கழுகு, குழந்தை & கெவின் கார்ட்டர்


1994-ஆம் ஆண்டு. கெவின் கார்ட்டருக்கு (Kevin Carter) புகைப்படத்துறையின் மிகவும் உயரிய விருதான புலிட்சர் விருது (Pulitzer Prize) வழங்கப்படுகிறது. விருது வாங்கிய நான்கு மாதங்களில் தற்கொலைச் செய்து இறந்துப் போகிறார்.

தெற்கு சூடான் (South Sudan), ஆப்பிரிக்கக் கண்டம். 1955-ம் ஆண்டில் தொடங்கிய உள்நாட்டுப் போரின் காரணமாக, மிகப்பெரும் பஞ்சம் நிலவுகிறது. பசியின் காரணமாக ஒரு நாளைக்கு 10 முதல் 13 குழந்தைகள் வரை இறந்துக் கொண்டிருந்தனர். 1993-ல் Operation Lifeline Sudan என்கிற அமைப்பானது, இங்கு நிலவுகிற பஞ்சத்தை உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்தி, அதன்மூலமாக உதவிகள் பெற எண்ணுகிறது. இதற்காக புகைப்படக் கலைஞரான கெவின் கார்ட்டர் மற்றும் அவரது நண்பரையும் இந்தச் சம்பவங்களைப் பதிவுச் செய்ய அழைக்கிறது. மிகுந்த புத்துணர்வோடும், ஆற்றலோடும் கெவின் கார்ட்டர் சம்மதிக்கிறார். இதுதான் அவரின் மரணத்திற்கான தொடக்கப்புள்ளியோ என்னவோ தெரியவில்லை.

Left: Jaoa Silva                                     Right: Kevin Carter

விமானத்தின் மூலமாக தெற்கு சூடானில் அயோத் (Ayod) என்கிற இடத்தை அடைகின்றனர். பல உணவு நிவாரணக் குழுக்கள் மூலமாக அங்கிருக்கும் மக்களுக்கு, உணவு வழங்கப்படுகிறது. பசியால் நீண்ட நாட்களாய் சோர்ந்திருந்த மக்கள், உணவுகளைப் பெறுவதில் தள்ளு முள்ளு ஏற்படுகிறது. இந்நிகழ்வுகளை கெவினும் அவரது நண்பரும் வெவ்வேறு முகாம்களில் புகைப்படக் கருவி மூலமாக பதிவுச் செய்துக் கொண்டிருந்தனர். மேலும், பசியால் மற்றும் போரினால் இறந்த குழந்தைகளையும், மக்களையும் பற்றி உலகிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

Kavin Carter in Spot

Famine Human at South Sudan

அப்போது, உணவு முகாமிற்கு உணவு வாங்கச் செல்லும் அவசரத்தில் வழியிலேயே ஒரு குழந்தையை தெரியாமல் விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். கெவின் கார்ட்டர் எதேச்சையாக அந்தக் குழந்தையைப் பார்க்கிறார். அந்தக் குழந்தை நடக்குமளவிற்குக்கூட தெம்பில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துக் கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து, ஒரு இராட்சத கழுகு அங்கு வருகிறது. அந்தக் குழந்தையை எந்த நேரத்தில் வேண்டுமானலும் தனக்கு இரையாக்கிக் கொள்ளத் தயாராக இருந்தது. இந்த நிகழ்வை, அதன் தன்மை மாறாமல் புகைப்படம் மூலமாக பதிவுச் செய்கிறார் கெவின் கார்ட்டர்.

The Vulture & The Little Girl

 26 மார்ச் 1993. இந்தப் புகைப்படமானது தி நியூயார்க் டைம்ஸ் (The New York Times) நாளிதழில் வெளியாகிறது. ஒட்டுமொத்த உலகமும் அதிர்ந்துப் போகிறது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாளிதழ்களிலும், மாத இதழ்களிலும் இதே புகைப்படம் வெளியாகிறது. கெவின் கார்ட்டரின் புகைப்படத்தின் மூலமாக, தெற்கு சூடானில் மக்கள் அனுபவிக்கும் துயரத்தின் தீவிரத்தை உலக மக்கள் உணர்ந்து, பல்வேறு உதவிகளை செய்தனர். கூடவே, அந்தக் குழந்தையின் நிலை என்ன ஆனது என்ற கேள்வியையும் முன்வைத்தனர். அந்தக் கேள்விக்கு பதில், கெவின் கார்ட்டருக்கும் தெரியாது. ஏனென்றால், அந்த நிகழ்வினைப் புகைப்படமாக பதிவுச்செய்து முடித்ததும், அந்த இடத்திலிருந்த கழுகினை தூரமாக ஓட்டிவிட்டு கெவின் கார்ட்டர் வந்துவிடுகிறார். அதன் பிறகு, அந்தக் குழந்தைக்கு என்ன ஆனதென யாருக்கும் தெரியாது.

1994-ல் இந்தப் புகைப்படத்திற்காக புலிட்சர் விருது கெவின் கார்ட்டருக்கு வழங்கப்படுகிறது. கூடவே, மக்களின் விமர்சனங்களும் குவிகிறது. தி செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் டைம்ஸ் (The St.Petersburg Times) என்கிற நாளிதழானது, "The man adjusting his lens to take just the right frame of her suffering might just as well be a predator, another vulture on the scene (குழந்தையைக் காப்பாற்றாமல் அவள் படும் துயரத்தை சரியான கோணத்தில் படமெடுப்பதற்காக, தன் புகைப்படக் கருவியின் வில்லையைச் சரிசெய்துக் கொண்டிருந்த கெவின் கார்ட்டரும் ஒரு கொலையாளியாகத்தான் இருக்க முடியும். காட்சியின் பின்னால் இருக்கிற இன்னொரு கழுகு அவர்)" என விமர்சிக்கிறது. இது மாதிரியான பல்வேறு விமர்சனங்கள், கெவின் கார்ட்டரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.

24 ஜூலை 1994. சிறுவயதில் ஆனந்தமாய் விளையாடிய பார்க்மோர் (Parkmore) என்கிற இடத்தில், தனது மகிழுந்தை (Car) நிறுத்துகிறார். ஒரு இரப்பர் குழாயினைக் கையிலெடுத்து, அதன் ஒரு முனையை காரின் புகை வெளியேறும் குழாயுடன் (Exhaust Pipe) இணைத்தார். மற்றொரு முனையை மகிழுந்தின் உள்ளயிருக்கும்படி செய்து, மகிழுந்தின் அனைத்து கதவுகளையும் இறுக்கமாக மூடிக்கொண்டார். புகையிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்ஸைடு மூலமாக மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. சிறிது நேரத்தில், தன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் இறப்பதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தின் வரிகள்,

“I’m really, really sorry. The pain of life overrides the joy to the point that joy does not exist… depressed… without phone… money for rent… money for child support… money for debts… money…!!! I’m haunted by the vivid memories of killings & corpses & anger & pain… of starving or wounded children, of trigger-happy madmen, often police, of killer executioners… I have gone to join Ken if I’m that lucky.”

The Great Kevin Carter

2011-ஆம் ஆண்டு. உலகிற்கு ஒரு உண்மை அம்பலமாகிறது. அந்தக் குழந்தையானது ஒரு பெண் குழந்தை அல்ல, அது மிகவும் பசியால் வாடிய ஆண் குழந்தை எனவும், அந்தக் குழந்தையானது ஐக்கிய நாடுகளின் உணவு முகாமின் மூலமாக நல்ல முறையில் பராமரிக்கப்பட்டது எனவும், அந்தக் குழந்தையின் அப்பா உலகுக்குச் சொல்கிறார். அந்தக் குழந்தை காய்ச்சலின் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக அதாவது 2007-ஆம் ஆண்டு இறந்துப் போனது எனவும் தெரிவித்தார்.

இந்தச் செய்தி முன்னமே தெரிந்திருந்தால், கெவின் கார்ட்டரை நாம் இழந்திருக்க மாட்டோம். ஒரு நாட்டின் மக்கள் அனுபவிக்கும் துயரத்தினை, தன் புகைப்படத்தின் மூலமாக உலகின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவரின் வாழ்க்கை இப்படி முடிந்தது பெரும் துயரமே. கெவின் கார்ட்டர் மண்ணில் மறைந்தாலும் அவரின் பெயரினை வரலாற்றின் ஏடுகள் என்றைக்கும் மறவாமல் தாங்கி நிற்கும்.

References: