விழு, எழு, வெல் - Rejection Therapy


பள்ளிப் பருவத்தில் தனக்கு நேர்ந்த மோசமான நிராகரிப்பின் மூலமாக கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து, தனது பேச்சைத் துவங்குகிறார் ஜியா ஜியாங் (Jia Jiang). இந்த மாதிரியான நிராகரிப்பு தனக்கு மீண்டும் எப்போதும் நேர்ந்துவிடக் கூடாது என எண்ணுகிறார். சில ஆண்டுகளுக்கு பிறகு, பெய்ஜிங்கில் பில்கேட்ஸின் (Bill Gates) அற்புதமான சொற்பொழிவினைக் கேட்கிறார் ஜியா. அன்று இரவு, தனது குடும்பத்திற்கு கடிதமொன்றை எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், “25 வயதில் நான் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கியிருப்பேன். அந்த நிறுவனமானது, பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தை விலைக்கு வாங்கும்என குறிப்பிடுகிறார்.

ஜியா ஜியாங் சிறுவயதில் எழுதிய கடிதம்

இந்தக் கடிதம் எழுதிய 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு செல்கிறார். அங்கே தனது இலட்சியமான தொழிலதிபராவதற்கான பயணத்தை துவங்குகிறார். 14 ஆண்டுகள் அப்படியே காணாமல் போய், வயது முப்பதைத் தொட்டு நிற்கிறது. ஆனால், அவ்ர் ஆசைப்பட்ட மாதியாக எந்த நிறுவனத்தையும் துவங்காமல், சந்தை மேலாளர் (Marketing Manager) பணிப்புரிந்துக் கொண்டிருக்கிறார். தீடீரென, தான் என்னவாக வேண்டுமென நினைத்தோம், இன்றைக்கு நாம் என்ன செய்துக் கொண்டிருக்கிறோம் என யோசிக்கிறார். வேலையைத் தூக்கிப் போட்டுவிட்டு, 30-வது வயதில் தனது நிறுவனத்தைத் துவங்குகிறார். அதில் பல்வேறு தோல்விகளும், நிராகரிப்புகளும் ஏற்படுகிறது. மனமுடைந்து மிகவும் வேதனை அடைகிறார்.

Jia Jiang

“இந்த சின்ன விசயத்திற்கே வருத்தப்பட்டால் எப்படி? இதைவிட பெரிய நிறுவனத்தை மீண்டும் துவங்குவோம்“ என தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறார். ஆனால், மீண்டும் தோற்றுவிட்டால் என்ன செய்வதென பயம் கொள்கிறார். தோல்வி பயத்திலிருந்து வெளிவருவதற்காக, பல்வேறு தன்னம்பிக்கை, உளவியல் சார்ந்தக் கட்டுரைகளைப் படிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், தோற்றுவிடுவோமோ என்கிற பயம் போகவேயில்லை. அந்தச் சமயத்தில், Rejection Therapy என்கிற வலைத்தளத்தை கண்டறிகிறார். “30 நாட்களுக்கு தோல்வியை எதிர்ப்பார்த்துத் தோற்றுப் போங்கள், அப்படித் தோற்றுப்போகும்போது உங்களின் தோல்வி பயம் உங்களைவிட்டு போகும்“ என யோசனைக் கிடைக்கிறது. அந்த யோசனையை 100 நாட்களுக்கு முயற்சி செய்ய முடிவெடுக்கிறார்.

 

முதல் நாள். தனக்கு அறிமுகமில்லாத நபரிடமிருந்து 100 ரூபாய் கடன் வாங்க வேண்டுமென முடிவெடுக்கிறார். ஒரு நபரைத் தேர்வு செய்து, 100 ரூபாய் கடன் கேட்க அருகில் செல்கிறார். அப்போது, ஜியாவுக்கு வேர்த்துக் கொட்டி, சட்டையெல்லாம் நனைகிறது. இதயம் படபடவென துடிக்கிறது. எப்படியோ தைரியம் வர வைத்துக் கொண்டு, 100 ரூபாயைக் கேட்டுவிடுகிறார். அந்த நபரோ, “இல்லை, ஏன்? எனக் கேட்கிறார். ஜியாவோ மனச்சங்கடத்துக்கு உள்ளாகி, அந்த நபரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு ஓடிவந்து விடுகிறார். நடந்த நிகழ்வையெல்லாம் காணொளியாக பதிவு செய்கிறார். அன்று இரவு, அந்தக் காணொளியைப் போட்டுப் பார்க்கிறார். அதில், அவர் 100 ரூபாய் கேட்கும்போது எவ்வளவு பயந்து இருக்கிறார் என்பதை உணர்கிறார்.


இரண்டாவது நாள். இன்று, நாம் எந்தவிதத்திலும் பயந்து ஓடிவிடக் கூடதென முடிவெடுக்கிறார். ஒரு உணவு விடுதிக்கு செல்கிறார். அங்கே பர்கர் (Burger) சாப்பிட்டு முடித்துவிட்டு, கூடுதலாக ஒரு பர்கரைக் கேட்கிறார். அதற்கு, முடியாதென நிராகரிக்கிறார்கள். எனக்கு உங்களுடைய பர்கர் மிகவும் பிடித்துள்ளது, கூடுதலாக ஒரு பர்கரைக் கொடுத்தால், உங்களுக்கு புண்ணியமாகப் போகுமென ஜியா வேண்டுகிறார். ஆனாலும், உணவு விடுதியாளர்கள் முடியாதென நிராகரிக்கிறார்கள்.


மூன்றாவது நாள். ஒலிம்பிக் குறியீட்டைப் போல, ஐந்து டோநட்டை (Doughnut) ஒன்றாக சேர்த்து, தனக்கு செய்து தருமாறு கேட்கிறார் ஜியா. அதற்கு, அந்தக் கடையின் உரிமையாளர், சரியெனச் சொல்லி அவர் கேட்டதைப் போலவே செய்துக் கொடுக்கிறார். மிகவும் மகிழ்ச்சியடைகிறார் ஜியா.


அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமாவை சந்திக்க முயற்சிக்கிறார், ஒருவர் வீட்டின் பின்புறத்தில் கால்பந்து விளையாட அனுமதிக் கேட்கிறார், ஒரு தங்கும் விடுதியில் தனக்காக ஒரு அறையினை இலவசமாகக் கேட்கிறார், அறிமுகமில்லாத நபரைத் தன்னோடு ஓட்டப் பந்தயத்தில் கலந்துக் கொள்ளுமாறு அழைக்கிறார், கல்லூரியில் வகுப்பெடுக்க அனுமதி கேட்கிறார், விமானத்தில் அறிவிப்பாளராக இருக்க வேண்டுகிறார், தனது கட்டுரையை ஒரு மாத இதழில் வெளியிட வேண்டுகிறார், தனி விமானத்தில் பறக்க அனுமதிக் கேட்கிறார், தன்னுடைய தோற்றத்திற்கு மதிப்பெண் வழ்ங்குமாறுக் கேட்கிறார், தெருவில் ஒரு சொற்பொழிவாற்றுகிறார், அறிமுகமில்லாதவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள அழைக்கிறார், அருங்காட்சியகத்தில் வழிகாட்டியாக இருக்கிறார், பள்ளியில் ஒரு நாள் பாடத்தை கவனிக்க அனுமதிக் கேட்கிறார். இப்படியாக, தனது 100 நாட்களையும் எதாவது ஒன்றை வித்தியாசமாக செய்து தோல்வியடைய வேண்டுமென முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்.

100-வது நாளின் இறுதியில், தனக்குள் இருக்கும் புதிய மனிதனைக் கண்டறிகிறார். தோல்வி பயம் சிறிதுமில்லாமல் ஆனந்தமாய் உணர்கிறார். Rejection Therapy வலைத்தளத்தை வாங்கி, தனது 100-நாள் அனுபவங்களை பகிர்கிறார். தான் நினைத்ததைப் போல, WUJU என்கிற பெயரில் தனது நிறுவனத்தை மீண்டும் துவங்குகிறார். மிகப்பெரும் வெற்றியடைந்து, உலகளவில் பிரபலம் அடைகிறார். கூடவே, அவரது அனுபவங்களை புத்தகமாக வெளியிடுகிறார். அந்தப் புத்தகத்தை அறிமுகமில்லாத நபரை, தனக்காக இரண்டு நிமிடம் படிக்குமாறு வேண்டி, Rejection Therapy-யை மகிழ்ச்சியோடு மீண்டும் தொடர்கிறார் ஜியா.
ஜியா ஜியாங் எழுதிய புத்தகம்

தோற்றுவிடுவோமோ என்கிற பயம் உங்களுக்கும் இருக்கிறதா? நீங்களும் இந்த Rejection Therapy-யை 100 நாட்களுக்கு முயற்சித்துப் பாருங்கள். நேரமில்லாதவர்கள் இந்தக் காணொளியையும், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தையும் பாருங்கள்.

  
தோல்வியையும் நிராகரிப்புகளையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். தோல்வியின் அனுபவத்திலிருந்து, உங்களை மேலும் மேலும் செம்மையாக வளப்படுத்திக் கொள்ளுங்கள். எங்கே நாம் கீழே வீழ்ந்துவிடுவோ என்கிற பயமில்லாமல் ஓடுங்கள். கீழே இடறி வீழ்ந்தாலும் பரவாயில்லை, மீண்டும் எழுந்து அதைவிட வேகமாய் ஓடுங்கள். அப்போதுதான் உங்களின் இலக்கை அடைய முடியும். குழந்தையாய் இருக்கிறபோது நாம் விழுவோமென தெரிந்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்போம், விழுவோம், மீண்டும் எழுவோம், மீண்டும் நிற்போம். அந்த தன்னம்பிக்கையுள்ள குழந்தை எங்கேயென உங்களுக்குள் தேடுங்கள். உங்களுக்குள் இருக்கிற புதிய மனிதனை கண்டிப்பாக கண்டடைவீர்கள். அந்த புதிய மனிதன், வெற்றிகளை இழுத்து வந்து, உங்கள் கைகளில் கொடுப்பான். வெற்றி உங்களின் பக்கம். உலகம் வெற்றியின் பக்கம்.Rejection Therapy வலைத்தளச் சுட்டி: