்குமே எதுவுமே இல்லை. ஒன்றை இன்னொன்றும், இன்னொன்றை இன்னொன்றும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது; பழிக்க வேண்டியிருக்கிறது; சண்டையிட வேண்டியிருக்கிறது; காயப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது; காதலிக்க வேண்டியிருக்கிறது. ஒருபோல இருப்பினும் சில வெட்டுக்கள் குணப்படுத்துவதற்கும், சில வெட்டுக்கள் கொன்றழிப்பதற்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இந்தப் பேரியியற்கையின் சாராம்சம். முட்டாள் மனங்கள் எல்லாவற்றிற்கும் காரணமிருப்பதாய் தேடுகிறது. காரணங்கள் எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. எலிக்கும் பூனைக்குமான, பாம்புக்கும் கழுகுக்குமான, மானுக்கும் புலிக்குமான உறவுமுரண் உயிர்த்திருத்தலுக்கான வழிகளைத்தான் காட்டுகிறது. எதன்மீதும் எதற்கும் பகையாட கற்றுத் தரவில்லை. ஒன்றை இன்னொன்று உயிர்த்திருத்தலுக்காக கொல்ல வேண்டியிருக்கிறது. கொன்றதால் எதுவுமிங்கே முழுமையாய் அழிந்தும் போய்விடவில்லை. சாம்பலாய் எரிந்த காடுகள் மீண்டும் ஒரு பச்சையிலையை துளிர்ப்பதைப் போல, ஒவ்வொன்றும் தன்னை வேறொரு வகையில் மீண்டும் மீட்டமைத்துக் கொள்கிறது; மீட்டமைத்துக் கொண்டேயிருக்கும். அறிவுள்ளவைகள்தான் இதெல்லாம் புரியாமல் தன்னை குழம்பிக் கொண்டு, நகர முடியாமல் ஒரே புள்ளியில் சிக்கிக் கொள்கிறது.

எப்படி ருசிக்கப்படுகிறதென்பதில்தான் பிரச்சனையே துவங்குகிறது. பெருங்காமத்தின் இன்பத்தை முழமையாய் லயித்திட இடையிடையே சில நிறுத்தங்களும் நிதானங்களும் அவசியமாகிறதைப்போல, இந்த கேடுகெட்ட வாழ்க்கையின் நுண்மைகளை, கொடைகளை, சுகந்தங்களை உச்சிமுகர ஸ்தம்பித்துப் போதல் அல்லது வெறுத்துப் போதல் அவசியமாகிறது. சமயங்களில் உண்டாகுமிந்த வெறுமையானது வாழ்க்கையின் ருசியைக் கூட்டுவதற்கு கலக்கப்பட்ட உப்பைப் போன்றது. தனித்து ருசித்தால் உவர்ப்பாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ருசித்தோமானால் மெய்மறக்கச் செய்யும். இரசனையான புலன்களுக்குத்தான் இந்த கேடுகெட்ட வாழ்க்கையினுள்ளும் புதைந்துக் கிடக்கிற அழகியலின் இதுவரை காணாத பரிமாணங்கள் தென்படும். கோடாரியின் ஆவேசமான வெட்டுக்கள் எல்லா நேரங்களில் மரங்களை சாய்ப்பதற்கு மட்டுமேயில்லை, செதுக்குவதற்கும்தான். எதுவாயினும் மரமெப்போதும் தன்னை தயாராகவே வைத்திருக்கிறது. பூத்தபின் உதிர்வதற்கும், உதிர்ந்தபின் பூப்பதற்கும் வாழ்க்கையின்மீது எப்போதும் ஒரு பிடிமானம் அவசியப்படுகிறது. இந்தப் பிடிமானம்தான் நம் எல்லோரின் தேவையும் கூட.