கண்மணி

“கண்மணி அவளொரு அழகிய தேவதை. அவளைத் தீண்டும் மலர்கள்கூட மென்மையை உணரும். அத்தனை மென்மைப் பொருந்திய பெண்மையுடையவள். பல நாட்கள் கண்மணியின் தாக்கத்தில் என் தூக்கங்களை தொலைத்திருக்கிறேன். யாருமில்லா தனிமையிலும் எனக்குள்ளிருந்து கொண்டு ஏதேதோ நிறையவே பேசிக் கொண்டேயிருப்பாள். அதை கேட்க கேட்க அத்தனை உணர்வுகள் எனக்குள் உண்டாகும். சுருங்கச் சொன்னால், பாரதிக்கு கண்ணம்மாவைப் போல எனக்கு கண்மணி. மென்மைக்கு உவமையாக மலரைத் தாண்டி சிறந்ததொன்று இல்லையெனவே எண்ணுகிறேன். ஆனால், எத்தனை மென்மைப் பொருந்திய மலராக இருந்தாலும் அதன் மகத்துவம் புயல் காற்றுக்கு புரிவதில்லை. போகிற போக்கில் அனைத்தையும் அசைத்து, அடியோடு சாய்த்துவிட்டுப் போய்விடும். அப்படியான சமூக புயலில் சிக்கித் தவிக்கும் மென்மையான கண்மணியின் வாழ்க்கையே இந்த கவிதை. இக்கவிதையை நான் சந்தித்த, சந்திக்கின்ற, சந்திக்கப்போகிற அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பிப்பதில் பெருமையடைகிறேன். பெண்மை போற்றுவோம்.



அன்பின் கண்மணி

நானோ
அன்பின் கண்மணி;
மாதவமிக்க
மங்கையாய் பிறந்தவள்

அந்த வயதில்
மனமெல்லாம் மகிழ்ச்சி
புறமெல்லாம் அழகு

பூவைச் சுற்றும்
வண்டுகளைப் போல்
ஏகப்பட்ட யுவன்கள்
என்னை சுற்றினார்கள்

எவருக்கும் பிடிபடாமல்
நழுவிக் கொண்டேயிருந்தவள்;
ஏனோ, அவன் வீசிய
தூண்டிலில் மட்டும் மாட்டினேன்

அவன்
பெயரோ அன்பு;
பெயரில்
அத்தனைப் பொருத்தம்
அவனோ
அழகின் உச்சம்
பாசமுள்ள
ஆண்களின் மிச்சம்

புறமோ
மேகத்தில் தோய்த்த தூரிகை
அகமோ
அமுதத்தில் ஊறிய பொற்சரிகை

அகராதியில்,
அன்புக்கு பொருள் தேடினால்
அவனென இருக்கும்;
அவனுக்கு பொருள் தேடினால்
அன்பென இருக்கும்

நன்றாய்
நகர்ந்தது நாட்கள்
நாட்களெல்லாம் நாங்கள்
நாங்களில்லாது நாட்களேயில்லை

ஒரு நாள்
புயல் காற்று வீசியது
காற்றெல்லாம் சாதியின் துர்நாற்றம்

அந்தப் புயல் காற்றால்
ஆளுக்கொரு திசையில் வீசப்பட்டோம்
செய்வதறியாது திக்கற்று நின்றோம்

வெறிகொண்ட
மேம்படா விலங்கினங்கள்
ஏதேதோக் கூடிப் பேசின

அந்நேரம்,
பகலையும் எங்களையும்
கொஞ்ச கொஞ்சமாய்
காரிருள் கவ்வியது

முடிவினில்,
மேம்படா விலங்கினங்கள்
எங்கள் மீது பாய்ந்தன

எங்கள்
உடலை தனித்தனியாய்
இரத்தத்தில் அலங்காரம் செய்தன

இறுதியில்,
அவனுடலை இழுத்துவந்து
என்னுடலோடு இணைத்துப் போட்டன

இப்போது,
குறைந்தபட்ச மகிழ்ச்சி
எங்களுக்குள் எட்டிப் பார்த்தது

அவனும் சிவந்து இருந்தான்;
நானும் சிவந்து இருந்தேன்
இருவரும் சிவப்பில் ஒன்றானோம்

அன்பில்
அடைக்கலமாக எண்ணியவர்கள்;
சாதிவெறியால்
மண்ணில் அடக்கமானோம்

அஃறிணைகளின்
கண்ணில் சுரக்கிற சிவப்பு;
கன்னத்தில் எப்போது சுரக்குமோ..?



மீண்டும் கண்மணி

நான்தான்
அதே கண்மணி;
அன்பின் கண்மணி

நான்
காரிருளில் புதைக்கப்பட்டேன்;
கதவுகளுக்குப்
பின்னால் அடைக்கப்பட்டேன்

என்னைச்
சுற்றிலும் கடுங்கருமை;
அதுவும்
அவனைத்தான் நினைவூட்டியது

அவனில்லை
அவனருகில் நானில்லை;
அந்த நறுமண நாட்களுமில்லை

சொல்லில்லை
சொல்லாமல் பொருளில்லை;
சூரியனின் உதயம் கிழக்கிலில்லை

போய்விட்டான்
எனைவிட்டு எங்கோ போய்விட்டான்;
காணா தூரம் காணாமல் போய்விட்டான்

எங்குப்போனாலும்
என்னிடம் மறக்காமல் சொல்வாயே;
இன்று மட்டும் எங்கே போனாய்?

நீ
அழைத்தால் நான் வராமலிருப்பேனா?
உயிரழைத்து உடல் மறுக்குமா?

நீ
கதைக் கதையாய் கதைப்பாயே;
அந்தக் காற்றிலுமுன் வாசமில்லையே?

ஐம்புல னிருந்தும்
என்ன புண்ணியம்?
அவனருகில் நானில்லை;
என்னருகில் அவனில்லை

கடவுளாம் கடவுள்
குருட்டுக் கிழவன்

இத்தனை நடக்கிறதே..
எதாவது கண்டுக்கொள்கிறானா?

படைத்துவிட்டால் போதுமா?
பாதுகாப்பதற்கு காசு வேண்டுமா?

விதைத்துவிட்டால் போதுமா?
விளைச்சலாக்க யார் வருவான்?

ஏழைக்கு
என்று உதவியிருக்கிறாய்?
எனக்கு மட்டும்
உதவிடவாப் போகிறாய்?

கண்ணெதிரே நிற்காதே;
கடுங்கோபம் வரும்முன்
காணாமல் ஓடிப்போ

ஜுஜ்ஜிமா..
அழாதடா செல்லம்..
அம்மா இங்கதான் இருக்கேன்ன்...

என்ன
கேட்கிறீர்கள்?

இறந்தவள்
எப்படி மீண்டும்
வந்தாலென்றாக் கேட்கிறீர்கள்..?

கொஞ்சம்
பொறுத்திருங்கள்; குழந்தை அழுகிறது
கொஞ்சம் பசியாற்றிவிட்டு வருகிறேன்.



கண்மணி: பிழைத்த கதை

செத்ததிலிருந்து
மீண்ட கதை சொல்கிறேன்;
செவியைச் சற்றே சீராக்குங்கள்

மரித்த
மூன்றாம் நாளில் இயேசுவின்
கிருபையால் உயிர்த் தெழுந்தேன்

சிரிக்காதீர்..
சிலுவைகள் சுமக்க நேரிடும்;
இந்தியா மதச்சார்பற்ற நாடு

வம்பை வளர்த்து
வலுக்கட்டாயமாய் அன்பைப் பிரித்து
சாதிச் சாக்கடையில் தள்ளினர்

அதோ இருக்கிறானே
அவன்தான் மாப்பிள்ளையாம்;
அடையாளம் தெரியாத வொருவனிடம்
சாதிக்கு விலைப்பேசி விற்றனர்

அதற்குப் பெயர் திருமணமென்று
அவர்களே சொல்லிக் கொண்டனர்

உயிரற்ற உடலுக்கு
கல்யாணம் நடந்தாலென்ன?
கருமாதி நடந்தாலென்ன?
கண்டுக்கொள்ளவில்லை நான்

புறங்கூறும்
மாந்தரை புறந்தள்ளி
போகாதூரம்
போய்ச் சேர்ந்து
கனவிலும்
காணாதேசம் கண்டடைந்தேன்;
கண்கள்
புண்ணாக கலங்கினேன் நான்

கூடவே
ஒருவன் வந்தான்;
அவன்தான்
இனியெனக்கு கணவனாம்

அன்பிடமிருந்த அழகில்
அரைப்புள்ளிக்கூட அவனிடமில்லை
கருமை வேந்தனின்
கருமயிரளவுக்குக்கூட சமமில்லை

அங்கும் தனிமை
அத்துணையும் அறியா முகம்
அகரம் படிக்காத அறிவிலிகள்

எங்கும் இருள்
எந்நேரமும் துணையாக
என்னுள்ளிருக்கும் அன்பன் நினைவு

“காட்டை வித்து
கள்ளுக் குடிச்சாலும்
ஆண்ட பரம்பரையாம்“ அவன்

கட்டிய
சில தினங்களிலேயே
காடு சேர்ந்தவனை தீயுண்டது

அணில்
தீண்டாக் கனியாக
அகம் மகிழ்ந்தேன் நான்

அப்புறமெப்படி
கையில் குழந்தை
அதுதானே உங்கள் கேள்வி?

குழந்தைப் பெற
கட்டியவன் வேண்டுமாயென்ன?
கட்டியணைப்பவன் போதாதா?



கண்மணி: மாதவமிக்க மாதவி

கட்டியவன்
காடு சேர்ந்தபின்
வீதி வீதியாய்
வேலைக் கேட்டுத் திரிந்தேன்

என் விதி;
எவனுமே வீதியில்
வேலைத் தரவில்லை

தங்கக் கட்டி முதல்
மண் சட்டி வரை
கையில் கிடைத்தயெல்லாம்
கடைத்தெருவில் விற்றேன்

நாட்கள் நகர்ந்தன;
நான் மட்டுமே மிச்சமிருந்தேன்

பசி வந்தால்
பத்தும் பறந்துப் போகுமாம்;
பத்திலொன்றாய்
நானும் அடித்துச் செல்லப்பட்டேன்

விற்பதற்கு
எதுவுமில்லாத என்னிடம்
என்னையே விலைப்பேசியது உலகம்

முதலில் மறுத்தேன்
மத்தியில் வெறுத்தேன்
முடிவினில் விற்றேன்

எனக்கோ
வயிற்றில் பசி;
அவனுக்கோ
வயிற்றினடியில் பசி

பசியாற்றுதல்
அவ்வளவு பாவமா என்ன?

பசியாற்றியதில்
வயிறு நிறைந்தது;
கூடவே
வயிற்றில் ஏதோ நிறைந்தது

அதில்
பிறந்தவள்தான்
இந்த அழகிய முத்து

கையில்
ஒன்றுமில்லா யெனக்கு
இவள் மட்டுமே சொத்து

இவளையாவது
சாதிக் கறையில்லாமல்
கரையேற்றிவிட வேண்டும்

அன்பைப்போல்
அன்பானவனிடம் மணிமேகலையை
சேர்த்துவிட வேண்டும்

சரி சரி..
கிளம்புகிறேன் நேரமாயிற்று;
அங்கே காமப்பசியில்
காத்திருக்கிறானொரு இராமன்

அவன்
தீயை அணைத்தால்தான்
என்னடுப்பில்
தீ மூளும்

வேண்டாம்..
வேண்டாம்...

கையில்
காசெல்லாம் திணித்து
நீங்களுமென்னை விலைப்பேசாதீர்கள்

முடிந்தால்
உங்கள் கருணைக்
கண்ணீரிலென்னை புனிதமாக்குங்கள்

வருகிறேன்;
நேரமிருந்தால்,
மரணம் நேராமலிருந்தால்
மீண்டும் நாம் சந்திப்போம்.

#அன்பின் கண்மணி