கொரோனா: தனிமனிதனின் அலட்சியம்

கொரோனா என்கிற பெயரைக் கேட்டதுமே உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கம், தன் மக்களை எப்படியாவது கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள அல்லது மீட்டெடுக்க ஒவ்வொரு நொடியும் தன்னால் இயன்ற அளவுக்கு போராடிக் கொண்டிருக்கிறது. அதற்காக பல வழிமுறைகளையும் கையாண்டு கொண்டுமிருக்கிறது. அதுவெல்லாம் பலன் அளிக்குமா அளிக்காத என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஏனென்றால் எல்லாமே சோதனை முயற்சிகள்தான்.  இதில் அரசை எந்தவித குறையும் சொல்வதற்கில்லை; நான் குறை கூற போவதுமில்லை. அரசு எடுத்திருக்கிற சோதனை முயற்சிகள் பலனளிப்பதும் பலனளிக்காமல் நீர்த்துப்போவதும் நம் ஒவ்வொருவரையும் சார்ந்திருக்கிறது. நம்மால் இதனைக் கட்டுப்படுத்த எந்தவித சரியான யோசனையும் அரசுக்கு அளிக்க முடியாத நிலையில், அரசு என்ன சொல்கிறதோ அதை முடிந்தளவுக்கு சரியாக கடைப்பிடிப்பதே சரியான வழி என்றே நான் நினைக்கிறேன். அதைக் கேட்பதும், கேட்காமல் போவதும் அவரவரின் தனிப்பட்ட விருப்பம். அதில் எவரும் தலையிட முடியாது. ஆனால், ஒவ்வொரு தனிமனிதனின் அலட்சியமும் ஒட்டுமொத்த மனித சமூகத்தையுமே எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பாதித்து அழிக்கும் என்பதை நினைவூட்டுவதற்காக மட்டுமே இந்த பதிவு.

இயற்பியலின் கேயாஸ் பிரிவில் பட்டாம்பூச்சி விளைவு என்றொரு கோட்பாடு உண்டு. அது என்னவெனில், காற்று மண்டலத்தில் ஒரு பட்டாம்பூச்சியின் மெல்லிய சிறகசைப்பு ஏற்படுத்துகிற சிறிய அதிர்வானது கொஞ்சம் கொஞ்சமாக காலப்போக்கில் அதிகரித்து, பின்னாளில் பேரதிர்வாக மாறி ஒரு பெரும் புயலை உண்டாக்கும் என்பதே. நம்பும்படியாக இல்லையேயென உங்களுக்கு தோன்றலாம். ஒரு சிறிய பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு, பெரிய புயலை எப்படி உண்டாக்குமென கேலியும் பேசலாம். கீழே கொடுத்திருக்கிற சிறிய எடுத்துக் காட்டினை பாருங்கள். அது உங்கள் மனங்களில் பெரிய மாற்றத்தை உண்டாக்குமென நம்புகிறேன்.

(555)2 = 308025
(555)2.1 = 579449
(579449 – 308025) = 271424

இதில், 0.1 என்கிற மிகச்சிறிய எண்ணில் ஏற்படுகிற சிறிய மாற்றம், ஒட்டுமொத்த தொகையில் 271424 என்ற அளவிற்கான பெரிய மாற்றத்தை/தாக்கத்தை உண்டாக்குவதை கவனியுங்கள். இப்போது நாம் கொரோனா பிரச்சனைக்கு வருவோம். சீனாவின் ஏதோவொரு மூலையில் உண்டாகிப் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதும் பரவி, ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் உலுக்கிக் கொண்டிருப்பதை பட்டாம்பூச்சி விளைவோடு தொடர்புப்படுத்திப் பார்த்தால் உங்களுக்கே உண்மை நிலை என்ன என்பது புரியும். ஒரு சிறிய கிருமி உலகத்தையே உலுக்குமளவுக்கு தாக்கத்தை உண்டாக்க முடியுமென்றால், நம்முடைய தனிமனித அலட்சியத்தைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

யுதமெடுத்து ஒருவரை தாக்கி கொல்வது மட்டுமே கொலையல்ல; நம்மால் யாருக்காவது கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இறக்க நேர்ந்தால், அதுவும் கொலைதான். அந்தக் கொலையை செய்த நாமும் கொலைகாரர்கள்தான். இப்படி சொல்வது நகைச்சுவையாக தோன்றலாம். பரவாயில்லை, சிரியுங்கள். ஆனால், சிரித்து முடித்துவிட்டு இதற்கு பின்னால் இருக்கிற உண்மையை சற்றே ஆராயுங்கள். முன்னெச்சரிக்கைக்காக சொல்லப்படுகிற ஒவ்வொரு விசயங்களும் முதலில் நகைச்சுவையாக நினைத்து சிரிக்கப்பட்டவையே என்பதை வரலாற்றுப் பக்கங்கள் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இனிமேலும் தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்காமல் கண்டபடி வெளியில் சுற்றிக் கொண்டிருந்தால், முதலில் நீங்கள் கொலை செய்யப்போவது உங்கள் குடும்பத்தைதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கொலைக்கு தண்டனையாக கிடைக்கப்போவது உங்கள் தலைமுறையின் பேரழிவாக கூட இருக்கலாம்.

அரசாங்கம் நம்மை போர்முனையில் ஆயுதமேந்தி போரிட அழைக்கவில்லை; அமைதியாக வீட்டிலேயே இருக்கும்படிதான் கேட்கிறது. அதை முடிந்தளவுக்கு கடைப்பிடிக்க நாம் ஒவ்வொருவரும் முயல்வதுதான் புத்திசாலித்தனம். இன்று நீங்கள் வீட்டில் அடைபடாமல் வெளியில் சுற்றிக் கொண்டேயிருந்தால், இன்னும் சில நாட்களில் அனைத்து மனிதர்களும் இறந்துபோய், உலகமே சுடுகாடாய் மாறியிருக்கும். நீங்கள் மட்டும் எப்படியோ ஏதோவொரு வகையில் தப்பிப் பிழைத்துவிட்டால், பிணங்களுக்கு நடுவில் தன்னந்தனியாக சுடுகாட்டில்தான் வாழ வேண்டியிருக்கும் என்பதை நினைவூட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன். மேலும், அது நரகத்தைவிட மிகவும் மோசமானதாக, மிகவும் கொடுமையானதாக இருக்கும்.

நாம் ஒவ்வொருவரும் நாட்டைக் காக்க வேண்டுமென்று பொது நலமாக இல்லாவிடினும், வீட்டையாவது காக்க வேண்டுமென்ற சுயநலத்தோடு இருப்போம். உடலால் தனித்திருப்போம்; உள்ளங்களால் இணைந்திருப்போம்.