அறிவியல் கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கொசுவும் நம் சாதி

“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றார் நம் பாரதி. நான் அவரோடு சமகாலத்தில் வாழ்ந்திருந்தால், கொசுவையும் சேர்த்துக் கொள்ளச் சொல்லியிருப்பேன். இந்த மண்ணில் பிறந்தவர்களில் சிலரைத் தவிர்த்து, பலரால் அதிகமாக வெறுக்கப்படுகிற உயிரிகளில், கண்டிப்பாக கொசுவுக்குத்தான் முதலிடமாக இருக்குமென நினைக்கிறேன். ஆனால், எனக்கு மட்டும் ஏனோ அதன்மீது தீராத காதல். நான் காதலிக்கிற அழகிய பெண்களிடம் என் காதலை எப்போதுமே கவிதை மூலமாக வெளிப்படுத்துவது வழக்கம். அதே வழக்கத்தில், அந்த அழகிய கொசுவுக்கும் ஒரு கவிதை எழுதி நீட்டினேன். (கவிதையை படிக்க, இங்கே தொடவும்).

என்ன புரிந்ததோ தெரியவில்லை. இந்தக் கவிதையைப் படித்தப் பின்புதான், கொசுக்களெல்லாம் அதிகமாக என்னையும், நான் தங்கியிருக்கிற அறையையும் சூழ்ந்துக் கொள்கிறது. அடிக்கடி வலிக்குமளவிற்கு ஊசிக்குழலை என்னுள் செலுத்துகிறது. என் காதலிலும், கவிதையிலும் மயங்கிப்போய் முத்தமிடுகிறதோ, இல்லை “இதெல்லாம் ஒரு கவிதையா?” என கடுப்பாகிப்போய் கடிக்கிறதோ என்று தெரியவில்லை. குழப்பம் நீடித்தாலும், அது என்னை முத்தமிடுவதாகவே எண்ணிக் கொண்டேன். அதனால், உண்டான ஒரு ஐக்கூ...

முத்தமிட்டே
கொல்லும்
அழகிய
இராட்சசி

பலருக்கு கொசுவானது, பொருட்டேயில்லாத ஒரு மிகவும் நுண்ணிய உயிரினமாக தெரியலாம். அதைக் கொல்வதும் பாவமேயில்லை என்றுகூட தோன்றலாம். ஆனால், என் கண்களுக்கோ வேறுவிதமாக தெரிந்தது. சிறியதோ பெரியதோ, நல்லதோ கெட்டதோ எல்லாமே உயிர்தானே.
    
“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது“ என்கிற முதுமொழிக்கு சிறந்தவொரு உதாரணம் தரவேண்டுமானால், கொசுவைத் தாண்டி வேறெதுவும் இருக்க முடியாது. ஏனென்றால், கொசுவானது டைனோசர் காலத்திற்கு முந்தையக் காலத்திலிருந்தே வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். காலத்தால் டைனோசரை அழிக்க முடிந்ததே தவிர, இந்த மிகவும் நுண்ணிய பொருட்டேயில்லாத கொசுவை ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதிலிருந்தே கொசுவின் பலத்தை நாம் தெளிவுற தெரிந்துக் கொள்ளலாம்.

“இரத்தம் உறிஞ்சி வாழ்ந்தவன்
இரத்தம் கக்கியே சாவான்“

     என்கிற வரிகளை யாரோ கொசுவின்மீது எழுதியதைப் படித்திருக்கிறேன். உண்மையில், கொசுக்களுக்கு எல்லா நேரங்களிலும், மனிதர்கள், விலங்குகள், பறவைகளின் இரத்தம் தேவைப்படுவதில்லை. இதிலும் குறிப்பாக, ஆண் கொசுக்களெல்லாம் சுத்த சைவம். அவை தாவரங்களின் சாறு மற்றும் பூக்களிலுள்ள தேன் ஆகியவைகளை உணவாக உட்கொள்ளும். கருமுட்டையை உருவாக்க புரதம் தேவையென்பதால், அந்த நேரங்களில் மட்டும் பெண் கொசுக்கள் நம் இரத்தத்தை உறிஞ்சி, அதிலிருக்கும் புரதங்களைக் கொண்டு கருமுட்டையை உருவாக்கும். மற்ற நேரங்களில், பெண் கொசுக்களுக்கும் நம் இரத்தம் தேவைப்படுவதில்லை. கருவுறாத காலங்களில் பெண் கொசுக்களும் சைவம்தான்.
    
     என்னதான் நியாயம் கற்பித்தாலும், பல நோய்கள் பரவுவதற்கு கொசுக்கள் காரணமாக இருப்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். என்னுடைய பணிவான வேண்டுகோள் என்னவெனில், கொசுக்களை கொல்வதற்குப் பதிலாக, அதிகமாக உருவாகாமல் தடுக்கலாமே என்பதுதான். ஏனெனில், எல்லா அறநூல்களும் உயிரைக் கொல்வது பாவமென்றே நமக்கு போதித்திருக்கிறது. அப்படியிருக்க, கொசுவைக் கொல்வது மட்டும் எந்தவிதத்தில் தர்மமாகும்?

கொசுவை கொன்றாலும், உருவாகாமல் தடுத்தாலும், கொசுவினத்திற்கு நாம் தீங்குதானே செய்கிறோம் என்கிற கேள்வி உங்களுக்குள் எழலாம். குழந்தை உருவாகாமல் தடுப்பதற்கும், உருவாகிய பின்னர் கொல்வதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டல்லவா?. அதே வித்தியாசங்கள்தான் கொசுக்களைக் கொல்வதிலும், உருவாகாமல் தடுப்பதிலும் உள்ளது.

உங்கள் நண்பரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் இரத்தம் தருவதைப்போல, கொசுக்களின் இனத்தைக் காப்பாற்றுவதற்காக இரத்தம் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். இயற்கையின் சமநிலைக்கு, இந்தப் பேரண்டத்திலுள்ள ஒவ்வொரு உயிரியுமே அவசியம்தான். ஆதலால், கொசுக்களை கொல்வதற்குப் பதிலாக கட்டுப்படுத்துங்கள். தேவையில்லாத இடங்களில் நீரினைத் தேங்கவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


குறிப்பு:
கொசுவைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிந்துக் கொள்ள, இங்கே தொடவும்.

காதல்: முன்னொரு காலத்தில்

முதன்முதலில் உயிர்களின் தொடக்கம், கடலிலிருந்தே தொடங்கியது என்கிறார்கள் படித்த மாமேதைகள். என்னைப் போன்ற சாமானியனைக் கேட்டால், காதலிலிருந்தே தொடங்கியது என்பேன். எப்படி என்றொரு வினா உங்களுக்குள் எழலாம். அதற்கான விளக்கங்களைத் தருவதே என்னுடைய ஆகச்சிறந்த கடமைகளில் தலையாய ஒன்று. எல்லோரும் என்னுடைய காலச் சக்கரத்தில் ஏறிக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், நாம் காதலைப் பற்றிப் புரிந்துக் கொள்ளவதற்கு, சில கோடி ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லப் போகிறோம். கண்மணி..! கிளம்பலாம்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால். காலைப் பொழுது, நேரம் சரியாக எட்டு மணி, 5,6,7,8,...நொடிகள். இந்தாங்க, எல்லோரும் இந்த தொழில்நுட்பமிக்க கண்ணாடியை மாட்டிக் கொள்ளுங்கள். அங்கே தெரிவதுதான் குவார்க் (Quark). குவார்க் என்பது இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிக நுண்ணிய அடிப்படைப் பொருள். குவார்க்குகளுக்கிடையில் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக வேதிப்பிணைப்பு உண்டாகி, துகளாக (Particle) மாற்றமடைந்தது. மாற்றமடைந்த, இந்த துகள்கள்தான் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் என்பவைகள். இந்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் போன்ற துகள்களுக்கிடையில் உண்டான ஈர்ப்பின் காரணமாக, அணு (Atom) என்கிற ஒரு கூட்டமைப்பு உருவானது. அணுக்களுக்களுக்கிடையில் உண்டான  ஈர்ப்பின் காரணமாக, மூலக்கூறு (Molecule) என்கிற வேதிச் சேர்ம்ம் உண்டானது. மூலக்கூறுகளுக்கிடையில் உண்டான ஈர்ப்பின் காரணமாக, ஒரு செல் உயிரி (Cell) உண்டானது. ஒரு செல் உயிரிகளுக்கிடையில் உண்டான ஈர்ப்பின் காரணமாக, பல செல் உயிரிகளான தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் இன்னபிற உயிர்களெல்லாம் உண்டானது.

குவார்க் → துகள் → அணு → மூலக்கூறு → ஒரு செல் உயிரி → பல செல் உயிரி


ஒரு செல் உயிரி என்கிற நிலையை அடையவே பல கோடி ஆண்டுகள் ஆனதாம். இந்த ஒரு செல் உயிரி என்கிற நிலையிலிருந்து நம்மைப் போன்ற பல செல் உயிரி என்கிற நிலை உண்டாக இன்னும் சில கோடி ஆண்டுகள் தேவைப்பட்டதாம். உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், எல்லா மூலக்கூறுகளும் ஒரு செல் உயிரியாக மாறுமா என. கண்டிப்பாக மாறாது; ஏனென்றால், சரியான சூழல் இருந்தால் மட்டுமே ஒரு நிலையில் இருந்து, இன்னொரு நிலைக்கு மாற்றமடையும். எல்லா கரித்துண்டுகளும் வைரமாகிவிடாதல்லவா, அதைப் போலத்தான்.

காலச் சக்கரத்தில் மீண்டும் முன்னோக்கிப் பயணம். இன்றைய நாள், இந்த நேரம். இப்படியாக குவார்க்கிலிருந்து குரங்கு வரை (மன்னிக்கவும்) மனிதன் வரை, அனைத்திற்கும் இடையில் ஈர்ப்பு என்கிற கண்டுக்கொள்ள முடியாத விசை அல்லது சக்தி இன்னமும் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. மனிதனைத் தாண்டி இன்னொரு உயிரி உண்டானாலும், அதற்கிடையிலும் கண்டிப்பாக இந்த ஈர்ப்பு தொடர்ந்து நிலைக்குமென்பதில் எந்தவித ஐயமும் எனக்கில்லை.

குவார்க்கிலிருந்து குரங்கு வரை (இப்போது, சரியாகத்தான் சொல்கிறேன்), இந்த ஈர்ப்பின் பெயர் “காதல்” என்றெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆனால், பின்னாளில் வந்த மேம்பட்ட குரங்கு இனமான மனிதர்கள்தான் அதற்கு “காதல்” என்று பெயர் வைத்தனர். அந்தக் காதல்தான் குவார்க்கிலிருந்து, நம்மை மேம்பட்ட உயிரினமாக மாற்றியிருக்கிறது. ஒரு குவார்க்கிற்கும் இன்னொரு குவார்க்கிற்கும் இடையில் காதல் மலராமல் போயிருந்தால், நாம் இன்று உருவாகியே இருக்க மாட்டோம்.

இப்போது சொல்லுங்கள். உயிர்கள் தோன்றியது கடலிலா? அல்லது காதலிலா?. கொஞ்சம் சத்தமாக சொல்லுங்கள், சரியாக கேட்கவில்லை. ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான், உயிர்கள் தோன்றியது “காதல் கடலில்தான்”.

பின்குறிப்பு:
முரட்டுச் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருந்த நம்முடைய The Great-Great Grandpa குவார்க்கிற்கு, இந்த 90's, 2K Kids-களைப்போல எந்தவித பந்தாவும் பண்ணாமல், காதலை ஏற்றுக் கொண்டு வாழ்க்கை தந்த The Great-Great Grandma குவார்க்கிற்கு கோடான கோடி நன்றிகள். காலமுள்ளவரை, காதல் வாழ்க!

நிலவின் மறுபக்க இரகசியம் !


“நிலவின் முதுகும்
பெண்ணின் மனதும்
என்றும் இரகசியம்தானா?”
பெண்ணின் மனது, உலகத்தில் முதல் உயிர் தோன்றிய காலத்திலிருந்து, கடைசி உயிர் மறைந்துப் போகும் காலம்வரை என்றுமே இரகசியம்தான். அந்த இரகசியத்தை அறிய முற்பட்டால், தொழில்நுட்பமும் தோற்றுப் போகும். அதில் யாருக்குமே எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையவே கிடையாது. கடவுளைக்கூட என்றைக்காவது கண்டுவிடலாம். ஆனால், பெண்ணின் மனதை எவராலும் கண்டுவிட முடியாதென்பதற்கு தினந்தோறும் மனைவியிடம் அடிவாங்கும் கணவன்மார்களே சாட்சி. அதெப்படியோ போகட்டும், நாம் நிலவின் முதுகை ஆராய்வோம்.

ஒரு சுற்றுவட்டம் என்பது 360 டிகிரி ஆகும். நிலவானது ஒருமுறை பூமியை சுற்றிவர ஒரு நாளைக்கு சராசரியாக 13.177 டிகிரி கோணத்தை கடக்கிறது. அப்படியானால், முழுமையாக ஒரு சுற்றுவட்டத்தைச் சுற்றிவர 27.32 நாட்கள் (360/13.177=27.320) ஆகிறது. நிலவானது தன்னைத் தானே சுற்றிக்கொள்ள ஒரு நாளைக்கு 13.33 டிகிரி கோணத்தை கடக்கிறது. அப்படியானால், தன்னைத் தானே ஒருமுறைச் சுற்றிக் கொள்ள 27 நாட்கள் (360/13.33=27) ஆகிறது. நிலவானது பூமியை ஒருமுறை சுற்றிவர ஆகிற நாட்களும், தன்னைத் தானே சுற்றிக்கொள்ள ஆகிற நாட்களும் ஏறத்தாழ இரண்டுமே சமம். இதுதான் நிலவின் மறுபக்கத்தை பூமியிலிருந்து பார்க்க முடியாததற்கு காரணமாகும். 

சாதாரணமாக ஒரு பொருள் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளாமல் பூமியைச் சுற்றிவருகிறதென்றால், அதன் எல்லாப் பக்கங்களையும் நம்மால் காண முடியும். ஆனால், தன்னைத்தானேச் சுற்றிக் கொண்டும் பூமியையும் சுற்றிவருகிறதென்றால், அதன் ஒரு பகுதியை மட்டுமே நம்மால் காண முடியும். ஏனெனில், தன்னைத் தானே சுற்றிக் கொள்ளாதபோது, முழுமையாக பூமியின் கட்டுப்பாட்டில் இயங்கும். தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும்போது பூமிக்கு எதிர்வினையாக செயல்பட்டு, பூமியின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும். 



     1) இடது : நிலவானது தன்னைத் தானேச் சுற்றிக் கொண்டு, பூமியைச் சுற்றிவரும்போது 
     2) வலது : நிலவானது தன்னைத் தானேச் சுற்றாமல், பூமியை மட்டும் சுற்றிவரும்போது

பூமி, தன்னுடைய ஈர்ப்புவிசையால் நிலவை அனைத்து பக்கங்களிலும் சுழற்ற முயலுகிறபோது, நிலவின் ஈர்ப்புவிசையானது எதிர்வினையாக செயல்படுகிறது. எனவே, நிலவானது தன் பழைய நிலையை மீண்டும் மீண்டும் தக்கவைக்க தொடர்ச்சியாக முயன்றுக் கொண்டேயிருக்கும். அதனால், நம்மால் நிலவின் 59 சதவீத பகுதியை மட்டுமே பார்க்க முடியும். மீதமுள்ள 41 சதவீத பகுதியை பூமியிலிருந்து நம்மால் பார்க்க முடியாது. இன்னும் கொஞ்சம் தெளிவான விளக்கத்திற்கு கீழேயுள்ள இந்த காணொளியைப் பாருங்கள்.