கற்பு என்கிற மானத்தின் விலை


கோபத்தினை யார்மீது கொட்டுவதென்றுக்கூட புரியாதவொரு மர்மச் சூழலில் மாட்டிக் கிடக்கிறேன். குற்றம் யார்மீதென சரியாக தெரிந்தால்தானே கோபம் கொள்ள முடியும். யாரைக் குற்றம் சொல்வது? ஒரு குரூர அரக்கனை நல்லவனென நினைத்து, இனி வாழப்போகும் காலம் இவனோடுதானென நம்பிச் சென்றவளையா? அல்லது, நம்பி வந்தவளுக்கு பாதுகாப்புத் தராமல், அவளை பங்குப்போட்டு வெறியாட்டமாடிய காமவெறியனையா?.

ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழைய முடியுமென ஒரு சாராரும், வேலியே பயிரை மேயலாமாவென மற்றொரு சாராரும், கூச்சலிட்டுக் கொண்டிருக்க நான் யார்மீது கோபம் கொள்வேன்? நானே சொந்தமாய் யார்மீதாவது கோபம் கொள்ளலாமென யோசிக்கிறப் பொழுதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது; கடந்த தேர்தலின்போது பெரும்பகுதியை விலைக்கு விற்றுவிட்ட என் மூளையைப் பற்றி. மூளையிருந்தால்தானே சுயமாக சிந்திப்பேன்; அதுவே விலைப்போனது என்கிறபோது செம்மறியாட்டுக் கூட்டமாய் வாழ்வதைத் தாண்டி, வேறென்ன வழியிருக்கிறது?.

எல்லோரையும் போலவே நானும் வீட்டிலிருந்தபடியே சமூக வலைத்தளங்களில் சமூகத்தில் நடக்கிற அவலங்களுக்கு எதிராக போராடினேன். இத்தனை காலமாய் சமூக வளைத்தளங்களில் போராட்டம் நடத்தியும் நீதி கிடைக்கவேயில்லையே என்று மீதமிருந்த கொஞ்ச மூளையை கசக்கிப் பிழிந்தப்போதுதான் தோன்றியது, இது இல்லுமினாட்டிகளின் சதியாக இருக்குமோ என்று. அமெரிக்க ஏகாதியப்பத்தியமே ஒழிகவென, அதற்கும் ஒரு போராட்டம்.

யார் எப்படிப் போனால் எனக்கென்ன? பக்கத்துவீட்டுக் கூரைதானே எரிகிறது; என் வீட்டுக் கூரை இன்னமும் நல்லபடியாகத்தான் இருக்கிறது. யாருக்கு என்னவானாலும், என்னுடைய அதிகபட்ச பங்களிப்பு என் சமூக வளைத்தளப் பக்கத்தில் வீரமுழக்கத்தோடு ஒரு பதிவினை இட்டுவிட்டு, எத்தனை லைக்ஸ் வருகிறதென வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே. யாரை ஏமாற்றிக் கொள்ள இந்த சமூக வளைத்தளப் போராட்டங்கள்? நானும் சமூகப் பொறுப்போடு இருக்கிறேனென மற்றவர்களின் முன்புக் காட்டிக் கொள்வதற்கா? இல்லை, என்னை நானே ஏமாற்றிக் கொள்வதற்கா?. யாருக்குத் தெரியும், என் மூளையின் பெரும்பகுதியைத்தான் எப்போதே விற்றுவிட்டேனே. இருக்கிற கொஞ்ச மூளையையும் நான் ஏன் கசக்கிப் பிழிந்து யோசிக்க வேண்டுமென் விட்டுவிட்டேன். ஏனென்றால், மூளையைக் கசக்காமல் பெண்களைக் கசக்குவதுதானே நம் இயல்பு.

சமூகத்தில் நடக்கிற அவலங்களையெல்லாம் சரிச்செய்ய வேண்டிய அரசாங்கமே அடிப்படை உறுப்பினர் என்கிற தகுதி நீக்கம் செய்துவிட்டு அமைதியாக இருக்கிறபோது, என்னால் மட்டும் என்ன செய்துவிட முடியும்?. இப்படிச் சொல்வதற்கு நாம் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும். சரியான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்து, சரியான அரசாங்கத்தை உருவாக்காமல் போனது நம் குற்றம்தானே. அப்படியானால், சமூகத்தில் நடக்கிற அத்தனை அவலங்களிலும் நமக்கும் பங்கிருக்கிறது.

கடந்த காலங்களை கண்டிப்பாக நம்மால் மாற்ற முடியாது. இனிவரும் காலங்களிலாவது நல்ல அரசாங்கத்தினை உருவாக்குவோமென உறுதிக் கொள்வோம். இத்தனை நடந்தப் பிறகும், அதிக பணம் கொடுக்கிற கட்சிக்குத்தான் உங்கள் வாக்கு என்றால், உங்கள் வீட்டுப் பெண்களின் மானத்திற்கு நீங்களே விலைப் பேசுவதற்குச் சமம்.


3 கருத்துகள்:

  1. சரியான அரசாங்கத்தை உருவாக்காமல் போனது நம் குற்றம்தானே. 👌😔👌

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா11:31 AM, மார்ச் 15, 2019

    "மனுநீதிச் சோழன் ஆண்ட தமிழகமும் வாழ்க வாழ்க !!"

    அனைத்து சாமானியனுக்கும் இருக்கிற கோபம்தான் உங்கள் பதிவு. மனுநீதி சோழன் ஆட்சிப் புரிந்திருந்தால், அந்தக் கொடூரமான நாய்களைத் தேரேற்றிக் கொன்று நீதியை நிலைநாட்டி இருப்பான்.

    பதிலளிநீக்கு
  3. Very good article, keep posting self discipline is the only solution.

    பதிலளிநீக்கு