சுதந்திரக் காக்கை

குதிரையை கழுதையோடு ஒப்பிடுவது எந்தவிதத்தில் நியாயமாகும்? அல்லது ஒரு குதிரையை மற்றொரு குதிரையோடு ஒப்பிடுவது எந்தவிதத்தில் நியாயமென ஒப்புக் கொள்வீர்கள்?. இந்த மாதிரியாக ஒப்பீடு செய்வது முட்டாள்தனமெனில், உங்களை மற்றவரோடு ஒப்பிடுவதும் முட்டாள்தனமே. குதிரைக்கும் கழுதைக்குமான திறமைகள் வேறு வேறு. ஒரு குதிரைக்கும் மற்றொரு குதிரைக்குமான திறமைகளும் வேறு வேறு. அதைப்போலவே உங்களுக்கும் அடுத்தவருக்கும் இருக்கும் திறமைகள் வேறு வேறு. கூடவே, உங்களுக்கும் அடுத்தவருக்குமான வாழ்வியல் முறைகளும், சூழல்களும் கண்டிப்பாக வேறுபட்டு இருக்கும்.

இப்படியிருக்க, அடுத்தவரோடு உங்களை ஒப்பிட்டு வருத்தப்படுவது எந்தவிதத்தில் சரியென ஒரு நிமிடம் யோசித்துச் சொல்லுங்கள். இது காக்கையோடு மயிலை ஒப்பிட்டு, வருந்துவதற்குச் சமம். அடுத்தவர் மயிலாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நாம், சிறையில் அடைப்படாமல் சுதந்திரமாய்ச் சுற்றித்திரியும் காக்கையாக வாழ்ந்துவிட்டுப் போகலாம். அதிலொன்றும் தவறில்லை. நீங்கள் வாழ்கிற வாழ்க்கை உங்களுக்கு மனநிறைவைத் தருகிறதென்றால், அதுவே சிறந்த வாழ்க்கை என்கிறார் விவேகானந்தர். மனநிறைவில்லாமல் மாட மாளிகையில் வாழ்வதைவிட, மனநிறைவோடு தெருவோரம் வாழ்கிற பிச்சைக்காரனாக வாழ்வதே மேலென்பேன் நான். அடுத்தவர்கள் ஆயிரம் சொல்லுவார்கள். அவர்களுக்கெல்லாம் செவிச் சாய்க்காதீர்கள். உங்கள் மனம் என்ன சொல்லுகிறதோ, அதைக் கேளுங்கள். உங்களின் வாழ்வினைத் தவறெனவோ அல்லது குறையெனவோ சொல்லிவிட எவருக்குமே உரிமைக் கிடையாது. ஏனெனில், இது உங்கள் வாழ்க்கை. சரியோ தவறோ நீங்கள்தான் வாழ்ந்தாக வேண்டும். அடுத்தவர் உங்களுக்காக வாழப் போவதில்லை.

ஒப்பிட்டுப் பார்ப்பது முழுவதும் தவறான செயலென ஒதுக்கிவிட முடியாது. எதை எதனோடு ஒப்பிடுகிறோம் என்பதில்தான் ஒப்பிடுதலின் மகத்துவமே அடங்கியிருக்கிறது. நேற்றைய உங்களை இன்றைய உங்களோடும், இன்றைய உங்களை நாளைய உங்களோடும் ஒப்பிட்டுப் பாருங்கள். நேற்றையப் பொழுதினைவிட, இன்றையப் பொழுதில் என்னென்ன புதிதாக கற்றுக் கொண்டோமென கட்டாயமாக பட்டியலிட்டு ஒப்பிடுங்கள். இன்றையப் பொழுதினைவிட நாளையப் பொழுதில் என்னென்ன புதிதாக கற்றுக் கொள்ளப் போகிறோமென பட்டியலிட்டு திட்டமிடுங்கள். 

நேற்றைய உங்களைவிட, இன்றைய உங்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய உங்களைவிட, நாளைய உங்களை இன்னமும் செம்மையாக வளப்படுத்திக் கொள்ளுங்கள். மனநிறைவோடு, சிறையில் சிக்காத சுதந்திரக் காக்கையாக உலகை உல்லாசமாக வலம் வாருங்கள். மகிழ்ச்சியான வாழ்க்கையும் மாளாத வானமும் உங்கள் வசமாகட்டும்.

2 கருத்துகள்: