காதலைக் கொண்டாடுவோம் – 1

     முகநூலில் எழுதப் போகிறேனென ஒரு பதிவையும் இட்டுவிட்டேன்; பதிவுமிட்டுவிட்டு எழுதாமல் போனால், நான் வேண்டிக் கொண்ட கடவுளின் பெயருக்கும் கலங்கம் நேர்ந்துவிடும். இப்படியான இக்கட்டான சூழலில், என்ன எழுதுவதென்று மூளையை தூசு தட்டியபோது, நீண்ட நாட்களாய் காதலையும் அதன் பல்வேறு நிலைகளைப் பற்றி, குறிப்பாக அதன் முறிவு நிலையையும், அதன் தொடர்ச்சியான நிலைகளையும் எழுதிவிட வேண்டுமென்ற தீராத ஆசை மேலோங்கியது. பல நாட்களாக, பல முறை எழுத முயன்று வார்த்தைகள் பிடிபடாமல் திணறி அறுபட்டும், நான் எழுத எண்ணிய எண்ணவோட்டத்திலிருந்து தடம் மாறி தடுமாறியும் கருக்கலைப்பு செய்யப்பட்டிருக்கிறேன். இன்றைக்கும் அதே முயற்சி. காதலை எப்படியும் எழுதிவிடுவோம் என்கிற எண்ணத்தோடு தொடங்கியிருக்கிறேன். பார்ப்போம், என்னில் மையம் கொண்ட கருவை இந்த விசைப்பலகையும், என் விரல்களும் கூடி பிரசவித்தால் இணையத்துக்கு வரும். இல்லையென்றால், முழுமைப்பெறாத 157 பக்கங்களோடு இதுவும் சேர்ந்து 158-வது பக்கமாக இருக்கும். இதற்கு முன்பு, எழுத தொடங்கும்போதெல்லாம் காதலை எழுதுவது எளிமையான விசயமென்று நினைத்தே அணுகினேன். அதனால்தான் என்னவோ அத்தனை முறை முயன்றும் முழுமைப் பெறாமலே முடிந்துவிட்டன. இப்போது, உணர்ந்துக் கொண்டேன் காதலை எழுதுவது கத்தியின்மேல் நடக்கிற மாதிரியான வித்தை. அதனால்தான் கூடுதல் பொறுப்போடும் தெளிவோடும் நத்தையாக மாறி, நிதானமாக நகரத் தொடங்கிவிட்டேன். நேரமானலும் பரவாயில்லை, இன்று எழுதியே தீர வேண்டும். கதவுகளையெல்லாம் அடைத்துக் கொண்டேன். இருளுக்கும் ஒளியூட்டி விட்டேன். இதோ தொடங்கியும் விட்டேன்.

     காதல், நட்பின் நீட்சியாக இருக்க வேண்டும்; அல்லது, காதலின் நீட்சி நட்பாக இருக்க வேண்டும். இந்த புரிதலோடு அணுகுகிறபோது காதலின் எல்லா நிலைகளையும் நிச்சயம் பெரும் மகிழ்ச்சியோடு கொண்டாட முடியும். காதல், அதுவொரு இயற்கையான நிகழ்வு. அதையொரு குழந்தையைப் போல தன்னிலை மறந்த ஞான நிலையில் இரசிக்க வேண்டும். கரையைப் பற்றிய எந்த நினைப்புமில்லாமல், வீடு திரும்புவோமா மாட்டோமா என்கிற எந்த பயமுமில்லாமல், அந்த ஆனந்தப் பெருங்கடலில் மூழ்கிப் போக வேண்டும். அதன் அத்தனை நுட்பங்களையும் ருசிக்க வேண்டும். அணுவணுவாய் ஆராதிக்க வேண்டும். ஏனென்றால், காதல் மட்டுமே சாதி, மதம், இனம், மொழி, நாடு, கண்டம், கிரகம் கடந்த மனிதத்துவ நிலையை உண்டாக்கும்; மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்தி, மனிதனாக வாழ வைக்கும்.

     காதலின் புரிந்துக் கொள்ளப்படாத நிலையைப் பார்க்கிறபோது மானுட குலம் இன்னும் சரியாக காதலை அணுகிக் கட்டமைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இந்த மானுட குலம், காதலை இயற்கையான நிகழ்வெனும் கோணத்தில் பார்க்காது தன் கண்களை கைகளில் அப்பிக் கொண்டிருக்கிறது. அதன் கைகளை விலக்கிக் கண்களை திறந்து வைக்க பலரும் முயற்சித்திருக்கிறார்கள்; முயற்சித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், அது தன் கைகள் விலகினாலும், கண்களை திறக்க மறுக்கிறது. கண்களைத் திறந்தால்தான் மனம் திறக்கும் என்கிற உணர்வை, உண்மையை ஏற்க தயங்குகிறது. இந்த மானுட குலம், காதலை இயற்கை முறையில் அணுகவில்லை எனினும் கூட பரவாயில்லை; அதுகள் போலித்தனமான செயற்கை முறையில் அணுகி, அதை சரியெனவும் வாதிடுகிறது. அதுகள் தன் தலையிலிருக்கிற கொம்புகளைக் கூர்த்தீட்டிக் கொண்டு, தன்னுள் மங்கிக் கிடக்கிற மிருகத்தனத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறது. அதுகளின் பாய்ச்சலில் குத்திக் கிழிக்கப்பட்டு, செம்மண்ணின் அடர்த்தியும் பரப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேப் போகிறது. தாவரங்கள், புயலில் சிக்குண்டு தன் பூக்களை உதிர்க்க நேர்ந்தாலும், அடுத்த பூவை நீட்ட தவறியதேயில்லை. அப்படித்தான் காதலின் சிறகுகள் உடைக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் வானத்தை நோக்கி அதன் சிறகை விரித்துக் கொண்டேயிருக்கிறது.

     எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழுந்திருக்கலாம். உயர்திணை மானுட குலத்தை அஃறிணையில் எழுதியிருப்பதைப் பார்த்து. காதலை இயற்கையான நிகழ்வாக அணுகாத, உணராத, கொண்டாடாத மானுட குலத்தின் சில பிறவிகள் என்னைப் பொறுத்தவரையில் தாழ்த்திணையில் சேர்க்கப்பட வேண்டியவையே. அதுகளைப் பற்றியும், காதலைப் பற்றியும் இன்னும் பேசுவோம்.

(தொடரும்)

2 கருத்துகள்:

  1. பெயரில்லா1:57 PM, ஏப்ரல் 03, 2020

    புயலில் சிக்குண்டு தன் பூக்களை உதிர்க்க நேர்ந்தாலும், அடுத்த பூவை நீட்ட தவறியதேயில்லை. அப்படித்தான் காதலின் சிறகுகள் உடைக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் வானத்தை நோக்கி அதன் சிறகை விரித்துக் கொண்டேயிருக்கிறது. - BEST LINES..������

    பதிலளிநீக்கு