வாழ்வியல் கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்வியல் கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சாம்பலாய் எரிந்த காடு

 ஒரு எளிமையான தத்துவத்தை புரிந்துக்கொள்ளுதல் நினைப்பதுபோல அவ்வளவு எளிமையில்லை. நுட்பங்களை உச்சிமுகர ஒரு பேரனுபவம் தேவையாய் இருக்கிறது. பேரனுபவத்திற்கும் புரிதலுக்கும் ஒரு மகா மட்டமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்திருக்க வேண்டும் அல்லது பணயம் வைக்க வேண்டும். இன்னதுதான் இது, இதன் மூலம் இதுதான், இப்படி நிகழ்ந்திருந்தால் இப்படித்தான் என ஒருபோதும் முன்னறிவிக்கை கிடைப்பது கிடையாது. ஓடும் படகைப் போல பாதையிலிருந்து திரும்பவேண்டிய அல்லது திசைமாற வேண்டிய சூழலேற்படின் திரும்பியாக வேண்டும். பாதையில் பயணிப்பதை பின் பார்த்துக் கொள்ளலாம். உயிர்த்திருத்தல்தான் இந்த பேரியியற்கையின் ஆதிப்புள்ளி.

திரும்புதல் சாத்தியமற்றது என்றானபோதும் ஒரு போருக்கு முன்னான வீரனைப்போல, புயலிலும் பூக்களைத் தாங்கி நிற்கும் ஒரு மெல்லிய செடியைப்போல, இறுதிச் சொட்டு தீர்ந்திடினும் தன் எச்சங்களை, தன் தொடர்ச்சியை மீதம் வைத்து செல்லும் மீன்களைப் போல, தன்னைத் தேட யாருமில்லை, தனக்காக ஏதுமில்லை என்றறிந்தப் பின்னும் இன்னொருமுறை தற்கொலைக்கு முயலும் முயற்சியை ஒத்திப்போட்டு தன் பழைய நிலைக்கு திரும்பும் தனிமையாளனைப்போல வாழ்க்கையின்மீதும், வாழ்தலின்மீதும் துளியளவு காதலேனும் தேவையாய் இருக்கிறது. இந்த வாழ்க்கையானது எத்தனை கொடூரமானதாக இருந்தாலும் ஒரு புன்முறுவலோடு மீண்டும் துவங்குதல் அவசியமாகிறது. யாருக்கும் தன் பயணத்தை முடித்துக் கொள்ள இங்கே விதிக்கப்படவில்லை. ஏதோவொடு வடிவத்திலோ, வடிவமற்றோ பயணித்துக் கொண்டேதான் இருக்கிறது இந்த மொத்த பிரபஞ்சமும்.

தனித்தவொன்றென்று எங்குமே எதுவுமே இல்லை. ஒன்றை இன்னொன்றும், இன்னொன்றை இன்னொன்றும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது; பழிக்க வேண்டியிருக்கிறது; சண்டையிட வேண்டியிருக்கிறது; காயப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது; காதலிக்க வேண்டியிருக்கிறது. ஒருபோல இருப்பினும் சில வெட்டுக்கள் குணப்படுத்துவதற்கும், சில வெட்டுக்கள் கொன்றழிப்பதற்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இந்தப் பேரியியற்கையின் சாராம்சம். முட்டாள் மனங்கள் எல்லாவற்றிற்கும் காரணமிருப்பதாய் தேடுகிறது. காரணங்கள் எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. எலிக்கும் பூனைக்குமான, பாம்புக்கும் கழுகுக்குமான, மானுக்கும் புலிக்குமான உறவுமுரண் உயிர்த்திருத்தலுக்கான வழிகளைத்தான் காட்டுகிறது. எதன்மீதும் எதற்கும் பகையாட கற்றுத் தரவில்லை. ஒன்றை இன்னொன்று உயிர்த்திருத்தலுக்காக கொல்ல வேண்டியிருக்கிறது. கொன்றதால் எதுவுமிங்கே முழுமையாய் அழிந்தும் போய்விடவில்லை. சாம்பலாய் எரிந்த காடுகள் மீண்டும் ஒரு பச்சையிலையை துளிர்ப்பதைப் போல, ஒவ்வொன்றும் தன்னை வேறொரு வகையில் மீண்டும் மீட்டமைத்துக் கொள்கிறது; மீட்டமைத்துக் கொண்டேயிருக்கும். அறிவுள்ளவைகள்தான் இதெல்லாம் புரியாமல் தன்னை குழம்பிக் கொண்டு, நகர முடியாமல் ஒரே புள்ளியில் சிக்கிக் கொள்கிறது.

எப்படி ருசிக்கப்படுகிறதென்பதில்தான் பிரச்சனையே துவங்குகிறது. பெருங்காமத்தின் இன்பத்தை முழமையாய் லயித்திட இடையிடையே சில நிறுத்தங்களும் நிதானங்களும் அவசியமாகிறதைப்போல, இந்த கேடுகெட்ட வாழ்க்கையின் நுண்மைகளை, கொடைகளை, சுகந்தங்களை உச்சிமுகர ஸ்தம்பித்துப் போதல் அல்லது வெறுத்துப் போதல் அவசியமாகிறது. சமயங்களில் உண்டாகுமிந்த வெறுமையானது வாழ்க்கையின் ருசியைக் கூட்டுவதற்கு கலக்கப்பட்ட உப்பைப் போன்றது. தனித்து ருசித்தால் உவர்ப்பாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ருசித்தோமானால் மெய்மறக்கச் செய்யும். இரசனையான புலன்களுக்குத்தான் இந்த கேடுகெட்ட வாழ்க்கையினுள்ளும் புதைந்துக் கிடக்கிற அழகியலின் இதுவரை காணாத பரிமாணங்கள் தென்படும். கோடாரியின் ஆவேசமான வெட்டுக்கள் எல்லா நேரங்களில் மரங்களை சாய்ப்பதற்கு மட்டுமேயில்லை, செதுக்குவதற்கும்தான். எதுவாயினும் மரமெப்போதும் தன்னை தயாராகவே வைத்திருக்கிறது. பூத்தபின் உதிர்வதற்கும், உதிர்ந்தபின் பூப்பதற்கும் வாழ்க்கையின்மீது எப்போதும் ஒரு பிடிமானம் அவசியப்படுகிறது. இந்தப் பிடிமானம்தான் நம் எல்லோரின் தேவையும் கூட.

 

 

காதலைக் கொண்டாடுவோம் – 2

     காதலின் சிறகுகளை உடைக்க நினைப்பவர்களின்மீது சொல் வீசுவதற்குமுன், காதலர்களின் மனோநிலையை ஆராய்வது அவசியமென கருதுகிறேன். பெரும்பாலான காதலர்களுக்கே காதலின்மீதான புரிதல் இல்லை. காதலின் தொடக்கப்புள்ளி பாலினக் கவர்ச்சி எனினும், அது மட்டுமே முழுமையான காதலாகிவிடாது. அந்தப் புள்ளி, முற்றுப் பெறும்போது காதலும், காதலர்களுக்கு இடையேயான அந்த ஊடலும் முற்றுப் பெற்றுவிடுகிறது. உடல் ஈர்ப்பைத் தாண்டிய இருவருக்கும் இடையிலுள்ள மன ஈர்ப்பே காதலை என்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருக்கும். உடல் ஈர்ப்பு காலப்போக்கில் கரைந்துவிடும். மன ஈர்ப்போ மடிந்தாலும் மாறாதிருக்கும்.

     காதலை யாராலும் கற்றுத் தந்துவிட முடியாது. காதல் என்பது இதுதான்.. இன்னதுதான்.. இப்படித்தான் இருக்க வேண்டுமென வரையறுத்துவிடவும் முடியாது. காதல்... அந்த கடல் போல, வானம் போல பறந்து விரிந்திருக்கிறது. அதன் எல்லைகள் அளப்பறியது. ஒரு துளியை எடுத்துக் கொண்டு அதுதான் கடல் என்றும், ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அதுதான் வானம் என்றும் வாதிடுவது எவ்வளவு அறிவிலித்தனமோ, அதுபோலவே காதலை வார்த்தைக்குள் அடக்கிவிட முயலுவதும். எத்தனை கோடிக் கண்கள் பார்க்கிறதோ, அத்தனை கோடி பிம்பங்களை காதல் காட்டும்.

     மனிதர்களுக்கு நீச்சல் பழக சொல்லித் தருவதைப் போல, ஒரு கடலில் இருக்கிற மீனுக்கு யாரும் நீச்சலைப் பழகச் சொல்லித் தருவதில்லை. அது தானாகவே நிகழும். அதுவொரு இயற்கையான நிகழ்வு. நாம் நீச்சல்தான் பழகுகிறோம் என்கிற எந்த நினைப்பும் இல்லாமல், ஆயுள் முழுக்க அத்தனை ஆனந்தமாய் நீந்திக் கொண்டிருக்கும். நீச்சலை ஒருபோதும் தனியான நிகழ்வாக அது அணுகியேதே இல்லை. அதனால்தான், அந்த ஆனந்த நீச்சல் ஒருபோதும் சலித்துப் போகாமல் இனித்துக் கொண்டே இருக்கிறது.
    
     மனிதர்களும் காதலை இப்படிப்பட்ட இயற்கையான நிகழ்வாக அணுகினால், அது என்றைக்குமே ஆனந்தம் தருகிற இனிய நிகழ்வாக இருக்கும். காதலை ஒருபோதும் நீச்சல் பழகுவதைப் போல பழகவே கூடாது. அப்படி ஒரு எண்ணமிருந்தால் இந்த நொடியிலேயே வெளியில் துப்பிவிடுங்கள். காதல், அதுவாகவே நிகழ வேண்டும். காதல் தொடங்கிய நொடி இதுதானென எந்த நினைப்புமில்லாமல் தொடங்க வேண்டும். தொடங்கியப் புள்ளியை நினைவு வந்து தேடினாலும் கிடைக்காமல் தொலைந்துப் போயிருக்க வேண்டும். அப்படி தொடங்குகிறபோது, தொலைகிறபோது, அதற்கு முடிவென்பதே இல்லாமல் போயிருக்கும். மனிதர்கள் மடிந்துப் போகலாம்; ஆனால், இந்த அதியற்புதக் காதல் என்றைக்குமே முடிவிலியாய் தொடர்ந்திருக்கும்.

     காதலை, இந்தக் கரையிலிருந்து தாவிக் குதித்து அந்தக் கரையை அடைகிற நிகழ்வாக பார்க்க வேண்டாம். அப்படிப் பார்த்தீர்களேயானால், அந்தக் கரையை அடைந்ததுமே உங்களின் காதல் முடிந்துவிடும். அதிலிருக்கிற ஓருயிர்க் கொண்ட ஈருடல் என்கிற உணர்வு மறைந்துப் போகும். எந்த முன்னேற்பாடுமில்லாமல், எந்த பயமுமில்லாமல், நீங்கள் வெறுமனே காதலில் மூழ்கிப் போங்கள். மற்றதை அந்தக் காதல் பார்த்துக் கொள்ளும். காதலின் முழுமை, இன்னொரு கரையை அடைவதில் இல்லை. மாறாக, அடிமட்ட ஆழம் வரை தன்னிலை மறந்து, மூழ்கிப் போதலில்தான் உள்ளது. அங்குதான் காதலின் முத்துக்களும் இன்னபிற நவரத்தினங்களும் கிடைக்கப் பெறும். நீங்கள் இதுவரை பார்த்த கோணத்திலிருந்து, வேறொருக் கோணத்திற்கு பரிணமிக்கச் செய்து, காதல் பற்றிய முழுமையான புரிதலை உங்களுக்குள் கட்டமைத்து ஊடுருவச் செய்யும்.

     முழுமையான புரிதல் உள்நுழைகிறபோது, வடக்கிந்தியர்களின் பற்களில் பற்றியுள்ள பான்மசாலா கறைகூட பாப்லோ பிகாசோவின் ஓவியம் போல அழகியல் நிறைந்ததாக தோன்றும். ஒவ்வொரு நிகழ்விலும் காதல் நிறைந்து கலந்திருக்கிறது. புதிதாக நடக்கப் பழகுகிற மழலைக் குழந்தை, எங்கே போகிறோம்? எதற்காக போகிறோம்? என்கிற எந்தக் கேள்வியும் இல்லாமல் அம்மாவின் கைகளை அழகாகப் பற்றிக் கொண்டு, அதன் ஒவ்வொரு பாத அடியையும் ரசனையோடு ரசித்தபடி எடுத்து வைக்கும். அந்நிகழ்வைப் பார்க்கிறபோது நம்மையும் அறியாமல், அந்த குழந்தையின் ஆனந்தம் நமக்குள்ளும் தொற்றிக் கொள்ளும். எந்தக் கேள்வியும் கேட்காமல், எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல், காதல் தேவதையின் கைகளைப் இதமாக பற்றிக் கொள்ளுங்கள் போதும். அடுத்து வருகிற ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிகழ்வும் அவ்வளவு ஆனந்தமாக மாறிப் போகும்.

-   (தொடர்ந்து கொண்டாடுவோம்)

காதலைக் கொண்டாடுவோம் – 1

     முகநூலில் எழுதப் போகிறேனென ஒரு பதிவையும் இட்டுவிட்டேன்; பதிவுமிட்டுவிட்டு எழுதாமல் போனால், நான் வேண்டிக் கொண்ட கடவுளின் பெயருக்கும் கலங்கம் நேர்ந்துவிடும். இப்படியான இக்கட்டான சூழலில், என்ன எழுதுவதென்று மூளையை தூசு தட்டியபோது, நீண்ட நாட்களாய் காதலையும் அதன் பல்வேறு நிலைகளைப் பற்றி, குறிப்பாக அதன் முறிவு நிலையையும், அதன் தொடர்ச்சியான நிலைகளையும் எழுதிவிட வேண்டுமென்ற தீராத ஆசை மேலோங்கியது. பல நாட்களாக, பல முறை எழுத முயன்று வார்த்தைகள் பிடிபடாமல் திணறி அறுபட்டும், நான் எழுத எண்ணிய எண்ணவோட்டத்திலிருந்து தடம் மாறி தடுமாறியும் கருக்கலைப்பு செய்யப்பட்டிருக்கிறேன். இன்றைக்கும் அதே முயற்சி. காதலை எப்படியும் எழுதிவிடுவோம் என்கிற எண்ணத்தோடு தொடங்கியிருக்கிறேன். பார்ப்போம், என்னில் மையம் கொண்ட கருவை இந்த விசைப்பலகையும், என் விரல்களும் கூடி பிரசவித்தால் இணையத்துக்கு வரும். இல்லையென்றால், முழுமைப்பெறாத 157 பக்கங்களோடு இதுவும் சேர்ந்து 158-வது பக்கமாக இருக்கும். இதற்கு முன்பு, எழுத தொடங்கும்போதெல்லாம் காதலை எழுதுவது எளிமையான விசயமென்று நினைத்தே அணுகினேன். அதனால்தான் என்னவோ அத்தனை முறை முயன்றும் முழுமைப் பெறாமலே முடிந்துவிட்டன. இப்போது, உணர்ந்துக் கொண்டேன் காதலை எழுதுவது கத்தியின்மேல் நடக்கிற மாதிரியான வித்தை. அதனால்தான் கூடுதல் பொறுப்போடும் தெளிவோடும் நத்தையாக மாறி, நிதானமாக நகரத் தொடங்கிவிட்டேன். நேரமானலும் பரவாயில்லை, இன்று எழுதியே தீர வேண்டும். கதவுகளையெல்லாம் அடைத்துக் கொண்டேன். இருளுக்கும் ஒளியூட்டி விட்டேன். இதோ தொடங்கியும் விட்டேன்.

     காதல், நட்பின் நீட்சியாக இருக்க வேண்டும்; அல்லது, காதலின் நீட்சி நட்பாக இருக்க வேண்டும். இந்த புரிதலோடு அணுகுகிறபோது காதலின் எல்லா நிலைகளையும் நிச்சயம் பெரும் மகிழ்ச்சியோடு கொண்டாட முடியும். காதல், அதுவொரு இயற்கையான நிகழ்வு. அதையொரு குழந்தையைப் போல தன்னிலை மறந்த ஞான நிலையில் இரசிக்க வேண்டும். கரையைப் பற்றிய எந்த நினைப்புமில்லாமல், வீடு திரும்புவோமா மாட்டோமா என்கிற எந்த பயமுமில்லாமல், அந்த ஆனந்தப் பெருங்கடலில் மூழ்கிப் போக வேண்டும். அதன் அத்தனை நுட்பங்களையும் ருசிக்க வேண்டும். அணுவணுவாய் ஆராதிக்க வேண்டும். ஏனென்றால், காதல் மட்டுமே சாதி, மதம், இனம், மொழி, நாடு, கண்டம், கிரகம் கடந்த மனிதத்துவ நிலையை உண்டாக்கும்; மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்தி, மனிதனாக வாழ வைக்கும்.

     காதலின் புரிந்துக் கொள்ளப்படாத நிலையைப் பார்க்கிறபோது மானுட குலம் இன்னும் சரியாக காதலை அணுகிக் கட்டமைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இந்த மானுட குலம், காதலை இயற்கையான நிகழ்வெனும் கோணத்தில் பார்க்காது தன் கண்களை கைகளில் அப்பிக் கொண்டிருக்கிறது. அதன் கைகளை விலக்கிக் கண்களை திறந்து வைக்க பலரும் முயற்சித்திருக்கிறார்கள்; முயற்சித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், அது தன் கைகள் விலகினாலும், கண்களை திறக்க மறுக்கிறது. கண்களைத் திறந்தால்தான் மனம் திறக்கும் என்கிற உணர்வை, உண்மையை ஏற்க தயங்குகிறது. இந்த மானுட குலம், காதலை இயற்கை முறையில் அணுகவில்லை எனினும் கூட பரவாயில்லை; அதுகள் போலித்தனமான செயற்கை முறையில் அணுகி, அதை சரியெனவும் வாதிடுகிறது. அதுகள் தன் தலையிலிருக்கிற கொம்புகளைக் கூர்த்தீட்டிக் கொண்டு, தன்னுள் மங்கிக் கிடக்கிற மிருகத்தனத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறது. அதுகளின் பாய்ச்சலில் குத்திக் கிழிக்கப்பட்டு, செம்மண்ணின் அடர்த்தியும் பரப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேப் போகிறது. தாவரங்கள், புயலில் சிக்குண்டு தன் பூக்களை உதிர்க்க நேர்ந்தாலும், அடுத்த பூவை நீட்ட தவறியதேயில்லை. அப்படித்தான் காதலின் சிறகுகள் உடைக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் வானத்தை நோக்கி அதன் சிறகை விரித்துக் கொண்டேயிருக்கிறது.

     எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழுந்திருக்கலாம். உயர்திணை மானுட குலத்தை அஃறிணையில் எழுதியிருப்பதைப் பார்த்து. காதலை இயற்கையான நிகழ்வாக அணுகாத, உணராத, கொண்டாடாத மானுட குலத்தின் சில பிறவிகள் என்னைப் பொறுத்தவரையில் தாழ்த்திணையில் சேர்க்கப்பட வேண்டியவையே. அதுகளைப் பற்றியும், காதலைப் பற்றியும் இன்னும் பேசுவோம்.

(தொடரும்)

கொரோனா: தனித்திருக்க வேண்டிய நேரம்

“அரசின் அறிவுரைகளை முறையாகக் கடைப்பிடித்து, வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கிற ஒவ்வொரு இந்தியக் குடிமக்களுக்கும், மனித இனத்தின் சார்பாக என் நன்றிகளை இங்கு சமர்ப்பிக்கிறேன்“

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அரசு பல கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் வகுத்து வருகிறது. ஆனாலும், நம் மக்கள் கேட்பதாக இல்லை. இன்னமும் வெளியில் வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வெளியே ஏன் வருகிறீர்கள்? என காரணம் கேட்டால், கண்டிப்பாக எல்லோரிடமும் ஒரு காரணம் இருக்கும். அது சரியான காரணமாகவும் இருக்கலாம்; தவறான காரணமாகவும் இருக்கலாம். இப்போது காரணத்தையும் அதற்கான நியாயத்தையும் நிலைநாட்டும் நிலையில் நாம் இல்லை. வெளியில் சுற்றுவதற்கு காரணத்தையும், அதற்கான விளக்கத்தையும் கொடுப்பதை விட்டுவிட்டு அரசாங்கத்தின் அறிவுரைகளை முடிந்தளவு கடைப்பிடிக்க முயலுவதே சரியான செயலாக இருக்கும். சில நேரங்களில் தவிர்க்கமுடியாத காரணங்களால் சிலர் வெளியே வர நேரிடலாம். அதை நம் யாராலும் தவிர்க்கவும் முடியாது. இதில் உண்மை என்னவெனில், தேவைக்காக வெளியில் வருபவர்களைவிட தேவையில்லாமல் வெளியில் சுற்றுகிறவர்களே அதிகம். “என் உடம்புக்கு எதுவும் ஆகாது; வைரம் பாய்ந்த உடம்பு“ என வாயிலேயே வடை சுடுவோருக்கும், மண்டையில் பலவண்ணங்களில் நிறமியைப் பூசிக்கொண்டு வண்டியில் சுற்றும் புள்ளைங்களுக்கும், மனித இனத்தின் சார்பாக சில விளக்கங்களை அளிப்பதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தப் பதிவின் நோக்கம், கண்டிப்பாக யார் மனதையும் புண்படுத்துவதும், பயமுறுத்துவதும் அல்ல; மாறாக, தேவையில்லாமல் இன்னமும் வெளியில் சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த கொரோனா வைரசின் தீவிரத்தை கொஞ்சமாவது புரிய வைப்பதற்கான ஒரு சிறிய முயற்சியே.

ஆல்பர்ட் ஆலென் பேர்ட்லெட் (Albert Allen Bartlett) என்கிற இயற்பியல் விஞ்ஞானி, மக்கள் தொகைப் பெருக்கத்தினை விளக்குவதற்காக, பாக்டீரியாவை வைத்து ஒரு ஆராய்ச்சியை செய்தார். அந்த ஆராய்ச்சியின் பெயர் பேர்ட்லெட் குவளை சோதனை (Bartlett Beaker Experiment). இந்தச் சோதனையின் நோக்கம், மக்கள் தொகைப் பெருக்கம் எப்படிக் கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை விளக்குவதாகும். இந்தச் சோதனையைப் பயன்படுத்தி, கொரோனா வைரசினால் உண்டாகிற தொற்றுநோய், நாளுக்கு நாள் எப்படி மனிதர்களிடையே அதிகளவு பரவுகிறது என்பதைப் பார்ப்போம். சோதனையின் முடிவு கண்டிப்பாக உங்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.


இப்போது, நேரம் சரியாக 11:00 மணி என்று வைத்துக் கொள்வோம். ஒரு கண்ணாடிக் குவளையை (Beaker) எடுத்து, அதனுள் ஒரு கொரோனா வைரஸ் போன்றதொரு நுண்ணுயிரியை போட்டு விடுவோம்.






கடிகாரம் 11:01 மணியை தொடும்போது ஒரு வைரஸ், இரண்டாகி இருக்கும். 11:02-ல் இரண்டு, நான்காகி இருக்கும். 11:03-ல் நான்கு, எட்டாகி இருக்கும். 11:04-ல் எட்டு, பதினாறாகி இருக்கும். 11:05-ல் பதினாறு, முப்பத்திரண்டாகி இருக்கும். இப்படியே இந்த வைரஸ் படிப்படியாக ஒவ்வொருமுறையும் இரண்டு மடங்காகிக் கொண்டே போகும்.






மெல்ல மெல்ல வளர்ந்துக் கொண்டிருந்த இந்த கொரோனா வைரசின் வளர்ச்சி, கடிகாரம் 11:54-ஐ தாண்டும்போது கட்டுக்கடங்காமல் மிகவும் வேகமாக இருக்கும். 11:59 மணியாகும்போது அபரிமிதமான வளர்ச்சியால் குவளையானது வைரஸால் பாதியளவு நிரம்பியிருக்கும். 12:00 மணியை தொடும்போது, ஒரே நிமிடத்தில் குவளை முழுவதுமாக நிரம்பிவிடும். இதில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய விசயம் என்னவெனில், 11:54-ஐ தாண்டும்வரை மெதுவாக இருந்த இந்த வைரசின் வளர்ச்சி, 11:54-ஐ தாண்டியவுடன் கட்டுக்கடங்காமல் மாறிவிட்டது. அதே மாதிரி, முதல் பாதியளவு நிரம்ப 59 நிமிடங்கள் தேவைப்பட்டது. ஆனால், இரண்டாம் பாதி நிரம்ப சரியாக 1 நிமிடம் மட்டுமே தேவைப்பட்டது. நாம் தாமதிக்கிற, அலட்சியப்படுத்துகிற ஒவ்வொரு நிமிடமும், நாம் அழிவை நோக்கி நகர்வதற்கான வேகத்தை அதிகப்படுத்துகிறது. கொரோனா வைரஸின் வளர்ச்சியில் இருந்த வேகத்தைப் போலவே, அது பரவும் வேகமும் இருக்கும். அதற்கான காணொளி விளக்கமும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.


அந்தக் குவளைதான் இந்த உலகம். அதில் போடப்பட்ட ஒரு வைரஸ்தான் ஒரு தனிமனிதன். ஒரு தனிமனிதனின் முன்னெச்சரிக்கை இல்லாத போக்கு, இந்த மொத்த உலகத்தையும் ஆபத்தில் தள்ளிவிடும். நாம் இப்போது 11:54-ஐ தாண்டும் நிலையில் இருக்கிறோம். இப்போதே நாம் சரியான முயற்சிகளில் ஈடுபட்டு, கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தாமல் போனால்... இந்த மனித இனத்தின் பேரழிவை யாராலும் தடுக்கவே முடியாது. வரலாற்றின் பக்கங்கள், “டைனோசர்கள் வாழ்ந்த காலம்“ என தாங்கியிருப்பதைப் போல, “மனிதர்கள் வாழ்ந்த காலம்“ என தாங்கி நிற்கவும் நேரிடும். இது நாம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம். கடிகாரம் 11:54-ஐ தாண்டிவிட்டால், நாம் எல்லோருமே உயிர்ப் பிழைத்திருப்பது கடினம்தான். வைரம் பாய்ந்த உடம்பெல்லாம், வைரஸ் பாய்ந்த உடம்பாகிவிடும்.

ஒரு மாபெரும் காட்டை அழித்துவிட, ஒரு சின்னஞ்சிறிய தீப்பொறியே போதுமல்லவா? இதற்கு, சமீபத்தில் நாள் கணக்கில் எரிந்து சாம்பலான அமேசான் காடுகளே சாட்சி. அந்தச் சிறிய தீப்பொறினால் காடு எப்போதோ தீப்பிடிக்கத் தொடங்கிவிட்டது. தீ மேலும் பரவாமல் தடுப்பதும், தடுக்காமல் போவதும் நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கிறது. காட்டுத் தீயை அணைப்பது கடினம்தான். ஆனால், முடியாதென்று கிடையாது. இதே மாதிரிதான், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது கடினமாக இருந்தாலும், தனித்திருந்து அரசின் ஒவ்வொரு வழிமுறைகளையும் கடைப்பிடித்து முயன்றால் கண்டிப்பாக நம்மால் முடியும்.

இல்லை.. இல்லை... நீ சொல்வது நம்பும்படியாக இல்லை. இதெல்லாம் முழுக்க முழுக்க வதந்தி.. என்னை பயமுறுத்த நினைக்கிறாய்.. என இந்தப் பதிவுக்கு மாற்றுக் கருத்து தெரிவிக்க விரும்பினால், நாம் சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ சந்திக்க நேர்ந்தால் அப்போது விவாதிப்போம். அதுவரை, அரசாங்கத்தின் அறிவுரைகளை முடிந்தளவு கடைப்பிடிக்க முயலுவோம். நம்மைப் பாதுகாத்துக் கொள்வதே, நாட்டைப் பாதுகாப்பதாகும்.




Source: 

https://www.worldpopulationbalance.org/understanding-exponential-growth



#StayHome   #StaySafe   #CoronaAwareness   #Tamil