மனதின் பாரம்

சில மாதங்களாய், ஆராய்ச்சி வேலைகளையெல்லாம் கொஞ்சம் ஓரம் ஒதுக்கி வைத்துவிட்டு, வார இறுதியில் வீட்டுக்குச் சென்றுவிடுவது வழக்கம். தனிமையிலேயே இருந்து வாழ்க்கை மிகவும் வெறுப்பாகிவிட்டது. காலமானது நண்பர்களையும் ஒவ்வொரு திசைக்குச் சுழற்றியடிக்க, அவரவர்கள் ஒரு மூலையில். ஊரில் இப்போது நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளுமளவிற்கு அரிதானவர்களே உண்டு. அதனால், வீட்டுக்குச் சென்றாலும் விடுதியில் இருப்பதைப் போலவே நன்றாக சாப்பிட்டுவிட்டு, தாத்தா செய்துக் கொடுத்த கயிற்றுக் கட்டிலில் உறங்குவதும், மீண்டும் எழுந்து சாப்பிடுவதும், மீண்டும் உறங்குவதும்தான் நான் செய்யக்கூடிய அதிகபட்சமாக வேலை. இதைத் தாண்டியும் பெரிதாக வேறெந்த வேலையுமில்லை.

வார இறுதியை வீட்டில் கழிப்பது எவ்வளவு நிம்மதியானது என்பது என்னைபோன்று வெளியூர்களில் வேலைச் செய்பவர்களுக்குத்தான் தெரியும். நகரத்தில் ஆகச் சிறந்த வசதிகள் இருந்தாலும், சொந்த கிராமத்தில் பச்சைப்பசும் புல்வெளிச் சூழலில், அதன் மிளிரும் அழகினை ரசித்தவாறே நடக்கிறபோது கிடைக்கிற இன்பத்திற்கு எதுவும் ஈடாகாது. இந்த இன்பத்தை வார்த்தையில் சொல்ல முயல்வதும் கொஞ்சம் கடினம்தான். 



வழக்கம்போல், வார இறுதியை நிம்மதியாய் அப்பா அம்மாவுடன் செலவழித்துவிட்டு, நகரம் நோக்கிப் பயணப்பட, தேவையான ஆடைகளையும் பொருட்களையும் பையில் துருத்தி, தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு தயாராகி வெளியே வந்தேன். பையின் பாரம் தாங்கவில்லை. பொதிச் சுமக்கிற கழுதையைப் போல, கடினப்பட்டு முதுகில் ஏற்றிக் கொண்டேன். அம்மா வெளியே வந்து இன்முகத்தோடு வழியனுப்பினார். நானும் பிரியா விடைப்பெற்று, பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கலானேன்.

என்னெதிரே தூரத்தில் ஒரு அக்கா வருவது தெரிந்தது. எதையும் கண்டுக் கொள்ளாமல், அலைப்பேசியில் உலவியவாறே இன்னும் கொஞ்ச தூரம் கடந்தேன். ஆனால், எதிரே வந்த அந்த அக்காவைக் காணவில்லை. வேறு எங்கேயும் செல்வதற்கு வழியுமில்லை; எங்கே சென்றிருப்பார் என யோசித்துக் கொண்டே முன்னோக்கி நடந்தேன். சிறிது நேரத்தில், யாரோ எனக்கு பின்பக்கமாக நடந்துச் செல்வதைப் போல உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தால் அதே அக்காதான். கழுத்தில் தாலி இல்லை; நெற்றியில் குங்குமம் இல்லை; கைகளில் வளையலில்லை. எதிரில் வந்தால் எங்கே அபசகுனமாகிவிடுமோ என்று ஓரமாய் ஒதுங்கி நின்றிருந்து, நான் கடந்ததும் சென்றிருக்கிறார். இப்போதுதான் எனக்கு அபசகுனமாக தோன்றியது. எத்தனை மாற்றங்கள் வந்தாலும், இதுபோன்ற மூடநம்பிக்கைகள் இன்னும் மாறாமல் இருப்பதை நினைத்து, மனம் வலித்தது. முதுகின் பாரத்தைவிட, மனதின் பாரம் அதிகமானது.

அவள்
எதிரே வந்தபோது
அபசகுனமாக தோன்றவில்லை

அவள்
ஒதுங்கி வழிவிட்டதும்
சுபசகுனமாக தோன்றவில்லை.

Photo Courtesy: http://www.keetru.com