கர்ப்ப காலம்

“மென்தென்றல் காற்றின் மோகமுத்த மோதலில் சிணுங்கும் தென்னங்கீற்றின் வழியே வழிகிறது பால் நிலா. காரிருள் திட்டுக்கள் கலந்திட்ட கருமை வானத்தின் வெள்ளைப் பற்களைப்போல மின்னுகிறது விண்மீன் திரள்கள். நிலவின் வெளிச்சத்தில் பனித்துகள்கள் ஒளித்துகள்களாக சிந்துகிறப் பொழுதில் அத்தனை ரம்மியம். இன்னிசைக் குரலில் இயற்கை என்னுடன் பேசுவதைப் போன்றதொரு உணர்வு. அது என் காதுகளுக்குள் நுழைந்து, இல்லாத மூளையின் மூலையில் மென்தூண்டலால் படிமங்களை உயிர்ப்பிக்கச் செய்து, விரல்களின் கட்டியணைப்பில் சிக்கித்தவிக்கும் சில்வர் நிற மெட்டாலிக் பேனாவின் வழியே கிறுக்கல்களாக வழிந்துக் கொண்டிருக்கிறது“.

இப்படியாக பாரதியின் கற்பனையை திருட்டுத்தனமாய் களவாடி, வர்ணனையுடன் எழுதுவதற்கு இம்மியளவுகூட எந்தவித பொருத்தமுமில்லாத எதிர்மாறான சூழலில் எழுதிக் கொண்டிருக்கிறேன். அப்படி என்னதான் எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? இத்தனை நாட்களாக ஏன் எழுதவில்லையென்று எழுதிக் கொண்டிருக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் இத்தனை நாட்களாய் நான் எழுதாமலில்லை. தினந்தோறும் நிறைய எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நிறைய எழுதினாலும் நிறைவாய் எது எழுதுகிறேனோ, அதை மட்டுமே உங்களின் அற்புத(பூத) கண்களுக்கு விருந்தாக்குவதுதான் என் வழக்கம். ஏனென்றால், “சமைக்கும் பூதத்தின் கண்களே ருசிக்காத எழுத்துக்களை வேறெந்த பூதத்தின் கண்களும் ருசிக்காது“ என்பதில் பெருத்த நிலைப்பாடுடையவன் நான். நிறைய எழுதினாலும் நிறைவாய் எழுதமுடியாதது ஏனென என்னை நோக்கி நானே ஏவிய கேள்வி தோட்டாக்களுக்கெல்லாம் பதில் தராமல் பல காலமாய் மௌனமாயிருந்த மனம், இன்றுதான் பதிலை தந்தது. அதன் நீட்சியின் நிழலில்தான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.

கருமுட்டையை நோக்கிப் புறப்படுகிற பல கோடி உயிரணுக்களில் ஏதோவொன்று மட்டும் கருப்பைக்குள் கருவாகி, கை கால் முளைத்த கனியமுத குழந்தையாகி, நிறைமாதத்தில் நீந்திவந்து பிரசவிப்பதைப்போல என் மூளையை நோக்கிப் படையெடுக்கிற ஆயிரமாயிரம் சிந்தனையணுவில் ஏதோவொன்றுதான் மூளைப்பைக்குள் கருவாகி, காட்சியும் கற்பனையும் மெருகேறி, நிறைவான படைப்பாய் வெளிவருகிறது. மற்றவையெல்லாம் நிறைமாதம் நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றன.

தற்கால அறிவியல் மேதாவிகள் என்கிற அடிமுட்டாள்கள், கார்மேகத்தில் கலவையான இரசாயனம் கொட்டி, அவசரத்தில் அதன் அடிவயிற்றை அறுத்தெடுத்து அமிலமழையைப் பெறுவதைப்போல, கருவிலிருக்கிற படைப்பின் காலம் முதிரும்முன்னே அதன் கழுத்தைப் பிடித்திழுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. கர்ப்ப காலம் கனிகிறபோது கண்டிப்பாய் அது அடைமழையாக இல்லாவிடினும் ஆலங்கட்டியாகவாவது பொழியுமென நம்புகிறேன். அதுவரை உங்களோடு நானும் அமுதமழையில் நனைய ஆவலோடு காத்திருக்கிறேன்.