மனதின் நாடி


நம்பிக்கை, நம் மனதின் நாடித்துடிப்பு. தொடர்ந்து சரியாகத் துடிக்கிறதாவென சோதித்துக் கொண்டேயிருங்கள். அப்போதுதான் நம் மனம் உயிர்ப்புடன் மகிழ்ச்சியாய் இருக்கும். நம்பிக்கையொரு விதைப் போல. நற்சிந்தனையோடு மனதில் நட்டு வைத்தால், நல்ல மரமாகிப் பூத்துக் காய்த்துக் கனிந்துப் பயன் தரும். முதலில், நம்பிக்கையின் விதையை ஆழமாக மனதில் விதையுங்கள். வாழ்க்கை மரம் தானாக செழித்து வளர்ந்துக் கனி தரும். 

வில்லிலிருக்கும் அம்பினை இலக்கை நோக்கி அதிவேகமாய் செலுத்த விரும்பினால், அம்பை எவ்வளவு பின்னோக்கி இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்தால்தான் வேகமாய் முன்னோக்கிச் சென்று இலக்கையடையும். வாழ்க்கை, உங்களைப் பின்னோக்கி இழுக்கிறதென்றால், நம்பிக்கையோடு கலங்காதிருங்கள். பொறுமையோடு காத்திருங்கள். விரைவில், வில்லிலிருந்து விடுப்பட்ட அம்பென, உங்களின் இலக்கை நோக்கிய வெற்றியின் பயணம் தொடங்கும்.

கனி தருகிற மரம்தான் கல்லடிப்படுமென பாட்டிக்களும் தாத்தாக்களும் சொல்லக் கேட்டீருப்பீர்கள். உண்மைதான், வெறும் மரத்தை நோக்கி யார் கல் வீசப்போகிறார்கள்.?. உங்களை நோக்கி கல் வருகிறதென்றால், நீங்கள் காய்த்துக் கனிகளைத் தர தொடங்கிவிட்டீர்களென்று அர்த்தம். நம்பிக்கையோடு வீறுநடைப் போடுங்கள். கல் வீசுகிறார்களே, காயம்படுகிறதே என எந்த மரமும் காய்த்துக் குலுங்கி, கனி தருவதை நிறுத்தியதில்லை. ஒருபோதும், நீங்களும் கனி தருவதை நிறுத்தாதீர்கள். கல் வீசுகிறவர்கள் வீசட்டும், காயம் படட்டும். நீங்கள் கவலைப் படாமல் நம்பிக்கையோடு காய்த்துக் கனிந்துக் கொண்டே இருங்கள். பாவம், கல் வீசுபவர்களுக்கும் கொஞ்சம் கனி தாருங்கள், களைப்பு நீங்கி இளைப்பாறட்டும். கேள்விகள்தான் குனிந்துக் கிடக்க வேண்டும். நீங்கள் ஆச்சரியங்கள். நம்பிக்கையோடு நிமிர்ந்து நில்லுங்கள்.

நம்பிக்கை, அது நம்முடைய மூன்றாவது கை. ஊனமாகமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களையும் உங்கள் மனதையும் நம்பிக்கையோடு நம்பிக்கையின் வசம் ஒப்படையுங்கள். வாழ்க்கை உங்களின் கைவசம். நம்பிக்கை நம் எல்லோரிடமும் உள்ளது. அதன் அளவை மட்டும் அதிகப்படுத்துங்கள். மனதிற்கு நம்பிக்கையை மணப் பெண்ணாக்குங்கள், மகிழ்ச்சியோடு மணமுடித்து வையுங்கள். வாழ்க்கை வண்ணமயமாகும்.