மாற்றம், முன்னேற்றம் - The KaiZen Way


கெய்-சென் (Kai-Zen) என்றால்முன்னேற்றத்திற்கான மாற்றம் (Change for Improvement)“ எனப் பொருள்படும். தொடர் முன்னேற்றத்திற்காக ஜப்பானியர்கள் உலகுக்கு சொன்ன உன்னத தத்துவம். பொதுவாக நாம் அனைவரும் சிந்திக்கும் கோணத்திலிருந்து, சிறிது விலகி வேறொரு கோணத்தில் சிந்திக்கச் சொல்கிறது. அது மிகப்பெரிய முட்டாள்தனமான சிந்தனையாக இருந்தாலும் பரவாயில்லை என்கிறது கெய்-சென். அதாவது, நாம் முன்னேறி அடுத்தநிலைக்குச் செல்ல மிகப்பெரிய முயற்சி தேவையில்லை, மிகச்சிறிய நுண்ணிய அளவிலான முயற்சியே போதும். ஆனால், நீங்கள் அந்த நுண்ணிய முயற்சியினைத் தொடர்ச்சியாக செய்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் நம் அனைவருக்குமே பல இலக்குகள் உண்டு. அதை அடைவதற்கு நாம் பெரும் உழைப்பையும் நேரத்தையும் விலையாக கொடுக்க வேண்டும். “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே காலத்தைக் கழிக்கப் போகிறாய்? வாழ்க்கையின் அடுத்த படிநிலைக்கு செல்ல வேண்டாமா? புதிதாக எதாவது முயற்சி செய்என அறிவும், “வாழ்க்கையை அடுத்த படிநிலைக்கு கொண்டுச் செல்கிறேனென, இருப்பதையும் இழந்துவிட்டு அதளபாதாளத்தில் வீழ்ந்துவிடாதேஎன அறிவிற்கு நேர்மாறாக மனமும் நம்மை குழப்பும். இரண்டில் எது சொல்வதைக் கேட்பது என்றால் இரண்டையுமே கேளுங்கள் என்கிறது கெய்சென். ஏனெனில் அறிவு சொல்வதும் நம் நன்மைக்குத்தான், மனம்  சொல்வதும் நம் நன்மைக்குத்தான். அறிவு நம்மை அடுத்தநிலைக்கு கொண்டு சென்று சிறப்பாக பேரும் புகழுடன் வாழ வைத்துவிட வேண்டுமெனவும், மனம் நம்மை இருக்கிற நிலையிலிருந்து இன்னமும் கீழே வீழ்ந்து அவமானப் பட்டுவிடக் கூடாதெனவும் நம்மோடு போராடுகிறது. மாற்றங்களை எளிதாக அறிவால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், மனதால் முடியாது.

அறிவையும் மனதையும் சமநிலையில் வைத்துக் கொண்டால், அனைத்துமே சாத்தியமென்கிறது கெய்சென். எப்படியெனில், நீங்கள் அடைய எண்ணுகிற இலக்கின் தூரத்தினை பல சிறு சிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். தினமும் கொஞ்ச தூரமாவது பயணித்துக் கொண்டேயிருங்கள். இன்னமும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், நீங்கள் 20000000 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டுமானால், அதற்காக தினமும் 2 மீட்டர் தூரம் பயணியுங்கள் போதும். உங்கள் கனவுகளுக்காகவும் இலக்குகளுக்காகவும் ஒரு நாளில் ஒரு நிமிடத்தையாவது ஒதுக்குங்கள். இறுதியில் அந்தவொரு நிமிட உழைப்பு, பல வருட பெரும் உழைப்பாக மாறியிருக்கும். இப்போது, கனவுகள் எளிதாக நம் கைவசப்படும். காலச் சக்கரத்தில் நம் பெயர் பொன்னெழுத்தில் பொறிக்கப்படும்.