உன்னைவிட சளைத்தவளா நான்?

கருவிட்டு
உயிர்ப்பித்து வந்தோம்
கள்ளிக் கொடுத்து
கொள்ளி வைத்தாய்

அடுப்பினைவிட்டு
அகன்று வந்தோம்
சிலிண்டரோடு வெடித்து
சிதறச் செய்தாய்

வீடுவிட்டு
வான்வெளியில் பறந்தோம்
தரைத் தீண்டும்முன்
தீயிலிட்டு கருக்கினாய்

வேதியலில்
வெற்றிக் கண்டோம்
புதிதாய் புற்றுத்தந்து
பாதியிலேயே பலியாக்கினாய்

கல்வியில்
களமாட இறங்கினோம்
தலையோடு கழுத்திலும்
துப்பாக்கியால் துளைத்தாய்

இத்தனைக் கண்டும்
இன்னமும் இயங்குகிறோம்
இப்போது சொல்,
உன்னைவிட சளைத்தவளா நான்?

சதைத் தாண்டி
சகமனிதியாய் பார்.

#RespectWomen