பட்டாம்பூச்சியாக‌ பரிணமியுங்கள்

வருத்தப்பட்டு அழுதது போதும், நிறுத்துங்கள். கவலைகள் கண்டிப்பாக மகிழ்ச்சியாக மாறும். ஆனால்,     கவலையோடு வீணடித்துக் கொண்டிருக்கிற இந்த நொடியை யாரிடமிருந்து மீண்டும் கடன் வாங்குவீர்கள்? உங்கள் அழுகைக்கு காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். தோற்றவன் எவனுமே வென்றதேயில்லை, வென்றவன் எவனும் தோற்றதேயில்லை என உங்கள் மனம் சொன்னால் தொடந்து அழுங்கள். ஆனால், அதற்கு மாறாக இருந்தால் அழுகைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தொடர்புள்ளி வையுங்கள்.

பசிக்கிறதென்றால் உங்களுக்கான வெற்றிக்கனியை நீங்கள்தான் பறித்துச் சுவைக்க வேண்டும். உங்களுக்காக யாரும் இங்கு பறித்து வந்துத் தரப்போவதில்லை. தாகத்தோடு இருப்பவன் எப்படி தண்ணீரை நோக்கி புறப்படுகிறானோ, அதேபோல தண்ணீரும் தாகமுள்ளவனின் தொண்டையை நனைக்கப் புறப்படுகிறது. ஒருபோதும் நிற்காமல் தாகத்தோடு பயணித்துக் கொண்டேயிருங்கள். நீங்கள் பயணிக்கிற ஒவ்வொரு அடியிலும், உங்களுக்கான வெற்றியானது இரண்டடி உங்களை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். நம்பிக்கையோடு இன்னுமொரு அடியையும் எடுத்து வையுங்கள். மன திடத்தோடு மதில் தாண்டி வளருங்கள்.


 

கம்பளிப் பூச்சியாய் இருக்கிறபோது அருவருப்பாய் பார்க்கிற இந்த உலகம், பட்டாம்பூச்சியாய் பரிணமித்துப் பறக்கிறபோது, உங்கள் பின்னால் ஓடி வரும். தொடந்து தோற்றுக் கொண்டேயிருக்கிறோமே என வருந்தி மூலையில் முடங்காதீர்கள். அது உங்களின் வளர்ச்சிக்கான காலம். தொடந்துப் போராடுங்கள், விரைவில் பட்டாம்பூச்சியாய் பரிணமிக்கும் காலம் வரும். ஊக்கத்தோடு இருங்கள், உலகம் கண்டிப்பாக உங்கள் பின்னால் ஓடோடி வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக