தாத்தா


வறுமைக் கோடுகள் நிறைந்த வயிறு, வானவில்லாய் முதுகு, எலும்பை வெளிக்காட்டும் உடல், இதுவே தாத்தாவின் புறம். மணிமேகலைக்கும் கிடைக்காத ஒரு அட்சயப் பாத்திரம், பொத்தலான இரண்டு உடைகள், கையிலொரு ஊன்றுகோல், இதுவே இவரின் சொத்து.  மூன்று நாட்களாய் ஏனோ அட்சயப் பாத்திரத்துக்கும் பசி, இவருக்கும் பசி. பசியின் பசி கொஞ்சம் கொஞ்சமாய் தாத்தாவை ருசித்துக் கொண்டிருந்தது. தாத்தாவின் வயிற்றில் வறுமையின் வரிகள் அதிகமாகிக் கொண்டிருந்தது. உடலசைவற்றுப் போகும் நிலையில், வியர்வையின் வாசத்தோடு வந்து விழுந்தது ஒரு பத்து ரூபாய் நோட்டு. கூடவே, இன்னும் சில நாணயங்களையும் தந்தது அட்சயப் பாத்திரம். தாத்தாவின் கண்கள் உயிர்ப் பெற்றன.

முதுமை தந்த மூன்றுக் கால்களில் கொடூரப் பசியோடு உணவகத்தை நோக்கி நடக்கலானார் தாத்தா. தனக்குப் பிடித்த இட்லியையும், தக்காளிச் சட்னியையும் கையில் வாங்கிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தார். இட்லியையும் சட்னியையும் பார்க்கும்போதே தாத்தாவின் நாக்கில் எச்சில் ஊற்றெடுத்தது. மூன்று நாள் பட்டினி விரதம் இன்றேனும் தீர்ந்ததே என மேலே உயரமாய் பார்த்துக் கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு கைக்கூப்பி நன்றிச் சொன்னார். இட்லியை ஒரு ஓரமாக கொஞ்சம் பிட்டெடுத்து, மெதுவாக சட்னியில் நனைத்து, அதன் சுவையை ருசிக்க முனைந்தார். ருசிக்கும் முன்னே,அய்யா.. ரொம்ப பசிக்குது அய்யாஎன்றொருக் குரல் கேட்டது. சட்னியால் சிவந்த இட்லியை மீண்டும் தட்டிலேயே வைத்தபடி, அந்தக் குரலின் திசையை நோக்கினார். தோளில் ஒரு மூட்டையை சுமந்தபடி இடது கையால் தன் பச்சிளம் குழந்தையை மார்பில் அணைத்துக் கொண்டு,  வலது கையை நீட்டி தாத்தாவிடம் யாசகம் கேட்டாள். சற்றும் யோசிக்காது தாத்தா எழுந்து நின்று, தன் இருக்கையை அவள் பக்கம் நகர்த்தி உட்காரச் சொன்னார். அவளிடம் இட்லியைக் கொடுத்துவிட்டு, மீண்டும் அட்சயப் பாத்திரத்தை கையிலேந்தியபடி மன நிறைவோடு நடக்கலானார்.

1 கருத்து: