புத்தக விமர்சனங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக விமர்சனங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாதொருபாகன் – பெருமாள் முருகன்


      சில புத்தகங்களை படிக்கும்போது நம்மையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் தாரைத் தாரையாக கொட்டும். அந்தக் கண்ணீருக்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று, அந்தக் கதையோடு, எழுத்தோடு நாம் ஒன்றிவிட்டதன் அடையாளம். இரண்டு, இங்கிருந்தபடியே நம் கண்களின் வழியே அந்த எழுத்தாளனுக்கு நாம் செலுத்துகிற காணிக்கை. நானும் பல நேரங்களில் பல புத்தகங்கள் வாசிக்கும்போது என்னையுமறியாமல் மனம் கனத்து அழுதிருக்கிறேன். இந்த மாதிரியான அழுகையை நான் எப்போதும் மனிதர்களுக்காக அழுததே இல்லை. இனிமேல் அழப்போவதும் இல்லை. அவ்வளவு எளிதில் அழுகிற ஆளும் நானில்லை. ஆனால், பிடித்த புத்தகங்கள் என்னை ஏதோ செய்து கண்ணீரை காணிக்கையாக வாங்கிக் கொள்கின்றன. அந்த அழுகையை அடக்கவும் முடிந்ததில்லை. இதுவரை அடக்க முயன்றதுமில்லை. இனிமேலும் அடக்கப் போவதுமில்லை.




     மாதொருபாகன் படிக்கிறபோது அப்படியான அழுகை எதுவுமே வரவில்லை. அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால், எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. பிடித்திருந்தும் எப்படி அழுகை வராமல் போனது? என என்னை நானே கேட்டுக் கொண்டேன். மாதொருபாகனைப் படித்து முடித்தபோது நடுநிசியை நெருங்க இன்னும் இரண்டு மூன்று மணி நேரங்கள் மீதமிருந்தன. மாதொருபாகன் எனக்குள் ஏதோவொரு உணர்வுக் கடத்தலை நிகழ்த்தியிருந்தது. அது என்ன உணர்வென்றும் இன்னும் புலப்படவில்லை. அந்த உணர்வோடு உறங்கப் போனேன். ஆனால், உறக்கம் என்னோடு உறங்க வரவில்லை. புரண்டு புரண்டுப் படுத்துப் பார்த்தேன். நடுநடுவே கொஞ்சம் நேரம் தூக்கம் வந்தாலும் அந்த தூக்கமும் மேலோட்டமாகவே இருந்தது. காலையில்தான் எனக்கு அழுகை வராது போன காரணமும் விளங்கியது. அது;

“புத்தகங்கள், கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்கிக் கொள்வதில்லை; இப்படியான தூக்கமில்லாத இரவுகளையும் காணிக்கையாக்கிக் கொள்ளும்”

என காலையில் கண்ணாடியில் தெரிந்த என் சிவந்த கண்கள் உணர்த்தியது. மாதொருபாகன் ஏற்படுத்திய படபடப்பு இன்னும் அடங்கவில்லை. இன்றைய இரவும் தூக்கம் வருமாயென தெரியவில்லை. வராமல் போனாலும் வருத்தப்பட மாட்டேன். அதற்கு மாறாக, மிகுந்த மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் அடைவேன். இப்படியான தூக்கமில்லாத இரவுகளை அந்த எழுத்தாளனுக்கும், அவனின் எழுத்துக்கும் காணிக்கையாக்குவதில் சிவந்த கண்களோடு நான் பெரும் கர்வம் கொள்கிறேன். “மாதொருபாகன்” மாதிரியான எழுத்துக்களைப் படிப்பதனால் என் கண்கள் நிரந்தரமாக தூக்கத்தை தொலைத்து, சிவப்பை சூடிக் கொண்டாலும் பெரும் மகிழ்ச்சியே அடைவேன். எனக்கு பிடித்தமான ஆகச்சிறந்த எழுத்தாளர்களில், பெருமாள் முருகனும் “மாதொருபாகன்” படைப்பின் மூலமாக சேர்ந்துக் கொண்டார்.


 மாதொருபாகனால் பெருமாள் முருகனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம். அதனால், அவர் சந்தித்த உளச் சிக்கல்கள் விவரித்துவிட முடியாதவை. அதை நான் விவரிக்கவும் விரும்பவில்லை. எழுத்தாளர்கள் இன்னமும் நசுக்கப்படுவது இந்த உலகின் சாபக்கேடு.

“போரிலிருந்து சோளத்தட்டு உருவிக் கட்டிக்கொண்டு வந்து போட்ட கயிறு முதுகில் அழுத்தியது. மேலே பார்த்தான். பூவரசங் கிளைகள் வானில் விரிந்து பரவியிருந்தன.”




.

The Compound Effect - (Tamil)



#1. உடனடியாக 30 கோடி ரூபாய்
#2. தினமும் இரட்டிப்பாகும் 1 ரூபாய்

“இரண்டில் எதாவது ஒன்றைக் கேள்” என கடவுள் உங்கள் முன் தோன்றி, உங்களின் ஒரு மாத செலவுக்காக வரம் கொடுத்தால் நீங்கள் எதை கேட்பீர்கள்?. தேர்வு செய்துவிட்டீர்கள் என்றால் உங்களின் பதிலை, உங்கள் மிகச்சிறந்த மூளையின் எதாவதொரு பகுதியில் பத்திரமாக பதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக சில விசயங்களை பேசுவோம்.

முயல், ஆமை கதையைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான்தான் அந்த ஆமை. எனக்கு போதிய நேரத்தை மட்டும் கொடுங்கள். யாரை வேண்டுமானலும் எதை வேண்டுமானலும் என்னிடமுள்ள, நான் வளர்த்துக் கொண்ட நேர்மறையான பழக்கவழக்கங்களைப் பயன்படுத்தி வென்றுக் காட்டுகிறேன். இந்த உலகிலேயே அதிக நிலைப்புத் தன்மைக் (Consistency) கொண்டவன் நான்தான் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் “The Compound Effect” என்ற புத்தகத்தின் எழுத்தாளர் டேரன் ஹார்டி (Darren Hardy) .

“சிறு சிறு புத்திசாலித்தனமான தேர்வுகள் + நிலைப்புத் தன்மையோடு தொடர்தல் + காலம் = மிகப்பெரிய மாற்றம்” இதுவே இந்த புத்தகத்தின் அடிநாதம். சிறு சிறு புத்திசாலித்தனமான தேர்வுகளிலிருந்து, மிகப்பெரிய வெகுமதிகளை வென்றெடுப்பது எப்படி? என்பதற்கான வழியினைச் சொல்கிறது.

1 ரூபாய், 30 கோடி ரூபாய் பிரச்சனைக்கு வருவோம். நீங்கள் 30 கோடி ரூபாயைத் தேர்ந்தெடுத்து இருந்தால், நீங்கள் அறிவாளி. அந்தப் பணம் உங்களுக்குச் சொந்தம். அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் 31 நாட்களுக்கு, அதாவது ஒரு மாதத்திற்கு செலவு செய்யலாம், அது உங்களின் விருப்பம்.

ஆனால், நீங்கள் 1 ரூபாயைத் தேர்ந்தெடுத்து இருந்தால், அந்த 30 கோடி உங்களுக்கு சொந்தமில்லை. கிட்டத்தட்ட 108 கோடி ரூபாய், 31-வது நாளின் முடிவில் சொந்தம். அதிர்ச்சியடைய வேண்டாம், எப்படி என்றுப் பார்ப்போம். நீங்கள் தேர்வு செய்த 1 ரூபாய், தினமும் இரட்டிப்பாகிக் கொண்டேயிருக்கும், ஆமாம்தானே..?!.

1-வது நாள் = 1 ரூபாய்
2-வது நாள் = (1+1) = 2 ரூபாய்
3-வது நாள் = (2+2) = 4 ரூபாய்
4-வது நாள் = (4+4) = 8 ரூபாய்
5-வது நாள் = (8+8) = 16 ரூபாய்
10-வது நாள் = (256+256) = 1,024 ரூபாய்
15-வது நாள் = (8196+8196) = 16,384 ரூபாய்
20-வது நாள் = (262144+262144) = 524,288 ரூபாய்
25-வது நாள் = (8388608+8388608) = 16,777,216 ரூபாய்
30-வது நாள் = (268435456+268435456) = 536,870,912 ரூபாய்
31-வது நாள் = (536870912+536870912) = 1,073,741,824 ரூபாய்

31-வது நாளின் முடிவில் 107 கோடியே 37 இலட்சத்து 41 ஆயிரத்து 824 ரூபாய் உங்களுக்குச் சொந்தம். இதன்மூலமாக டேரன் ஹார்டி நமக்கு சொல்ல வருவது என்னவெனில், நம் சக்திக்கு மீறிய பெரியப் பெரிய தேர்வுகள் அல்லது முடிவுகள் எடுப்பதற்க்குப் பதிலாக, நம்மால் மிகவும் எளிதாக, தொடர்ந்து செய்கிற மாதிரியான சிறு சிறு புத்திசாலித்தனமான தேர்வுகளைச் செய்யுங்கள் என்கிறார். நம் எல்லோரிடமும் அந்த 1 ரூபாய் இருக்கிறது. அதை நாம்தான் 107.38 கோடிகளாக மாற்ற வேண்டும். மாற்றுவோம், தொடர்ந்து மாற்றத்தை நோக்கி பயணிப்போம்.

“Small, Smart Choices + Consistency + Time = Radical Difference”

இங்கு நாம் பேசியது இந்தப் புத்தகத்தின் சில பக்கங்கள் மட்டுமே. முழுமையாக படிக்க எண்ணுகிறவர்களுக்காக இப்புத்தகத்தின் மின்னூல் சுட்டி இங்கே பகிரப்படுகிறது.
Web link: