கொரோனா: என்னுடைய மனநிலை

தேவையற்ற பயவுணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனாவைச் சார்ந்து, அதிகமான பதிவுகள் போடக்கூடாதென்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், சில அலட்சியமான மனிதர்களின் போக்கு என்னை எழுதத் தூண்டுகிறது. ஒருவேளை, எனக்கு ஏதாவது நேர்ந்தால் என்னைச் சுற்றியிருந்த அலட்சியக்கார மனிதர்கள்தான் காரணம் என்பதைச் சொல்லும் ஆவணப்பதிவாக இருக்கட்டுமே. கொரோனா நுண்கிருமி, உடலளவில் உண்டாக்கும் பாதிப்பைவிட, மனதளவில் அதிகமாகவே உண்டாக்குகிறது. எங்கு திரும்பினாலும், கொரோனா... கொரோனா... கொரோனா.... கொரோனா.... கொரோனா..... கொரோனா..... கொரோனா...... கொரோனா....... கொரோனா....... இந்தக் கூக்குரல், ஓலக்குரல், ஒப்பாரிக்குரல், அட... ஏதோவொரு குரல், அவரவர்களை அவரவர்களின் கைகளினாலே தற்கொலை செய்துக் கொள்ளவும், அடுத்தவனை எந்தவித பாரபட்சமுமின்றி கொலை செய்திடவும் மறைமுகமாக தூண்டிக் கொண்டிருக்கிறது. அது எத்தனை பேருக்கு புரிகிறதென்று தெரியவில்லை. என் மனதிற்கு ஏதோ கொஞ்சம் புரியத் தொடங்கியிருக்கிறது. எனக்கு நன்றாக தெரியும், மேலே நான் கொரோனா.. கொரோனா.. கொரோனா.. என பலமுறை குறிப்பிட்டதை முழுமையாக படிக்காமல், பலரும் தாண்டி சென்றிருக்கக் கூடும்; அல்லது அதிகபட்ச மறதியில், முழுமையாக படிக்க நேர்ந்திருந்தால் ஒருவித வெறுப்புணர்வை உண்டாக்கியிருக்கும். அந்த வெறுப்புணர்வை நினைத்துதான் என்னுடைய மொத்த கவலையும் இருக்கிறது. ஏனென்றால், அந்த வெறுப்புணர்வு கூடிய விரைவிலேயே வன்முறையாக வெடிப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் நம் கண்முன்னே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

அந்த வன்முறையின் திரி, தனிமனித ஒழுக்கத்தை ஒருபோதும் கடைப்பிடிக்காமல், கண்டபடி வெளியில் சுற்றித் திரிந்தபோதே கொளுத்தப்பட்டுவிட்டது. இனி அதன் வெடிச்சத்தம் நம் உயிரைப் பிளக்கும். கொலை, கொள்ளை மாதிரியான செயல்களும் அரங்கேறும். அதை நீர்த்துப்போக செய்வதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவே. நான் வெறுமனே பயமுறுத்துவதாக தோன்றலாம். அப்படி பயமுறுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. பயம் என்றால் என்னவென்று எனக்கும் தெரியும். ஏனென்றால், நானே பயந்துப்போய்தான் இருக்கிறேன்.

எங்கள் கிராமத்தில் 144 தடை உத்தரவுப் போட்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அவரவர்கள் தங்களின் வழக்கமான செயல்களை மும்முரமாக செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கொரோனாவின்மீது எந்தவித புரிந்துணர்வும், பயமும் வந்ததாகக்கூட தெரியவில்லை. முன்பைவிட இப்போதுதான் அதிகளவில் கூட்டம் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இந்த கொரோனாவைப் பற்றிதான் பேசுகிறார்கள். இதை எழுதும்போது, முன்பெப்போது ஒரு சமயத்தில் எழுதிய கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. அது;

“சாதியை ஒழிப்போமென
சாதிக்கட்சி தலைவர்
சடசடவென மேடையேறி
அடுக்கடுக்கான அடுக்குமொழியில்
அப்பாவி மக்கள்முன்
அளவில்லாமல் அளந்துவிட்டார்;
அவர்களும் அதையுமெச்சி
ஆரவாரத்தோடு கைத்தட்டினர்“

எத்தனை அபத்தமான செயல் இது. எங்கள் கிராம மக்களின் செயல்களைப் பார்க்கும்போது, நானெல்லாம் தப்பிப் பிழைப்பேனோ, மாட்டேனோ என்கிற பயவுணர்வு உண்டாவதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. இங்குதான் இந்த நிலைமையெனின் நகர மக்கள் இன்னும் மோசம். எல்லாருக்குமே தான் படித்தவன், தனக்கு எல்லாமே தெரியும் என்கிற அகந்தை இருக்கும் போலும். இந்த அகந்தையெல்லாம் கொரோனாவிடம் செல்லுபடியாகாது. மாறாக, நாமெல்லாம் மேலே செல்லும்படியாகிவிடும். இந்த அரைகுறையான இணையத் தகவல்களை கழுதைப்போல மேய்ந்துவிட்டு, கண்டதை கத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த மனிதப் பதறுகள், என்னையும் சேர்த்துத்தான்.

இதில் இன்னும் கொடுமையான விசயம் என்னவெனில், வாட்ஸ்-அப்பில் வருகின்ற வதந்தியான, போலியான பகிர்வுச் செய்திகள். எனக்கு மட்டும் கொரோனா நோய்த்தொற்று வந்தால்... கண்டிப்பாக வராது. ஏனென்றால், தமிழன் முட்டாளில்லை, முன்னோடி. ஒருவேளை, அதையெல்லாம் தாண்டி இந்த முன்னோடிப் பச்சைத் தமிழர்களில் ஒருவனான எனக்கு வந்தால், இந்த வதந்தியான செய்திகளை உருவாக்குவோர்களையும், பரப்புவோர்களையும் வெற்றிலையில் மைப்போட்டுப் பார்த்தாவது கண்டுப்பிடித்துவிட வேண்டும். அப்படி கண்டுப்பிடித்து மூக்கோடு மூக்கு வைத்து, அச்... அச்... அச்... என சளி அவர்களின் நுரையீரலை தொடும்வரை தும்மிவிட்டுதான் சாக வேண்டும்.

“ஆதிகாலத்திலயே தமிழர்கிட்ட மருந்து இருக்கு. சுடுதண்ணிய குடிச்சா தப்பிச்சுடலாம். 9 கோளும் ஒன்னா நேர்கோட்டுல வருது, லைட் ஆஃப் பண்ணா போதும், கொரோனா செத்துடும். அப்படி இப்படினு ஏகப்பட்ட வதந்திய கெளப்புறானுங்க. ஏன் ஜீவா... கண்ணாடிய திருப்புனா, ஆட்டோ எப்படி ஓடும்..? கொரோனா வைரஸ் பரவுறதவிட வேகமா இவனுங்க வதந்திய பரப்புறானுங்க. தும்மல போட்டுருவோம், செத்துத் தொலையட்டும்

“இவனுங்கதான் இப்படினு டீவி பக்கம் போன.. அவனுங்க என்னய பயமுறுத்தியே கொன்னுடுவானுங்க போல. அவர்களையும் தேடிப்பிடித்து, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அதே மாதிரியான மூன்று தும்மலை மூக்கோடு மூக்கு வைத்துத் தும்மிவிட வேண்டும். “அங்க அவ்ளோ பேர் பாதிக்கப் பட்டுட்டான். இங்க இவ்ளோ பேர் செத்துட்டானு சொல்றீயே தவிர எவனாச்சும் வீட்டுக்குள்ளயே தனியா இருங்கடா... அப்போதான் கொரோனா பரவாதுனு எந்த டீவிக்காரனாச்சும் சொல்றீங்களாடா? அப்படியே ஒண்ணு ரெண்டு டீவிக்காரனுங்க தப்பித் தவறி சொன்னாலும், நாங்க அத பாக்க மாட்டோம். ஏன்னா, நான் சாவாம இருக்கறது எப்படினு பாக்கறதவிட, அடுத்தவன் சாவறத பாக்கறதுலதான் எங்களுக்கு இன்ட்ரெஸ்டு. நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்...“

என்னமோ போங்க... நான் எதையெதையோ உளறிக் கொண்டிருக்கிறேன். என் உளறல்களை ஓரமாக வைத்துவிட்டு, ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். “கேட்டா கேளுங்க.. கேக்காட்டி சாவுங்கடா...“ மன்னிக்கவும், இது நானில்லை. என்னோட மைண்ட் வாய்ஸ். “எப்டியும் கேக்க மாட்டானுங்க, எதுக்குடா டைம் வேஸ்ட் பண்ற?“ இதுவும் மைண்ட் வாய்ஸ்தான்.

கொரோனா மாதிரியான நோய்த்தொற்றை சமாளிப்பது அவ்வளவு கடினமான காரியமில்லை. எளிமைதான், ஆனால் நாம் விழிப்புணர்வோடு தனித்திருந்து செயல்பட வேண்டும். காலரா, சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை, ஃப்ளூ, எபோலா, நிமோனியா போன்ற இன்னபிற அதிகமாக மக்களைப் பாதித்த நோய்களை பார்த்திருக்கிறோம், சமாளித்திருக்கிறோம். அதையெல்லாம் எளிமையாக சமாளிக்க முடிந்ததற்கு காரணமும் இருக்கிறது. இந்த மாதிரியான நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டால், உடனடியாக அதன் அறிகுறிகளை உடலில் வெளிப்படுத்தத் தொடங்கிவிடும். ஆனால், இந்தக் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டாலும், அதன் அறிகுறிகளை உடலில் வெளிக்காட்ட இரண்டு வாரங்களுக்குமேல் ஆகும். அதுதான் இதிலிருக்கிற முக்கியமான சிக்கலே. கொரோனா நோய்த்தொற்று உண்டானதற்கான அறிகுறிகளை வெளிக்காட்டுவதற்கு முன்பாகவே நம்மையுமறியாமல், நம்மை சார்ந்தோர் அனைவருக்கும் பரப்பிவிடுகிறோம். இதனால்தான், ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உண்டானால், கடைசியாக அவர் எங்கெல்லாம் பயணம் செய்தார்.. யாரெல்லாம் உடனிருந்தார்கள்.. என மருத்துவர்கள் கேட்பதற்கு காரணம். இப்போது, சமீபத்தில் டெல்லியில் ஒரு கலந்தாய்வு கூட்டத்திற்கு சென்று வந்ததால் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட நண்பருடன் பயணித்த, மற்ற இஸ்லாமிய நண்பர்களையும் பரிசோதித்துக் கொள்வதற்கு அரசு அறிவுறுத்துவதும் இதன் காரணமாகத்தான்.

இப்போ என்னதான்டா சொல்ல வர..? என நீங்கள் கேட்பது புரிகிறது. அம்மை நோய்கள் உண்டாகும்போது பாதிக்கப்பட்ட நபரைத் தனிமைப்படுத்தி, வீட்டுக்குள் யாரையும் அனுமதிக்காமலும், நாமும் மற்றவர்களின் வீட்டுக்குச் செல்லாமலும், குடும்பத்தோடு தனித்தே இருப்பது நாம் அனைவரும் அறிந்தவொன்றே. சில நேரங்களில், நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும்போது மாரியம்மன் மாதிரியான கோவில்களுக்கு பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் சென்று, தனித்திருக்க செய்ததும் நினைவிருக்குமென நினைக்கிறேன். இதெல்லாம் பாதிக்கப்பட்டவரிடமிருந்து மற்றவருக்கு அம்மை நோய் எக்காரணங் கொண்டும் பரவாமல் தடுப்பதற்கு செய்த உத்திகள். இதையேதான் நாம் இப்போது இந்த கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை பரவாமல் தடுப்பதற்கும் செய்ய வேண்டியது. பாதிக்கப்பட்டோமோ இல்லையோ, முடிந்தவரை யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காமலும், நாமும் வெளியில் செல்லாமல் தனித்திருப்பதும், இந்த இக்கட்டான சூழலில் மிக மிக மிக மிக மிக மிக... அவசியமான ஒன்று.

இந்த மாதிரி நான் சொன்னதைக் கேட்டு.. மன்னிக்கவும், நம் அரசாங்கம் சொன்னதைக் கேட்டு, வீட்டுக்குள்ளேயே தனித்திருந்தால் நூறு சதவீதம் உயிர்ப் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது. அப்படி நாம் உயிர்ப் பிழைத்திருந்தால், சுபயோக சுபதினத்தில், சுற்றமும் நட்புமாக ஒன்றுக்கூடி, கைக்குலுக்கி, சட்டையில் சளியை துடைத்தபடி கட்டியணைத்து, முத்தமிட்டு, சில தும்மல்களையும் தைரியமாக தும்மி, மகிழ்ச்சியோடு களித்திருப்போம். அதுவரை, தனித்தே இருப்போம்.

“போங்கடா.. போய்ட்டு வீட்டுக்குள்ளயே இருங்கடா பக்கிகளா.. என்னைய பயமுறுத்தறாய்ங்களே சாமி....“ இப்பவும் மைண்ட் வாய்ஸ்தான், நானில்லை. செல்வா எஸ்கேப்....!


   #StayHome                #StaySafe             #CoronaAwareness

1 கருத்து:

  1. எனக்கு நன்றாக தெரியும், மேலே நான் கொரோனா.. கொரோனா.. கொரோனா.. என பலமுறை குறிப்பிட்டதை முழுமையாக படிக்காமல், பலரும் தாண்டி சென்றிருக்கக் கூடும்

    பதிலளிநீக்கு