காதலைக் கொண்டாடுவோம் – 2

     காதலின் சிறகுகளை உடைக்க நினைப்பவர்களின்மீது சொல் வீசுவதற்குமுன், காதலர்களின் மனோநிலையை ஆராய்வது அவசியமென கருதுகிறேன். பெரும்பாலான காதலர்களுக்கே காதலின்மீதான புரிதல் இல்லை. காதலின் தொடக்கப்புள்ளி பாலினக் கவர்ச்சி எனினும், அது மட்டுமே முழுமையான காதலாகிவிடாது. அந்தப் புள்ளி, முற்றுப் பெறும்போது காதலும், காதலர்களுக்கு இடையேயான அந்த ஊடலும் முற்றுப் பெற்றுவிடுகிறது. உடல் ஈர்ப்பைத் தாண்டிய இருவருக்கும் இடையிலுள்ள மன ஈர்ப்பே காதலை என்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருக்கும். உடல் ஈர்ப்பு காலப்போக்கில் கரைந்துவிடும். மன ஈர்ப்போ மடிந்தாலும் மாறாதிருக்கும்.

     காதலை யாராலும் கற்றுத் தந்துவிட முடியாது. காதல் என்பது இதுதான்.. இன்னதுதான்.. இப்படித்தான் இருக்க வேண்டுமென வரையறுத்துவிடவும் முடியாது. காதல்... அந்த கடல் போல, வானம் போல பறந்து விரிந்திருக்கிறது. அதன் எல்லைகள் அளப்பறியது. ஒரு துளியை எடுத்துக் கொண்டு அதுதான் கடல் என்றும், ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அதுதான் வானம் என்றும் வாதிடுவது எவ்வளவு அறிவிலித்தனமோ, அதுபோலவே காதலை வார்த்தைக்குள் அடக்கிவிட முயலுவதும். எத்தனை கோடிக் கண்கள் பார்க்கிறதோ, அத்தனை கோடி பிம்பங்களை காதல் காட்டும்.

     மனிதர்களுக்கு நீச்சல் பழக சொல்லித் தருவதைப் போல, ஒரு கடலில் இருக்கிற மீனுக்கு யாரும் நீச்சலைப் பழகச் சொல்லித் தருவதில்லை. அது தானாகவே நிகழும். அதுவொரு இயற்கையான நிகழ்வு. நாம் நீச்சல்தான் பழகுகிறோம் என்கிற எந்த நினைப்பும் இல்லாமல், ஆயுள் முழுக்க அத்தனை ஆனந்தமாய் நீந்திக் கொண்டிருக்கும். நீச்சலை ஒருபோதும் தனியான நிகழ்வாக அது அணுகியேதே இல்லை. அதனால்தான், அந்த ஆனந்த நீச்சல் ஒருபோதும் சலித்துப் போகாமல் இனித்துக் கொண்டே இருக்கிறது.
    
     மனிதர்களும் காதலை இப்படிப்பட்ட இயற்கையான நிகழ்வாக அணுகினால், அது என்றைக்குமே ஆனந்தம் தருகிற இனிய நிகழ்வாக இருக்கும். காதலை ஒருபோதும் நீச்சல் பழகுவதைப் போல பழகவே கூடாது. அப்படி ஒரு எண்ணமிருந்தால் இந்த நொடியிலேயே வெளியில் துப்பிவிடுங்கள். காதல், அதுவாகவே நிகழ வேண்டும். காதல் தொடங்கிய நொடி இதுதானென எந்த நினைப்புமில்லாமல் தொடங்க வேண்டும். தொடங்கியப் புள்ளியை நினைவு வந்து தேடினாலும் கிடைக்காமல் தொலைந்துப் போயிருக்க வேண்டும். அப்படி தொடங்குகிறபோது, தொலைகிறபோது, அதற்கு முடிவென்பதே இல்லாமல் போயிருக்கும். மனிதர்கள் மடிந்துப் போகலாம்; ஆனால், இந்த அதியற்புதக் காதல் என்றைக்குமே முடிவிலியாய் தொடர்ந்திருக்கும்.

     காதலை, இந்தக் கரையிலிருந்து தாவிக் குதித்து அந்தக் கரையை அடைகிற நிகழ்வாக பார்க்க வேண்டாம். அப்படிப் பார்த்தீர்களேயானால், அந்தக் கரையை அடைந்ததுமே உங்களின் காதல் முடிந்துவிடும். அதிலிருக்கிற ஓருயிர்க் கொண்ட ஈருடல் என்கிற உணர்வு மறைந்துப் போகும். எந்த முன்னேற்பாடுமில்லாமல், எந்த பயமுமில்லாமல், நீங்கள் வெறுமனே காதலில் மூழ்கிப் போங்கள். மற்றதை அந்தக் காதல் பார்த்துக் கொள்ளும். காதலின் முழுமை, இன்னொரு கரையை அடைவதில் இல்லை. மாறாக, அடிமட்ட ஆழம் வரை தன்னிலை மறந்து, மூழ்கிப் போதலில்தான் உள்ளது. அங்குதான் காதலின் முத்துக்களும் இன்னபிற நவரத்தினங்களும் கிடைக்கப் பெறும். நீங்கள் இதுவரை பார்த்த கோணத்திலிருந்து, வேறொருக் கோணத்திற்கு பரிணமிக்கச் செய்து, காதல் பற்றிய முழுமையான புரிதலை உங்களுக்குள் கட்டமைத்து ஊடுருவச் செய்யும்.

     முழுமையான புரிதல் உள்நுழைகிறபோது, வடக்கிந்தியர்களின் பற்களில் பற்றியுள்ள பான்மசாலா கறைகூட பாப்லோ பிகாசோவின் ஓவியம் போல அழகியல் நிறைந்ததாக தோன்றும். ஒவ்வொரு நிகழ்விலும் காதல் நிறைந்து கலந்திருக்கிறது. புதிதாக நடக்கப் பழகுகிற மழலைக் குழந்தை, எங்கே போகிறோம்? எதற்காக போகிறோம்? என்கிற எந்தக் கேள்வியும் இல்லாமல் அம்மாவின் கைகளை அழகாகப் பற்றிக் கொண்டு, அதன் ஒவ்வொரு பாத அடியையும் ரசனையோடு ரசித்தபடி எடுத்து வைக்கும். அந்நிகழ்வைப் பார்க்கிறபோது நம்மையும் அறியாமல், அந்த குழந்தையின் ஆனந்தம் நமக்குள்ளும் தொற்றிக் கொள்ளும். எந்தக் கேள்வியும் கேட்காமல், எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல், காதல் தேவதையின் கைகளைப் இதமாக பற்றிக் கொள்ளுங்கள் போதும். அடுத்து வருகிற ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிகழ்வும் அவ்வளவு ஆனந்தமாக மாறிப் போகும்.

-   (தொடர்ந்து கொண்டாடுவோம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக