மற்றவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மற்றவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கர்ப்ப காலம்

“மென்தென்றல் காற்றின் மோகமுத்த மோதலில் சிணுங்கும் தென்னங்கீற்றின் வழியே வழிகிறது பால் நிலா. காரிருள் திட்டுக்கள் கலந்திட்ட கருமை வானத்தின் வெள்ளைப் பற்களைப்போல மின்னுகிறது விண்மீன் திரள்கள். நிலவின் வெளிச்சத்தில் பனித்துகள்கள் ஒளித்துகள்களாக சிந்துகிறப் பொழுதில் அத்தனை ரம்மியம். இன்னிசைக் குரலில் இயற்கை என்னுடன் பேசுவதைப் போன்றதொரு உணர்வு. அது என் காதுகளுக்குள் நுழைந்து, இல்லாத மூளையின் மூலையில் மென்தூண்டலால் படிமங்களை உயிர்ப்பிக்கச் செய்து, விரல்களின் கட்டியணைப்பில் சிக்கித்தவிக்கும் சில்வர் நிற மெட்டாலிக் பேனாவின் வழியே கிறுக்கல்களாக வழிந்துக் கொண்டிருக்கிறது“.

இப்படியாக பாரதியின் கற்பனையை திருட்டுத்தனமாய் களவாடி, வர்ணனையுடன் எழுதுவதற்கு இம்மியளவுகூட எந்தவித பொருத்தமுமில்லாத எதிர்மாறான சூழலில் எழுதிக் கொண்டிருக்கிறேன். அப்படி என்னதான் எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? இத்தனை நாட்களாக ஏன் எழுதவில்லையென்று எழுதிக் கொண்டிருக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் இத்தனை நாட்களாய் நான் எழுதாமலில்லை. தினந்தோறும் நிறைய எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நிறைய எழுதினாலும் நிறைவாய் எது எழுதுகிறேனோ, அதை மட்டுமே உங்களின் அற்புத(பூத) கண்களுக்கு விருந்தாக்குவதுதான் என் வழக்கம். ஏனென்றால், “சமைக்கும் பூதத்தின் கண்களே ருசிக்காத எழுத்துக்களை வேறெந்த பூதத்தின் கண்களும் ருசிக்காது“ என்பதில் பெருத்த நிலைப்பாடுடையவன் நான். நிறைய எழுதினாலும் நிறைவாய் எழுதமுடியாதது ஏனென என்னை நோக்கி நானே ஏவிய கேள்வி தோட்டாக்களுக்கெல்லாம் பதில் தராமல் பல காலமாய் மௌனமாயிருந்த மனம், இன்றுதான் பதிலை தந்தது. அதன் நீட்சியின் நிழலில்தான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.

கருமுட்டையை நோக்கிப் புறப்படுகிற பல கோடி உயிரணுக்களில் ஏதோவொன்று மட்டும் கருப்பைக்குள் கருவாகி, கை கால் முளைத்த கனியமுத குழந்தையாகி, நிறைமாதத்தில் நீந்திவந்து பிரசவிப்பதைப்போல என் மூளையை நோக்கிப் படையெடுக்கிற ஆயிரமாயிரம் சிந்தனையணுவில் ஏதோவொன்றுதான் மூளைப்பைக்குள் கருவாகி, காட்சியும் கற்பனையும் மெருகேறி, நிறைவான படைப்பாய் வெளிவருகிறது. மற்றவையெல்லாம் நிறைமாதம் நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றன.

தற்கால அறிவியல் மேதாவிகள் என்கிற அடிமுட்டாள்கள், கார்மேகத்தில் கலவையான இரசாயனம் கொட்டி, அவசரத்தில் அதன் அடிவயிற்றை அறுத்தெடுத்து அமிலமழையைப் பெறுவதைப்போல, கருவிலிருக்கிற படைப்பின் காலம் முதிரும்முன்னே அதன் கழுத்தைப் பிடித்திழுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. கர்ப்ப காலம் கனிகிறபோது கண்டிப்பாய் அது அடைமழையாக இல்லாவிடினும் ஆலங்கட்டியாகவாவது பொழியுமென நம்புகிறேன். அதுவரை உங்களோடு நானும் அமுதமழையில் நனைய ஆவலோடு காத்திருக்கிறேன்.

கதையில்லா கதை

கதையில்லா கதையினுள்ளே கதாயுதம்போல் கனக்கும் காலனின் கனரகத்தில் புதுரகமாய் துளைத்திடும் துப்பாக்கிக்கெல்லாம் அப்பால் அதியுயரத்தில் நிற்கும் ஆயுதமொன்றில் கயவர்களாய் கருதி, கருவையும் சிதைத்துப் புதைத்தப் பொழுதில் உடைந்த மனத்தின் கனம் தரும் கவலைகள் கணப்பொழுதேனும் காணாமல் கரைந்திட வேண்டி, விதைகூட மிச்சமில்லாமல் வதைத்தக் கதையினை கதை கதையாய் கதைக்கிறேன், கணநேரமிருந்தால் என் கனமிறங்கிட காது கொடுங்கள்.

கரிசல் மண்ணுக்கிங்கே கருமை நிறமில்லை; விரிசலிலும் செங்குருதி விரிந்துக் கிடப்பதாலினி நிறம் சிவப்பென்றால் மறுப்பதற்கில்லை. கூரையில்லா வானத்தின் கீழிருக்கும் தரையினில் தட்டுப்பட புற்களும் மிச்சமில்லை; பொய்கையின் தாகம் தீர்த்திட தலைக்குமேல் தூரத்திலும் மேகங்களில்லை. கொஞ்சும் குயில்கள் அமர்ந்திசைத்திட நீண்டு வளர்ந்த பசுமையான மரங்களுமில்லை; இசைக்கு இசைவாய் அசைந்தாடிட துணைக்கு தோகைமயில்களுமில்லை. தலைமைத் தாங்கிய தலைவனின் உடலுக்கு தலையுமில்லை; தாங்கிப்பிடித்த தொண்டர்களின் தலைகளுக்கும் உடல்களில்லை. நீல வானத்தின் நீலத்தின் நீளம் நிலத்திலுமில்லை; நீண்டு நிரம்பி வழியும் கடலிலும் சிவப்பைத் தாண்டி சிறப்பாயெதுவுமில்லை. தோட்டாக்கள் துளைத்ததில் தோட்டங்களுமில்லை; துளிர்த்து மீண்டும் பூத்திட புகை நடுவே பூக்களுமில்லை. சுற்றும் பூமியில் சுற்றிப் பார்ப்பினும், சுற்றதிலும் தூர முற்றத்திலும் தலைக் கொண்ட உடல்களேதுமில்லை; தவறியிருப்பினும் தவழ்ந்து நகர்ந்திடக்கூட உடலுக்கு உறுதுணையாய் உயிரில்லை. முடிவினில் முடிவாய் மொத்தமாய் சுருங்கக்கூறின், ஐந்திணையில் பாலை மட்டும் எட்டும் தூரம்வரை கிட்டும்; அங்கே தனியாய் நான் மட்டும் கத்தும் சத்தம் காதுகளுக்கு எட்டும்.

தும்மலளவு சத்தமிட்டாலும் கம்மலால் கன்னத்தில் முத்தமிட்டு காயமாற்றிடும் இல்லாளை பிரிந்து, இன்னல் பல கண்டு, காலனின் கைப்பிடியின் கடைநொடியில் கனக்கும் நெஞ்சத்தோடு நானிங்கே நசுங்கிக் அழுகிறேன். ஒவ்வொரு துளியாய் உதிரம் வெளியேறியதில் உடலில் உருப்படியாய் எதுவும் இல்லாவிடினும், உருளும்படியாய்கூட ஒன்றுமில்லை. இருந்தும், வெற்றுடல்விட்டு அற்றுப்போகாமல் அடம்பிடிப்பதிலேனோ ஆனந்தமிந்த ஆன்மாவுக்கு. பெண்ணில் தொடங்கி மண்ணில் முடியுமிந்த மாயை வாழ்வுதனில் மாந்தர்க்கு மாந்தர் பிரிவினைப் பேசி, நல்லுறவினை முறித்து, கையிலாயுதமேந்தி கர்வமாய் முறைத்து வாழ்வதேனென்றால் கட்டாயம் கடவுளிடம்கூட பதில் கிட்டாது. கடைசி நொடிவரை மனிதாபிமானத்தின் குரல் நம் காதுகளுக்கு எட்டாது.

கதையில்லா கதையினுள்ளே கதையற்று கதை கதையாய் கதைத்தாலும் சதை சதையாய் சாய்ந்திட்ட சகவுயிரொன்றாவது சாவிலிருந்து மீண்டிட வழியேதுமுண்டா? அன்பைத் தாண்டி அழகானதேதுமுண்டா? விளைநிலத்தில் வீசியெறிந்த விதைகளைப்போல விரவிக் கிடக்கும் விலையில்லா மனித தலைகளினிடையே உயிர் பிரியும் கடைநொடியில் எனக்குள்ளும் பிறந்தது மனிதத்தின் வெளிச்சம். வெளிச்சத்தின் நீட்சியில் மீண்டும் நான் அன்புகொண்ட மனிதனாய் மீண்டதில், நெஞ்சத்தில் லேசாய் பூக்கிறது நிம்மதி. கடைநொடி கடந்தது.

வெளிச்சம்

இருள் தின்னும் இரவுகள் தருகிற தனிமையின் சமபக்கத்தில் நீண்டுயர்ந்த நெடுங்கதவுக்குப் பின்னே நித்தமும் ஒளியில்லாமல் ஒளிந்துக் கிடக்கிற நான், உண்மையில் நான்தானா? இல்லை உள்ளிருப்பவன் வேறா? என்றெழுகிற கேள்விகளுக்கு, விளக்கின் வெளிச்சத்தைத் திருடி, வெளிச்ச சாயம் பூசி, ஒளியூட்ட எண்ணினேன். ஆனால், விளக்கிடமே வெளிச்சமில்லாதபோது, நான் எதைத் திருடுவது? அப்படியே வெளிச்சமிருந்தாலும் வெளிச்சத்தில் யார் திருடுவார்?. தேடிப்போனேன் நெடுந்தூரம்; தெரிந்ததொரு வெளிச்ச விளக்கு. வேறுவழியும் இல்லாமல், வெட்கமும் இல்லாமல், வெளிச்சத்திலேயே வெளிச்ச விளக்கிடமிருந்து வெளிச்சத்தைத் திருடினேன். சட்டென வெளிச்ச விளக்கு இருளானது; இருளன் நான் வெளிச்சமானேன். ஒளியில்லாமல் ஒளிந்துக் கிடந்தவன் வாழ்க்கை, ஒளிமயமானது.

வெளிச்ச விளக்கின் வெளிச்சத்தைத் திருடியதன் குற்றவுணர்வு, மிருகமாய் மாறியென்னைக் கொல்லத் துவங்கியது. திருடியவேளையில், எனைப் பார்த்து வெளிச்ச விளக்கு உதிர்த்த சிரிப்புமோர் புதிராகவே இருந்தது. என்னடா இது? வெளிச்சம் வந்தாலும் விந்தையாகவே இருக்கிறதே வாழ்க்கை என்றோசித்த வேளையில், மூளையின் முடுக்குகளில் வெளிச்சம் விருட்சமாய் பரவியது. தீக்குச்சியின் வெளிச்சத்தைத் திருடித்தானே தீபமேற்ற முடியுமென்றது அது.

கலங்காதே வெளிச்ச விளக்கே! உன் கருவை, என் மூளைப்பைக்குள் விதைத்திருக்கிறேன். வெளிவரும் வேளை வந்ததும், திருடிய வெளிச்சத்தை தீபமாக பிரசவிப்பேன். தந்தையாக நீயிரு; தாயாக நானிருக்கிறேன்; அறிவைத் தேடும் கண்களுக்கு, அறிவொளியாக இருக்கட்டும் நம் கவிப்பிள்ளைகள்.



மழை நீராட்டு விழா

சன்னல் வழியே, வரவேற்பு மத்தளம் கொட்டும் இசை. கூடவே, சன்னலைத் தட்டும் சத்தமும் கேட்டது. யாராக இருக்குமென சன்னலைத் திறந்துப் பார்க்க, என் கண்ணத்தை முத்தமிட்டபடி “விழாவிற்கு வாருங்கள்“ என்று அழைத்தது மென்தென்றல். அந்த நொடியில் யாரோ புகைப்படமெடுக்க, யார் நீயென கேட்டேன். “மின்னல்“ என பதில் தந்தது.

“என்ன இங்கு கொண்டாட்டம்?“ என மின்னலிடம் கேட்டேன்.

அதற்கு மின்னலோ, “மழை நீராட்டு விழா“ என்றது.

“யாருக்கு?“ என்றேன் மீண்டும் நான்.

“அதோ.. புதிதாய் பச்சைப் பசும் இலைகளைச் சூடி, அழகுத் ததும்பப் பூத்திருக்கும் இந்த மரங்களுக்குத்தான்“ என்றது மின்னல்.

“என்னை ஏன் அழைத்தீர்கள்?“ என்றேன்.

“மரமாட்டும் நிக்காத“ என காதில் விழுந்தது. அதனால், ஏதோவொரு மரம் அறைக்குள் சிக்கித் தவிக்கிறது போலும்; அதையும் விடுவித்து, மழை நீராட்டு விழாவில் கலந்ததுக் கொள்ளச் செய்வோமென சன்னலைத் தட்டினோமென்றது மின்னல்.

“ஓ.. சரி நான் கிளம்புகிறேன்“ என்றேன் நான்.

அதற்கு மின்னலோ, “வந்ததுதான் வந்துவிட்டாய்; இப்போதாவது கொஞ்சம் குளித்துவிட்டுப் போ” என்றது மின்னல்.

     அதுவும் சரிதானென மரங்களோடு மரங்களாக நீண்ட நாட்களுக்குப்பின், நானும் மழை நீராட்டு விழாவில் நீராடினேன். மழையோடு சேர்ந்து, மரத்திலிருந்து சில துளிகள் என் மேல் விழுந்தது. ஒவ்வொரு துளியும் ஒருவிதமாக இருந்தது. முதலில், அதுவும் மழைத்துளிகள்தான் என்றிருந்தேன். ஆனால், போகப் போக வேறுவிதமாக என் மேல் விழுவதாய் தோன்றியது. அது மரங்கள், என் மேல் உமிழ்கிற எச்சிலைப் போல உணர்ந்தேன். வேக வேகமாய் ஓடிவந்து, கதவோடு என்னையும் சேர்த்து அடைத்துக் கொண்டேன்.

நான், என் கற்பனைகளுக்கு விலங்கிட்டுவிட்டு, நிழலிலிருந்து நிஜத்திற்கு வந்தேன். இப்போது, நிகழ்வெல்லாம் தலைக்கீழாகிப் போயிருந்தது. மத்தளவோசையானது இடியோசையாக கேட்டது. மென்தென்றல், வன்தென்றலாய் மாறிக் கண்ணத்தில் அறைந்தது. அதே நொடியில், மின்னலும் ஒளிவாளைக் கண்ணருகே வீசியது. இப்படியாக சில கணங்கள் கடந்தப் பின்பு, அது எனக்கு மழை நீராட்டு விழாவாக தோன்றவில்லை. அதற்கு மாறாக, மானுடர்களை எதிர்த்து நடக்கிற, “மழை போராட்ட விழா“வாக மாறியிருந்தது. என்னுடலின் ஒவ்வொரு செல்லிலும் குற்றவுணர்ச்சியின் வாசம் பரவியது.

கற்பு என்கிற மானத்தின் விலை


கோபத்தினை யார்மீது கொட்டுவதென்றுக்கூட புரியாதவொரு மர்மச் சூழலில் மாட்டிக் கிடக்கிறேன். குற்றம் யார்மீதென சரியாக தெரிந்தால்தானே கோபம் கொள்ள முடியும். யாரைக் குற்றம் சொல்வது? ஒரு குரூர அரக்கனை நல்லவனென நினைத்து, இனி வாழப்போகும் காலம் இவனோடுதானென நம்பிச் சென்றவளையா? அல்லது, நம்பி வந்தவளுக்கு பாதுகாப்புத் தராமல், அவளை பங்குப்போட்டு வெறியாட்டமாடிய காமவெறியனையா?.

ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழைய முடியுமென ஒரு சாராரும், வேலியே பயிரை மேயலாமாவென மற்றொரு சாராரும், கூச்சலிட்டுக் கொண்டிருக்க நான் யார்மீது கோபம் கொள்வேன்? நானே சொந்தமாய் யார்மீதாவது கோபம் கொள்ளலாமென யோசிக்கிறப் பொழுதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது; கடந்த தேர்தலின்போது பெரும்பகுதியை விலைக்கு விற்றுவிட்ட என் மூளையைப் பற்றி. மூளையிருந்தால்தானே சுயமாக சிந்திப்பேன்; அதுவே விலைப்போனது என்கிறபோது செம்மறியாட்டுக் கூட்டமாய் வாழ்வதைத் தாண்டி, வேறென்ன வழியிருக்கிறது?.

எல்லோரையும் போலவே நானும் வீட்டிலிருந்தபடியே சமூக வலைத்தளங்களில் சமூகத்தில் நடக்கிற அவலங்களுக்கு எதிராக போராடினேன். இத்தனை காலமாய் சமூக வளைத்தளங்களில் போராட்டம் நடத்தியும் நீதி கிடைக்கவேயில்லையே என்று மீதமிருந்த கொஞ்ச மூளையை கசக்கிப் பிழிந்தப்போதுதான் தோன்றியது, இது இல்லுமினாட்டிகளின் சதியாக இருக்குமோ என்று. அமெரிக்க ஏகாதியப்பத்தியமே ஒழிகவென, அதற்கும் ஒரு போராட்டம்.

யார் எப்படிப் போனால் எனக்கென்ன? பக்கத்துவீட்டுக் கூரைதானே எரிகிறது; என் வீட்டுக் கூரை இன்னமும் நல்லபடியாகத்தான் இருக்கிறது. யாருக்கு என்னவானாலும், என்னுடைய அதிகபட்ச பங்களிப்பு என் சமூக வளைத்தளப் பக்கத்தில் வீரமுழக்கத்தோடு ஒரு பதிவினை இட்டுவிட்டு, எத்தனை லைக்ஸ் வருகிறதென வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே. யாரை ஏமாற்றிக் கொள்ள இந்த சமூக வளைத்தளப் போராட்டங்கள்? நானும் சமூகப் பொறுப்போடு இருக்கிறேனென மற்றவர்களின் முன்புக் காட்டிக் கொள்வதற்கா? இல்லை, என்னை நானே ஏமாற்றிக் கொள்வதற்கா?. யாருக்குத் தெரியும், என் மூளையின் பெரும்பகுதியைத்தான் எப்போதே விற்றுவிட்டேனே. இருக்கிற கொஞ்ச மூளையையும் நான் ஏன் கசக்கிப் பிழிந்து யோசிக்க வேண்டுமென் விட்டுவிட்டேன். ஏனென்றால், மூளையைக் கசக்காமல் பெண்களைக் கசக்குவதுதானே நம் இயல்பு.

சமூகத்தில் நடக்கிற அவலங்களையெல்லாம் சரிச்செய்ய வேண்டிய அரசாங்கமே அடிப்படை உறுப்பினர் என்கிற தகுதி நீக்கம் செய்துவிட்டு அமைதியாக இருக்கிறபோது, என்னால் மட்டும் என்ன செய்துவிட முடியும்?. இப்படிச் சொல்வதற்கு நாம் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும். சரியான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்து, சரியான அரசாங்கத்தை உருவாக்காமல் போனது நம் குற்றம்தானே. அப்படியானால், சமூகத்தில் நடக்கிற அத்தனை அவலங்களிலும் நமக்கும் பங்கிருக்கிறது.

கடந்த காலங்களை கண்டிப்பாக நம்மால் மாற்ற முடியாது. இனிவரும் காலங்களிலாவது நல்ல அரசாங்கத்தினை உருவாக்குவோமென உறுதிக் கொள்வோம். இத்தனை நடந்தப் பிறகும், அதிக பணம் கொடுக்கிற கட்சிக்குத்தான் உங்கள் வாக்கு என்றால், உங்கள் வீட்டுப் பெண்களின் மானத்திற்கு நீங்களே விலைப் பேசுவதற்குச் சமம்.