காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காதலைக் கொண்டாடுவோம் – 2

     காதலின் சிறகுகளை உடைக்க நினைப்பவர்களின்மீது சொல் வீசுவதற்குமுன், காதலர்களின் மனோநிலையை ஆராய்வது அவசியமென கருதுகிறேன். பெரும்பாலான காதலர்களுக்கே காதலின்மீதான புரிதல் இல்லை. காதலின் தொடக்கப்புள்ளி பாலினக் கவர்ச்சி எனினும், அது மட்டுமே முழுமையான காதலாகிவிடாது. அந்தப் புள்ளி, முற்றுப் பெறும்போது காதலும், காதலர்களுக்கு இடையேயான அந்த ஊடலும் முற்றுப் பெற்றுவிடுகிறது. உடல் ஈர்ப்பைத் தாண்டிய இருவருக்கும் இடையிலுள்ள மன ஈர்ப்பே காதலை என்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருக்கும். உடல் ஈர்ப்பு காலப்போக்கில் கரைந்துவிடும். மன ஈர்ப்போ மடிந்தாலும் மாறாதிருக்கும்.

     காதலை யாராலும் கற்றுத் தந்துவிட முடியாது. காதல் என்பது இதுதான்.. இன்னதுதான்.. இப்படித்தான் இருக்க வேண்டுமென வரையறுத்துவிடவும் முடியாது. காதல்... அந்த கடல் போல, வானம் போல பறந்து விரிந்திருக்கிறது. அதன் எல்லைகள் அளப்பறியது. ஒரு துளியை எடுத்துக் கொண்டு அதுதான் கடல் என்றும், ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அதுதான் வானம் என்றும் வாதிடுவது எவ்வளவு அறிவிலித்தனமோ, அதுபோலவே காதலை வார்த்தைக்குள் அடக்கிவிட முயலுவதும். எத்தனை கோடிக் கண்கள் பார்க்கிறதோ, அத்தனை கோடி பிம்பங்களை காதல் காட்டும்.

     மனிதர்களுக்கு நீச்சல் பழக சொல்லித் தருவதைப் போல, ஒரு கடலில் இருக்கிற மீனுக்கு யாரும் நீச்சலைப் பழகச் சொல்லித் தருவதில்லை. அது தானாகவே நிகழும். அதுவொரு இயற்கையான நிகழ்வு. நாம் நீச்சல்தான் பழகுகிறோம் என்கிற எந்த நினைப்பும் இல்லாமல், ஆயுள் முழுக்க அத்தனை ஆனந்தமாய் நீந்திக் கொண்டிருக்கும். நீச்சலை ஒருபோதும் தனியான நிகழ்வாக அது அணுகியேதே இல்லை. அதனால்தான், அந்த ஆனந்த நீச்சல் ஒருபோதும் சலித்துப் போகாமல் இனித்துக் கொண்டே இருக்கிறது.
    
     மனிதர்களும் காதலை இப்படிப்பட்ட இயற்கையான நிகழ்வாக அணுகினால், அது என்றைக்குமே ஆனந்தம் தருகிற இனிய நிகழ்வாக இருக்கும். காதலை ஒருபோதும் நீச்சல் பழகுவதைப் போல பழகவே கூடாது. அப்படி ஒரு எண்ணமிருந்தால் இந்த நொடியிலேயே வெளியில் துப்பிவிடுங்கள். காதல், அதுவாகவே நிகழ வேண்டும். காதல் தொடங்கிய நொடி இதுதானென எந்த நினைப்புமில்லாமல் தொடங்க வேண்டும். தொடங்கியப் புள்ளியை நினைவு வந்து தேடினாலும் கிடைக்காமல் தொலைந்துப் போயிருக்க வேண்டும். அப்படி தொடங்குகிறபோது, தொலைகிறபோது, அதற்கு முடிவென்பதே இல்லாமல் போயிருக்கும். மனிதர்கள் மடிந்துப் போகலாம்; ஆனால், இந்த அதியற்புதக் காதல் என்றைக்குமே முடிவிலியாய் தொடர்ந்திருக்கும்.

     காதலை, இந்தக் கரையிலிருந்து தாவிக் குதித்து அந்தக் கரையை அடைகிற நிகழ்வாக பார்க்க வேண்டாம். அப்படிப் பார்த்தீர்களேயானால், அந்தக் கரையை அடைந்ததுமே உங்களின் காதல் முடிந்துவிடும். அதிலிருக்கிற ஓருயிர்க் கொண்ட ஈருடல் என்கிற உணர்வு மறைந்துப் போகும். எந்த முன்னேற்பாடுமில்லாமல், எந்த பயமுமில்லாமல், நீங்கள் வெறுமனே காதலில் மூழ்கிப் போங்கள். மற்றதை அந்தக் காதல் பார்த்துக் கொள்ளும். காதலின் முழுமை, இன்னொரு கரையை அடைவதில் இல்லை. மாறாக, அடிமட்ட ஆழம் வரை தன்னிலை மறந்து, மூழ்கிப் போதலில்தான் உள்ளது. அங்குதான் காதலின் முத்துக்களும் இன்னபிற நவரத்தினங்களும் கிடைக்கப் பெறும். நீங்கள் இதுவரை பார்த்த கோணத்திலிருந்து, வேறொருக் கோணத்திற்கு பரிணமிக்கச் செய்து, காதல் பற்றிய முழுமையான புரிதலை உங்களுக்குள் கட்டமைத்து ஊடுருவச் செய்யும்.

     முழுமையான புரிதல் உள்நுழைகிறபோது, வடக்கிந்தியர்களின் பற்களில் பற்றியுள்ள பான்மசாலா கறைகூட பாப்லோ பிகாசோவின் ஓவியம் போல அழகியல் நிறைந்ததாக தோன்றும். ஒவ்வொரு நிகழ்விலும் காதல் நிறைந்து கலந்திருக்கிறது. புதிதாக நடக்கப் பழகுகிற மழலைக் குழந்தை, எங்கே போகிறோம்? எதற்காக போகிறோம்? என்கிற எந்தக் கேள்வியும் இல்லாமல் அம்மாவின் கைகளை அழகாகப் பற்றிக் கொண்டு, அதன் ஒவ்வொரு பாத அடியையும் ரசனையோடு ரசித்தபடி எடுத்து வைக்கும். அந்நிகழ்வைப் பார்க்கிறபோது நம்மையும் அறியாமல், அந்த குழந்தையின் ஆனந்தம் நமக்குள்ளும் தொற்றிக் கொள்ளும். எந்தக் கேள்வியும் கேட்காமல், எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல், காதல் தேவதையின் கைகளைப் இதமாக பற்றிக் கொள்ளுங்கள் போதும். அடுத்து வருகிற ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிகழ்வும் அவ்வளவு ஆனந்தமாக மாறிப் போகும்.

-   (தொடர்ந்து கொண்டாடுவோம்)

காதலைக் கொண்டாடுவோம் – 1

     முகநூலில் எழுதப் போகிறேனென ஒரு பதிவையும் இட்டுவிட்டேன்; பதிவுமிட்டுவிட்டு எழுதாமல் போனால், நான் வேண்டிக் கொண்ட கடவுளின் பெயருக்கும் கலங்கம் நேர்ந்துவிடும். இப்படியான இக்கட்டான சூழலில், என்ன எழுதுவதென்று மூளையை தூசு தட்டியபோது, நீண்ட நாட்களாய் காதலையும் அதன் பல்வேறு நிலைகளைப் பற்றி, குறிப்பாக அதன் முறிவு நிலையையும், அதன் தொடர்ச்சியான நிலைகளையும் எழுதிவிட வேண்டுமென்ற தீராத ஆசை மேலோங்கியது. பல நாட்களாக, பல முறை எழுத முயன்று வார்த்தைகள் பிடிபடாமல் திணறி அறுபட்டும், நான் எழுத எண்ணிய எண்ணவோட்டத்திலிருந்து தடம் மாறி தடுமாறியும் கருக்கலைப்பு செய்யப்பட்டிருக்கிறேன். இன்றைக்கும் அதே முயற்சி. காதலை எப்படியும் எழுதிவிடுவோம் என்கிற எண்ணத்தோடு தொடங்கியிருக்கிறேன். பார்ப்போம், என்னில் மையம் கொண்ட கருவை இந்த விசைப்பலகையும், என் விரல்களும் கூடி பிரசவித்தால் இணையத்துக்கு வரும். இல்லையென்றால், முழுமைப்பெறாத 157 பக்கங்களோடு இதுவும் சேர்ந்து 158-வது பக்கமாக இருக்கும். இதற்கு முன்பு, எழுத தொடங்கும்போதெல்லாம் காதலை எழுதுவது எளிமையான விசயமென்று நினைத்தே அணுகினேன். அதனால்தான் என்னவோ அத்தனை முறை முயன்றும் முழுமைப் பெறாமலே முடிந்துவிட்டன. இப்போது, உணர்ந்துக் கொண்டேன் காதலை எழுதுவது கத்தியின்மேல் நடக்கிற மாதிரியான வித்தை. அதனால்தான் கூடுதல் பொறுப்போடும் தெளிவோடும் நத்தையாக மாறி, நிதானமாக நகரத் தொடங்கிவிட்டேன். நேரமானலும் பரவாயில்லை, இன்று எழுதியே தீர வேண்டும். கதவுகளையெல்லாம் அடைத்துக் கொண்டேன். இருளுக்கும் ஒளியூட்டி விட்டேன். இதோ தொடங்கியும் விட்டேன்.

     காதல், நட்பின் நீட்சியாக இருக்க வேண்டும்; அல்லது, காதலின் நீட்சி நட்பாக இருக்க வேண்டும். இந்த புரிதலோடு அணுகுகிறபோது காதலின் எல்லா நிலைகளையும் நிச்சயம் பெரும் மகிழ்ச்சியோடு கொண்டாட முடியும். காதல், அதுவொரு இயற்கையான நிகழ்வு. அதையொரு குழந்தையைப் போல தன்னிலை மறந்த ஞான நிலையில் இரசிக்க வேண்டும். கரையைப் பற்றிய எந்த நினைப்புமில்லாமல், வீடு திரும்புவோமா மாட்டோமா என்கிற எந்த பயமுமில்லாமல், அந்த ஆனந்தப் பெருங்கடலில் மூழ்கிப் போக வேண்டும். அதன் அத்தனை நுட்பங்களையும் ருசிக்க வேண்டும். அணுவணுவாய் ஆராதிக்க வேண்டும். ஏனென்றால், காதல் மட்டுமே சாதி, மதம், இனம், மொழி, நாடு, கண்டம், கிரகம் கடந்த மனிதத்துவ நிலையை உண்டாக்கும்; மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்தி, மனிதனாக வாழ வைக்கும்.

     காதலின் புரிந்துக் கொள்ளப்படாத நிலையைப் பார்க்கிறபோது மானுட குலம் இன்னும் சரியாக காதலை அணுகிக் கட்டமைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இந்த மானுட குலம், காதலை இயற்கையான நிகழ்வெனும் கோணத்தில் பார்க்காது தன் கண்களை கைகளில் அப்பிக் கொண்டிருக்கிறது. அதன் கைகளை விலக்கிக் கண்களை திறந்து வைக்க பலரும் முயற்சித்திருக்கிறார்கள்; முயற்சித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், அது தன் கைகள் விலகினாலும், கண்களை திறக்க மறுக்கிறது. கண்களைத் திறந்தால்தான் மனம் திறக்கும் என்கிற உணர்வை, உண்மையை ஏற்க தயங்குகிறது. இந்த மானுட குலம், காதலை இயற்கை முறையில் அணுகவில்லை எனினும் கூட பரவாயில்லை; அதுகள் போலித்தனமான செயற்கை முறையில் அணுகி, அதை சரியெனவும் வாதிடுகிறது. அதுகள் தன் தலையிலிருக்கிற கொம்புகளைக் கூர்த்தீட்டிக் கொண்டு, தன்னுள் மங்கிக் கிடக்கிற மிருகத்தனத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறது. அதுகளின் பாய்ச்சலில் குத்திக் கிழிக்கப்பட்டு, செம்மண்ணின் அடர்த்தியும் பரப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேப் போகிறது. தாவரங்கள், புயலில் சிக்குண்டு தன் பூக்களை உதிர்க்க நேர்ந்தாலும், அடுத்த பூவை நீட்ட தவறியதேயில்லை. அப்படித்தான் காதலின் சிறகுகள் உடைக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் வானத்தை நோக்கி அதன் சிறகை விரித்துக் கொண்டேயிருக்கிறது.

     எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழுந்திருக்கலாம். உயர்திணை மானுட குலத்தை அஃறிணையில் எழுதியிருப்பதைப் பார்த்து. காதலை இயற்கையான நிகழ்வாக அணுகாத, உணராத, கொண்டாடாத மானுட குலத்தின் சில பிறவிகள் என்னைப் பொறுத்தவரையில் தாழ்த்திணையில் சேர்க்கப்பட வேண்டியவையே. அதுகளைப் பற்றியும், காதலைப் பற்றியும் இன்னும் பேசுவோம்.

(தொடரும்)

கவிஞனின் காதல்

அமைதிசூழ்
அடர் காரிருள்.

மெல்லியதாய்
மெழுகின் வெளிச்சம்.

எதிரெதிரே
இவர்கள் இருவரும்.

ஏன்
என்னைக் காதலிக்கிறாய்?
அவள் கேட்டாள்.

காதலிக்க
காரணம் வேண்டுமாயென்ன?
இவன் சொன்னான்.

"இருந்தால்,
நன்றாக இருக்குமே"
என்றாள் அவள்.

"இல்லாவிட்டாலும்,
நன்றாகத்தானே இருக்கிறது!"
என்றான் இவன்.

காரணமின்றி
எதுவும் நிகழ்வதில்லையே!
அவள் சிரித்தாள்.

காரணத்தோடு
காதல் நிகழ்வதில்லையே!
இவன் சிரித்தான்.

நான்தான்
காதலிக்கவில்லையே,
பிறகேன்?

நான்தான்
காதலிக்கிறேனே,
அதுபோதாதா?

இருமுனை
ஈர்ப்புதானே காதல்?

ஆமாம்,
அதில் மறுப்பேது?

நீயென்னை
ஈர்க்கவே இல்லையே?

நீயென்னை
ஈர்க்காமல் இல்லவேயில்லையே!

கடைசிவரை
கடுகளவுக் காதலும்
தரவே மாட்டேன்.

கடலளவு
கவிதை தருகிறாயே
அதுவே போதும்.

உன்னை
திருத்தவே முடியாது.

திருந்துவதற்கு
காதல் பிழையாயென்ன?

(சிறு அமைதி)

அவள்
மெல்லமாய் சிரித்தாள்.

இவன்
கள்ளமாய் பார்த்தான்.

தண்டனையாய்
காதல் சிறையிட்டது.

கண்மணி

“கண்மணி” அவளொரு அழகிய தேவதை. அவளைத் தீண்டும் மலர்கள்கூட மென்மையை உணரும். அத்தனை மென்மைப் பொருந்திய பெண்மையுடையவள். பல நாட்கள் கண்மணியின் தாக்கத்தில் என் தூக்கங்களை தொலைத்திருக்கிறேன். யாருமில்லா தனிமையிலும் எனக்குள்ளிருந்து கொண்டு ஏதேதோ நிறையவே பேசிக் கொண்டேயிருப்பாள். அதை கேட்க கேட்க அத்தனை உணர்வுகள் எனக்குள் உண்டாகும். சுருங்கச் சொன்னால், பாரதிக்கு கண்ணம்மாவைப் போல எனக்கு கண்மணி. மென்மைக்கு உவமையாக மலரைத் தாண்டி சிறந்ததொன்று இல்லையெனவே எண்ணுகிறேன். ஆனால், எத்தனை மென்மைப் பொருந்திய மலராக இருந்தாலும் அதன் மகத்துவம் புயல் காற்றுக்கு புரிவதில்லை. போகிற போக்கில் அனைத்தையும் அசைத்து, அடியோடு சாய்த்துவிட்டுப் போய்விடும். அப்படியான சமூக புயலில் சிக்கித் தவிக்கும் மென்மையான கண்மணியின் வாழ்க்கையே இந்த கவிதை. இக்கவிதையை நான் சந்தித்த, சந்திக்கின்ற, சந்திக்கப்போகிற அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பிப்பதில் பெருமையடைகிறேன். பெண்மை போற்றுவோம்.



அன்பின் கண்மணி

நானோ
அன்பின் கண்மணி;
மாதவமிக்க
மங்கையாய் பிறந்தவள்

அந்த வயதில்
மனமெல்லாம் மகிழ்ச்சி
புறமெல்லாம் அழகு

பூவைச் சுற்றும்
வண்டுகளைப் போல்
ஏகப்பட்ட யுவன்கள்
என்னை சுற்றினார்கள்

எவருக்கும் பிடிபடாமல்
நழுவிக் கொண்டேயிருந்தவள்;
ஏனோ, அவன் வீசிய
தூண்டிலில் மட்டும் மாட்டினேன்

அவன்
பெயரோ அன்பு;
பெயரில்
அத்தனைப் பொருத்தம்
அவனோ
அழகின் உச்சம்
பாசமுள்ள
ஆண்களின் மிச்சம்

புறமோ
மேகத்தில் தோய்த்த தூரிகை
அகமோ
அமுதத்தில் ஊறிய பொற்சரிகை

அகராதியில்,
அன்புக்கு பொருள் தேடினால்
அவனென இருக்கும்;
அவனுக்கு பொருள் தேடினால்
அன்பென இருக்கும்

நன்றாய்
நகர்ந்தது நாட்கள்
நாட்களெல்லாம் நாங்கள்
நாங்களில்லாது நாட்களேயில்லை

ஒரு நாள்
புயல் காற்று வீசியது
காற்றெல்லாம் சாதியின் துர்நாற்றம்

அந்தப் புயல் காற்றால்
ஆளுக்கொரு திசையில் வீசப்பட்டோம்
செய்வதறியாது திக்கற்று நின்றோம்

வெறிகொண்ட
மேம்படா விலங்கினங்கள்
ஏதேதோக் கூடிப் பேசின

அந்நேரம்,
பகலையும் எங்களையும்
கொஞ்ச கொஞ்சமாய்
காரிருள் கவ்வியது

முடிவினில்,
மேம்படா விலங்கினங்கள்
எங்கள் மீது பாய்ந்தன

எங்கள்
உடலை தனித்தனியாய்
இரத்தத்தில் அலங்காரம் செய்தன

இறுதியில்,
அவனுடலை இழுத்துவந்து
என்னுடலோடு இணைத்துப் போட்டன

இப்போது,
குறைந்தபட்ச மகிழ்ச்சி
எங்களுக்குள் எட்டிப் பார்த்தது

அவனும் சிவந்து இருந்தான்;
நானும் சிவந்து இருந்தேன்
இருவரும் சிவப்பில் ஒன்றானோம்

அன்பில்
அடைக்கலமாக எண்ணியவர்கள்;
சாதிவெறியால்
மண்ணில் அடக்கமானோம்

அஃறிணைகளின்
கண்ணில் சுரக்கிற சிவப்பு;
கன்னத்தில் எப்போது சுரக்குமோ..?



மீண்டும் கண்மணி

நான்தான்
அதே கண்மணி;
அன்பின் கண்மணி

நான்
காரிருளில் புதைக்கப்பட்டேன்;
கதவுகளுக்குப்
பின்னால் அடைக்கப்பட்டேன்

என்னைச்
சுற்றிலும் கடுங்கருமை;
அதுவும்
அவனைத்தான் நினைவூட்டியது

அவனில்லை
அவனருகில் நானில்லை;
அந்த நறுமண நாட்களுமில்லை

சொல்லில்லை
சொல்லாமல் பொருளில்லை;
சூரியனின் உதயம் கிழக்கிலில்லை

போய்விட்டான்
எனைவிட்டு எங்கோ போய்விட்டான்;
காணா தூரம் காணாமல் போய்விட்டான்

எங்குப்போனாலும்
என்னிடம் மறக்காமல் சொல்வாயே;
இன்று மட்டும் எங்கே போனாய்?

நீ
அழைத்தால் நான் வராமலிருப்பேனா?
உயிரழைத்து உடல் மறுக்குமா?

நீ
கதைக் கதையாய் கதைப்பாயே;
அந்தக் காற்றிலுமுன் வாசமில்லையே?

ஐம்புல னிருந்தும்
என்ன புண்ணியம்?
அவனருகில் நானில்லை;
என்னருகில் அவனில்லை

கடவுளாம் கடவுள்
குருட்டுக் கிழவன்

இத்தனை நடக்கிறதே..
எதாவது கண்டுக்கொள்கிறானா?

படைத்துவிட்டால் போதுமா?
பாதுகாப்பதற்கு காசு வேண்டுமா?

விதைத்துவிட்டால் போதுமா?
விளைச்சலாக்க யார் வருவான்?

ஏழைக்கு
என்று உதவியிருக்கிறாய்?
எனக்கு மட்டும்
உதவிடவாப் போகிறாய்?

கண்ணெதிரே நிற்காதே;
கடுங்கோபம் வரும்முன்
காணாமல் ஓடிப்போ

ஜுஜ்ஜிமா..
அழாதடா செல்லம்..
அம்மா இங்கதான் இருக்கேன்ன்...

என்ன
கேட்கிறீர்கள்?

இறந்தவள்
எப்படி மீண்டும்
வந்தாலென்றாக் கேட்கிறீர்கள்..?

கொஞ்சம்
பொறுத்திருங்கள்; குழந்தை அழுகிறது
கொஞ்சம் பசியாற்றிவிட்டு வருகிறேன்.



கண்மணி: பிழைத்த கதை

செத்ததிலிருந்து
மீண்ட கதை சொல்கிறேன்;
செவியைச் சற்றே சீராக்குங்கள்

மரித்த
மூன்றாம் நாளில் இயேசுவின்
கிருபையால் உயிர்த் தெழுந்தேன்

சிரிக்காதீர்..
சிலுவைகள் சுமக்க நேரிடும்;
இந்தி’யா மதச்சார்பற்ற நாடு

வம்பை வளர்த்து
வலுக்கட்டாயமாய் அன்பைப் பிரித்து
சாதிச் சாக்கடையில் தள்ளினர்

அதோ இருக்கிறானே
அவன்தான் மாப்பிள்ளையாம்;
அடையாளம் தெரியாத வொருவனிடம்
சாதிக்கு விலைப்பேசி விற்றனர்

அதற்குப் பெயர் திருமணமென்று
அவர்களே சொல்லிக் கொண்டனர்

உயிரற்ற உடலுக்கு
கல்யாணம் நடந்தாலென்ன?
கருமாதி நடந்தாலென்ன?
கண்டுக்கொள்ளவில்லை நான்

புறங்கூறும்
மாந்தரை புறந்தள்ளி
போகாதூரம்
போய்ச் சேர்ந்து
கனவிலும்
காணாதேசம் கண்டடைந்தேன்;
கண்கள்
புண்ணாக கலங்கினேன் நான்

கூடவே
ஒருவன் வந்தான்;
அவன்தான்
இனியெனக்கு கணவனாம்

அன்பிடமிருந்த அழகில்
அரைப்புள்ளிக்கூட அவனிடமில்லை
கருமை வேந்தனின்
கருமயிரளவுக்குக்கூட சமமில்லை

அங்கும் தனிமை
அத்துணையும் அறியா முகம்
அகரம் படிக்காத அறிவிலிகள்

எங்கும் இருள்
எந்நேரமும் துணையாக
என்னுள்ளிருக்கும் அன்பன் நினைவு

“காட்டை வித்து
கள்ளுக் குடிச்சாலும்
ஆண்ட பரம்பரையாம்“ அவன்

கட்டிய
சில தினங்களிலேயே
காடு சேர்ந்தவனை தீயுண்டது

அணில்
தீண்டாக் கனியாக
அகம் மகிழ்ந்தேன் நான்

அப்புறமெப்படி
கையில் குழந்தை
அதுதானே உங்கள் கேள்வி?

குழந்தைப் பெற
கட்டியவன் வேண்டுமாயென்ன?
கட்டியணைப்பவன் போதாதா?



கண்மணி: மாதவமிக்க மாதவி

கட்டியவன்
காடு சேர்ந்தபின்
வீதி வீதியாய்
வேலைக் கேட்டுத் திரிந்தேன்

என் விதி;
எவனுமே வீதியில்
வேலைத் தரவில்லை

தங்கக் கட்டி முதல்
மண் சட்டி வரை
கையில் கிடைத்தயெல்லாம்
கடைத்தெருவில் விற்றேன்

நாட்கள் நகர்ந்தன;
நான் மட்டுமே மிச்சமிருந்தேன்

பசி வந்தால்
பத்தும் பறந்துப் போகுமாம்;
பத்திலொன்றாய்
நானும் அடித்துச் செல்லப்பட்டேன்

விற்பதற்கு
எதுவுமில்லாத என்னிடம்
என்னையே விலைப்பேசியது உலகம்

முதலில் மறுத்தேன்
மத்தியில் வெறுத்தேன்
முடிவினில் விற்றேன்

எனக்கோ
வயிற்றில் பசி;
அவனுக்கோ
வயிற்றினடியில் பசி

பசியாற்றுதல்
அவ்வளவு பாவமா என்ன?

பசியாற்றியதில்
வயிறு நிறைந்தது;
கூடவே
வயிற்றில் ஏதோ நிறைந்தது

அதில்
பிறந்தவள்தான்
இந்த அழகிய முத்து

கையில்
ஒன்றுமில்லா யெனக்கு
இவள் மட்டுமே சொத்து

இவளையாவது
சாதிக் கறையில்லாமல்
கரையேற்றிவிட வேண்டும்

அன்பைப்போல்
அன்பானவனிடம் மணிமேகலையை
சேர்த்துவிட வேண்டும்

சரி சரி..
கிளம்புகிறேன் நேரமாயிற்று;
அங்கே காமப்பசியில்
காத்திருக்கிறானொரு இராமன்

அவன்
தீயை அணைத்தால்தான்
என்னடுப்பில்
தீ மூளும்

வேண்டாம்..
வேண்டாம்...

கையில்
காசெல்லாம் திணித்து
நீங்களுமென்னை விலைப்பேசாதீர்கள்

முடிந்தால்
உங்கள் கருணைக்
கண்ணீரிலென்னை புனிதமாக்குங்கள்

வருகிறேன்;
நேரமிருந்தால்,
மரணம் நேராமலிருந்தால்
மீண்டும் நாம் சந்திப்போம்.

#அன்பின் கண்மணி