நிம்மதி பெருமூச்சு

நேற்றைக்கு
முடிக்கப்பட வேண்டிய
வேலைகளின் கைகள்
நிகழ்காலத்திலும் நீளுகிறது.

நிகழ்காலத்தில்
முடிக்கப்பட வேண்டிய
வேலைகளின் கால்கள்
நாளைக்கு நகர்கிறது.

நாளையை
நோக்கி நகர்ந்ததில்
நாளொன்று குறைந்தது;
நானுமதில் குறைந்தேன்.

நாளை
இனி வராமல் போனால்..?
நானும்
அங்கு இல்லாமல் போனால்..?
சோம்பேறியிவன்
விட்டதை முடிப்பார் யாரோ..?

இதுநாள்வரை
மிச்சம் வைத்ததை
சொச்சமில்லாமல் முடித்துவிட
பட்டியலிட துவங்கினேன்.

நீண்ட பட்டியல்
நிறைவுற்ற பொழுதில்
மீண்டுமொரு நாள்
மின்னலாய் காணாமல் போனது;
கழுதையின் கனமோ
காலத்தையும் தாண்டிக் கனத்தது.

நான்
நேற்றில் இருந்தால்
கடிகாரம்
இன்றைக் காட்டுகிறது.

நான்
இன்றில் இருந்தால்
கடிகாரம்
நாளையைக் காட்டுகிறது.

நான்
நாளையில் இருந்தால்
கடிகாரம்
பயத்தைக் காட்டுகிறது.

கடிகாரத்தோடு
போட்டிப் போட்டே
காலம் கழிந்துவிடுமோயென
கண்டதை நினைத்து
கவலைப்பட்ட கணத்தில்
நான் நேற்றே இறந்தது
நினைவுக்கு வந்தது.

நிம்மதி பெருமூச்சுவிட்டு
நிகழ்காலத்தில் தொடர்ந்தேன்.