கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கலைக்கப்படாத மௌனம்

காதைத்
திருகிப் பார்த்தேன்
காலில்
விழுந்துப் பார்த்தேன்
எதற்கும்
வாயைத் திறக்கவில்லை
இருந்தும்
நான் விடுவதாயில்லை.

சதியில்
நாடகமாடியும் பார்த்தேன்
சுதியில்
நாட்டியமாடியும் பார்த்தேன்
இதற்கும்
மனம் திறக்கவில்லை
இப்போதும்
நான் விடுவதாயில்லை.

கதிரவனை
காவலுக்கு அழைத்தேன்
கம்பனை
நடுமைக்கு அழைத்தேன்
நீதிக்கும்
நெஞ்சம் திறக்கவில்லை
இனியும்
நான் போரிடுவதாயில்லை.

ஏக்கத்தில்
சோர்ந்துப் போனேன்
ஏமாற்றத்தில்
இடிந்துப் போனேன்.

ஆறுதலுக்கு
வாயைத் திறந்தது
செவிகளில்
ஏதோ சொன்னது.

"எழுதப்படும் 
மௌனத்தை விட
கலைக்கப்படாத
மௌனமே அழகு."

அழகியலின் நீட்சி

வானுக்கு நிலா
நிலவுக்குக் கறை
கறைக்குக் கரிசனை
கரிசனைக்குக் காதல்
காதலுக்குக் காமம்
காமத்துக்கு இன்பம்
இன்பத்துக்கு இயற்கை
இயற்கைக்குக் காடு
காட்டிற்குக் குன்று
குன்றுக்குப் பாறை
பாறைக்குக் கூழாங்கல்
கூழாங்கல்லுக்கு மண்
மண்ணுக்கு மரம்
மரத்துக்கு மலர்
மலருக்குப் பனித்துளி
பனித்துளிக்குச் சூரியன்
சூரியனுக்குக் கதிர்
கதிருக்குத் தாமரை
தாமரைக்குத் தேன்
தேனுக்குத் தென்றல்
தென்றலுக்கு வாசம்
வாசத்துக்குப் பெண்
பெண்ணுக்கு முகம்
முகத்துக்குப் பரு

இவை யெல்லாம்
ஆகச்சிறந்த அழகியலின் நீட்சி.



வியர்வை வாசம்


பூக்களென்றால்
அவ்வளவு பிடித்தம்

காரணமென்று
பெரிதாக எதுவுமில்லை

நிலமெங்கும்
பூக்களின் சிரிப்புதான்

கடவுளின்
ஆகச்சிறந்த படைப்பு
பூக்கள்தான் என்பான்

மகளுக்கும்
தந்தைக்குமான பந்தம்
அவனுக்கும் பூக்களுக்கும்

சமயங்களில்
அவன் பூக்களோடு
ஆனந்தமாய் பேசுவான்

பூக்களும்
தலையசைத்து இவனோடு
மகிழ்ச்சியாய் கொஞ்சும்

சில கூட்டம்
இவனை பித்தனென
கேலியாக சிரிக்கும்

சில கூட்டம்
இவனை அறிஞனென
ஆச்சரியத்தில் பூரிக்கும்

அன்றைக்கும்
அவனும் பூக்களும்
ஏதேதோ பேசினார்கள்

இவ்வளவு
ஆனந்தமானப் பேச்சை
இதுவரை கண்டதில்லை

பேச்சின்
ஏதோவொரு நொடியில்
இதயம் அடங்கியது

மறுநாள்
அவனுக்கு மாலையிட
பூக்களைப் பறித்தார்கள்

அதிலேதோ
ஒருவித வாசம்
புதிதாய் கூடியிருந்தது

அழுகையோடு
பூக்களை முகர்ந்தாள்
அவனின் அழகுமகள்

அத்தனையிலும்
தன் தந்தையின்
வியர்வை வாசம்.

கவிஞனின் காதல்

அமைதிசூழ்
அடர் காரிருள்.

மெல்லியதாய்
மெழுகின் வெளிச்சம்.

எதிரெதிரே
இவர்கள் இருவரும்.

ஏன்
என்னைக் காதலிக்கிறாய்?
அவள் கேட்டாள்.

காதலிக்க
காரணம் வேண்டுமாயென்ன?
இவன் சொன்னான்.

"இருந்தால்,
நன்றாக இருக்குமே"
என்றாள் அவள்.

"இல்லாவிட்டாலும்,
நன்றாகத்தானே இருக்கிறது!"
என்றான் இவன்.

காரணமின்றி
எதுவும் நிகழ்வதில்லையே!
அவள் சிரித்தாள்.

காரணத்தோடு
காதல் நிகழ்வதில்லையே!
இவன் சிரித்தான்.

நான்தான்
காதலிக்கவில்லையே,
பிறகேன்?

நான்தான்
காதலிக்கிறேனே,
அதுபோதாதா?

இருமுனை
ஈர்ப்புதானே காதல்?

ஆமாம்,
அதில் மறுப்பேது?

நீயென்னை
ஈர்க்கவே இல்லையே?

நீயென்னை
ஈர்க்காமல் இல்லவேயில்லையே!

கடைசிவரை
கடுகளவுக் காதலும்
தரவே மாட்டேன்.

கடலளவு
கவிதை தருகிறாயே
அதுவே போதும்.

உன்னை
திருத்தவே முடியாது.

திருந்துவதற்கு
காதல் பிழையாயென்ன?

(சிறு அமைதி)

அவள்
மெல்லமாய் சிரித்தாள்.

இவன்
கள்ளமாய் பார்த்தான்.

தண்டனையாய்
காதல் சிறையிட்டது.