முனிபா மஸாரி – The Iron Lady of Pakistan

03 மார்ச் 1987, பெண்ணாய் பிறக்கிறதொரு மாபெரும் சக்தி. அந்த சக்தியின் பெயரோ முனிபா மஸாரி (Muniba Mazari). ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். தனக்கு விருப்பமேயில்லையென்றாலும், தந்தையின் ஆசைக்காக தனது 18-வது வயதிலேயே திருமணம் செய்துக் கொள்கிறார். திருமணம் பல கசப்பான அனுபவங்களைத் தருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின், அதாவது 2007-ல் முனிபாவின் வாழ்க்கையானது மொத்தமாக தலைகீழாக மாறுகிறது. முனிபாவின் கணவர் மகிழுந்தினைச் செலுத்த, இருவரும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தூக்கக் கலக்கத்தில் முனிபாவின் கணவர் மகிழுந்தினை ஒரு பள்ளமான சாக்கடையில் இறக்குகிறார். சுதாரித்துக் கொண்ட முனிபாவின் கணவர் மகிழுந்தினைவிட்டு வெளியில் குதித்து தப்பிவிடுகிறார். ஆனால், முனிபாவுடன் சேர்ந்து மகிழுந்தும் சுக்குநூறாக உடைந்து சிதறுகிறது.

பல எலும்புகள் உடைகிறது. பல அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. உடம்பு முழுக்க பல இடங்களில் டைட்டானியும் என்கிற உலோகம் வைத்து எலும்புகள் இணைக்கப்படுகிறது. இருந்தும், விலா எலும்பு உடைந்தால், நுரையீரலும் கல்லீரலும் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாத நிலை உண்டாகிறது. முதுகுத் தண்டு பாதிப்பால் கால்களோடுச் சேர்த்துப் பாதி உடல் செயலிழந்து நடக்கமுடியாமல் போகிறது. சிறுநீர் கழிப்பது அவரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனதால், ஒரு நெகிழிப் பையினைக் தன்னோடு எப்போதுமே வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கூடவே, கையின் மணிக்கட்டுகள் உடைந்ததால், தான் நேசித்த ஓவியத்தையும் வரைய முடியாமல் போகிறது. இப்படி பல்வேறு இன்னல்கள் முனிபாவைச் சூழ்கிறது. இதையெல்லாம் மருத்துவர்கள் ஒவ்வொன்றாக சொல்லும்போது கலங்காது மனவலிமையோடு இருந்தார் முனிபா. 


ஆனால், முதுகுத்தண்டு பாதிப்படைந்ததால், இனி எப்போதும் குழந்தைப் பெற்றுக் கொள்ளவே முடியாது என்கிற செய்தியைக் கேட்டதும் மிகவும் மனவேதனை அடைகிறார். பெண்ணின் முழுமையே தாய்மை அடைவதில்தான் இருக்கிறது, ஆனால் நம்மால் என்றைக்கும் தாயாக முடியாதேயென மனமுடைந்து அழுதுக் கதறுகிறார். கூடவே, இன்னொரு செய்தியும் அவரை பாதிக்கிறது. அவரது மனவலிமையை இன்னமும் சோதிக்கிறது. அந்தச் செய்தி, அவரைக் காப்பாற்றாமல் அங்கேயே விட்டுச் சென்ற கணவரின் இரண்டாவது திருமணம்தான். அளவிடமுடியாத வருத்தங்கள் இருப்பினும், தனது கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார் முனிபா. வாழ்வில் கவலைகள் வரலாம், ஆனால் கவலைகளே வாழ்க்கையாகிப் போகிறது முனிபாவுக்கு. இவைகள்தான் முனிபாவை சாதாரண பெண்ணிலிருந்து சரித்திரப் பெண்ணாக்கிய தருணங்கள்.


பிறரின் உதவியின்றி எதையுமே செய்துக் கொள்ள முடியாத நிலையில், இரண்டு ஆண்டுகளாக படுத்தப்படிக்கையாக ஒரே அறையில் அடைந்துக் கிடக்கிறார். சன்னல் வழியே கேட்கிற பறவைகளின் ஆனந்தக் கூச்சல் மட்டுமே ஆறுதல் முனிபாவுக்கு.  என்னால் நடக்க முடியாது, வரைய முடியாது, தாயாக முடியாது; இதெல்லாம நடந்தும் நான் ஏன் இன்னமும் உயிரோடு இருக்க வேண்டுமென தன் தாயிடம் கதறுகிறார். இதெல்லாம் கண்டிப்பாக கடந்துப் போகும், கடவுள் கண்டிப்பாக எதோவொன்றை உனக்காக வைத்துள்ளார் என முனிபாவின் அம்மா ஆறுதல் கூறுகிறார். இந்த வார்த்தைகள், முனிபாவை புத்துயிர்க் கொள்ளச் செய்கிறது. வாழ்க்கையை வேறொருக் கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்கிறது. ஒரளவுக்குக் குணமடைந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்ததும், தான் மீண்டும் பிறந்ததைப்போல உணர்வு உண்டாகிறது. தனக்குத்தானே கண்ணாடியின்முன் பேசுகையில், இனியும் வாழ்க்கையில் அழுதுப் புலம்பி அடுத்தவரின் ஆறுதலுக்காக இதே அறையில் முடங்கிக் கிடக்கக் கூடாதென தீர்க்கமான முடிவெடுக்கிறார். உதடுகளுக்கு வண்ணம் தீட்டிக் கண்ணாடியில் பார்த்து, தன் அழகை தானே மெய்மறந்து ரசித்து மகிழ்கிறார். திடீரென, சமுதாயம் நம்மைப் பார்த்து என்ன சொல்லுமோ என்கிற பயத்தில், வண்ணங்களை அழித்துவிட மனதில் வேதனை உண்டாகிறது. பிறருக்காக நாம் ஏன் வாழ வேண்டுமென மனம் கேள்வி எழுப்ப, .மீண்டும் உதடுகளுக்கு வண்ணம் தீட்டிக் கொள்கிறார். இந்த முறை, புத்துணர்வோடு தன்னம்பிக்கையும் உள்ளத்தில் உண்டாகிறது.

ஒரு குழந்தையை தத்தெடுக்க அனாதை இல்லத்தில் விருப்பம் தெரிவித்த இரண்டு ஆண்டுகளுக்குப்பின், பிறந்து இரண்டு நாட்களே ஆனவொரு குழந்தையைத் தத்தெடுக்கிறார். அந்தத் தருணத்தில், தாய்மையடைந்து, முழுப்பெண்ணான மகிழ்ச்சியை உணருகிறார். வாழ்க்கையை மெல்ல மெல்ல தனக்கு பிடித்த மாதிரி மாறுகிறது. வலிகளைப் பொருட்படுத்தாமல் மீண்டும் ஓவியங்கள் வரையத் தொடங்குகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், ஊனமுற்ற குழந்தைகளுக்காகவும் ஆசிரமங்கள் தொடங்கிறார். தன்னால் முடிந்த பல நற்செயல்களைச் செய்யத் தொடங்குகிறார்.


முனிபாவின் ஓவியங்கள் மிகவும் பிரபலம் அடைகிறது. மிகுந்தப் பாராட்டுகள் குவிகிறது. வெளியுலக வெளிச்சம் முனிபாவின்மீது விழுகிறது. தற்போது, தொலைக்காட்சித் தொகுப்பாளர், விளம்பர நடிகை, பாடகர்,  தன்னம்பிக்கைப் பேச்சாளர், ஐக்கிய நாடுகளின் தூதுவர், சமூக ஆர்வலர் என பன்முகம் கொண்டவராகத் திகழ்கிறார் முனிபா. எலும்புகளின் இடையில் டைட்டானியம் உலோகம் வைத்து இணைத்திருப்பதால் மட்டுமே அவர் பாகிஸ்தானின் இரும்பு மனிதி அல்ல. அவரின் மனவலிமை அனைத்து உலோகங்களைவிடவும் உறுதியானது. உண்மையான இரும்பு மனிதி, நமது முனிபா மஸாரி.


உங்களின் வாழ்க்கையில் என்ன குறையென, இப்போது சொல்லுங்கள். முனிபா மஸாரியின் வாழ்க்கையோடு ஒப்பிடுகையில், நாமெல்லாம் நல்ல வாழ்வினைத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு பிடித்த மாதிரி, உங்களுக்காக எப்போது வாழத் தொடங்குகிறீர்களோ, அப்போதுதான் உலகம் உங்களை மதிக்கத் தொடங்கும். மனதில் வருத்தம் உண்டாகிறபோதெல்லாம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முனிபா மஸாரியின் காணொளியைப் பாருங்கள். உங்களுக்குள் புது உத்வேகமும் தெம்பும் உண்டாகும். நம்பிக்கையோடு வாழுங்கள், எல்லாம் கடந்துப் போகும்.