கதையில்லா கதை

கதையில்லா கதையினுள்ளே கதாயுதம்போல் கனக்கும் காலனின் கனரகத்தில் புதுரகமாய் துளைத்திடும் துப்பாக்கிக்கெல்லாம் அப்பால் அதியுயரத்தில் நிற்கும் ஆயுதமொன்றில் கயவர்களாய் கருதி, கருவையும் சிதைத்துப் புதைத்தப் பொழுதில் உடைந்த மனத்தின் கனம் தரும் கவலைகள் கணப்பொழுதேனும் காணாமல் கரைந்திட வேண்டி, விதைகூட மிச்சமில்லாமல் வதைத்தக் கதையினை கதை கதையாய் கதைக்கிறேன், கணநேரமிருந்தால் என் கனமிறங்கிட காது கொடுங்கள்.

கரிசல் மண்ணுக்கிங்கே கருமை நிறமில்லை; விரிசலிலும் செங்குருதி விரிந்துக் கிடப்பதாலினி நிறம் சிவப்பென்றால் மறுப்பதற்கில்லை. கூரையில்லா வானத்தின் கீழிருக்கும் தரையினில் தட்டுப்பட புற்களும் மிச்சமில்லை; பொய்கையின் தாகம் தீர்த்திட தலைக்குமேல் தூரத்திலும் மேகங்களில்லை. கொஞ்சும் குயில்கள் அமர்ந்திசைத்திட நீண்டு வளர்ந்த பசுமையான மரங்களுமில்லை; இசைக்கு இசைவாய் அசைந்தாடிட துணைக்கு தோகைமயில்களுமில்லை. தலைமைத் தாங்கிய தலைவனின் உடலுக்கு தலையுமில்லை; தாங்கிப்பிடித்த தொண்டர்களின் தலைகளுக்கும் உடல்களில்லை. நீல வானத்தின் நீலத்தின் நீளம் நிலத்திலுமில்லை; நீண்டு நிரம்பி வழியும் கடலிலும் சிவப்பைத் தாண்டி சிறப்பாயெதுவுமில்லை. தோட்டாக்கள் துளைத்ததில் தோட்டங்களுமில்லை; துளிர்த்து மீண்டும் பூத்திட புகை நடுவே பூக்களுமில்லை. சுற்றும் பூமியில் சுற்றிப் பார்ப்பினும், சுற்றதிலும் தூர முற்றத்திலும் தலைக் கொண்ட உடல்களேதுமில்லை; தவறியிருப்பினும் தவழ்ந்து நகர்ந்திடக்கூட உடலுக்கு உறுதுணையாய் உயிரில்லை. முடிவினில் முடிவாய் மொத்தமாய் சுருங்கக்கூறின், ஐந்திணையில் பாலை மட்டும் எட்டும் தூரம்வரை கிட்டும்; அங்கே தனியாய் நான் மட்டும் கத்தும் சத்தம் காதுகளுக்கு எட்டும்.

தும்மலளவு சத்தமிட்டாலும் கம்மலால் கன்னத்தில் முத்தமிட்டு காயமாற்றிடும் இல்லாளை பிரிந்து, இன்னல் பல கண்டு, காலனின் கைப்பிடியின் கடைநொடியில் கனக்கும் நெஞ்சத்தோடு நானிங்கே நசுங்கிக் அழுகிறேன். ஒவ்வொரு துளியாய் உதிரம் வெளியேறியதில் உடலில் உருப்படியாய் எதுவும் இல்லாவிடினும், உருளும்படியாய்கூட ஒன்றுமில்லை. இருந்தும், வெற்றுடல்விட்டு அற்றுப்போகாமல் அடம்பிடிப்பதிலேனோ ஆனந்தமிந்த ஆன்மாவுக்கு. பெண்ணில் தொடங்கி மண்ணில் முடியுமிந்த மாயை வாழ்வுதனில் மாந்தர்க்கு மாந்தர் பிரிவினைப் பேசி, நல்லுறவினை முறித்து, கையிலாயுதமேந்தி கர்வமாய் முறைத்து வாழ்வதேனென்றால் கட்டாயம் கடவுளிடம்கூட பதில் கிட்டாது. கடைசி நொடிவரை மனிதாபிமானத்தின் குரல் நம் காதுகளுக்கு எட்டாது.

கதையில்லா கதையினுள்ளே கதையற்று கதை கதையாய் கதைத்தாலும் சதை சதையாய் சாய்ந்திட்ட சகவுயிரொன்றாவது சாவிலிருந்து மீண்டிட வழியேதுமுண்டா? அன்பைத் தாண்டி அழகானதேதுமுண்டா? விளைநிலத்தில் வீசியெறிந்த விதைகளைப்போல விரவிக் கிடக்கும் விலையில்லா மனித தலைகளினிடையே உயிர் பிரியும் கடைநொடியில் எனக்குள்ளும் பிறந்தது மனிதத்தின் வெளிச்சம். வெளிச்சத்தின் நீட்சியில் மீண்டும் நான் அன்புகொண்ட மனிதனாய் மீண்டதில், நெஞ்சத்தில் லேசாய் பூக்கிறது நிம்மதி. கடைநொடி கடந்தது.