சிலந்தி

அறை முழுவதும் குப்பை. அங்குமிங்கும் காற்றில் மிதக்கும் ஒட்டடை. அலமாரி முழுவதும் காகிதக் கூலங்கள். கூடவே, அருவருக்கத்தக்க துர்நாற்றம். கடைசியாய் எப்போது அறையைச் சுத்தம் செய்தேனென நினைவில் இல்லை. இருக்கிற வேலைக்கெல்லாம் இடைவேளைக் கொடுத்துவிட்டு, துர்நாற்றம் தாங்க முடியாமல் சுத்தம் செய்துவிட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டேன். 

ஆரஞ்சு நிறத்தில் நான்கைந்தடி நீளம் கொண்ட துடைப்பத்தை எடுத்து, அறை முழுவதும் தோரணமாய் தொங்கும் ஒட்டடைகளை கீழேத் தள்ளி, மூன்று நான்கு முறைப் பெருக்கியப் பின்னர்தான் எதோ ஓரளவிற்கு சுத்தமானது. ஆனால், இன்னமும் துர்நாற்றத்தின் வாசம் மட்டும் என் அறையைவிட்டு வெளியேற மாட்டேனென அடம் பிடித்தது. பின்னர், ஊதுவத்தியை கொளுத்தி வைத்துவிட்டு, மொட்டை மாடிக்குச் சென்று சற்று அலுப்பு நீங்க அமர்ந்தேன். கொஞ்ச நேரத்தில், அந்திவானமானது சூரியக்கதிர்களை மலையின் பின்புறம் மறைத்து வைக்க ஆயத்தமானது. நானும் கீழிறங்கி வந்து குளித்து முடித்துவிட்டு, இரவு உணவை உண்ணச் சென்றேன்.

சாப்பிட்டதும் சிறிது நேரம் நண்பர்களோடு அளவளாவி விட்டு, அறைக்கு உறங்கச் சென்றேன். பாதி உறக்கத்தில் உடலில் எதோ ஊர்வதை உணர்ந்தேன். மின்விளக்கின் பொத்தானை அழுத்தி, வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தேன். அது கருகருவென இருக்கும் சிலந்தியென அடையாளம் கண்டுக் கொண்டேன். ஒரு ஓரமாய் தள்ளிவிட்டு, மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தேன். மீண்டும், அதே சிலந்தி உடம்பின்மீது ஊர்ந்தது. என்னடா இது, பெரும் தொல்லையாக இருக்கிறதேயென நினைப்பதற்கு முன்னமே, வேறொரு தகவலை எனக்குள் கடத்தியது குடும்பத்தை மொத்தமாய் இழந்துவிட்ட அந்தச் சிலந்தி. அடுத்த நொடியில், என் மனம் முழுவதும் குப்பையானது. 

குப்பையோடே இருந்திருக்கலாம் நான்;
குடும்பத்தோடு இருந்திருக்கும் சிலந்தி.

4 கருத்துகள்:

  1. பெயரில்லா11:38 AM, ஏப்ரல் 01, 2019

    அறையைச் சுத்தம் செய்ய நினைத்தவனின் மனம் முழுக்க குப்பையான நிகழ்வை கதையாக பின்னியவிதம் அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா3:18 PM, ஏப்ரல் 02, 2019

    Nice..👌 Last two lines superb..

    பதிலளிநீக்கு