காதல்: முன்னொரு காலத்தில்

முதன்முதலில் உயிர்களின் தொடக்கம், கடலிலிருந்தே தொடங்கியது என்கிறார்கள் படித்த மாமேதைகள். என்னைப் போன்ற சாமானியனைக் கேட்டால், காதலிலிருந்தே தொடங்கியது என்பேன். எப்படி என்றொரு வினா உங்களுக்குள் எழலாம். அதற்கான விளக்கங்களைத் தருவதே என்னுடைய ஆகச்சிறந்த கடமைகளில் தலையாய ஒன்று. எல்லோரும் என்னுடைய காலச் சக்கரத்தில் ஏறிக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், நாம் காதலைப் பற்றிப் புரிந்துக் கொள்ளவதற்கு, சில கோடி ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லப் போகிறோம். கண்மணி..! கிளம்பலாம்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால். காலைப் பொழுது, நேரம் சரியாக எட்டு மணி, 5,6,7,8,...நொடிகள். இந்தாங்க, எல்லோரும் இந்த தொழில்நுட்பமிக்க கண்ணாடியை மாட்டிக் கொள்ளுங்கள். அங்கே தெரிவதுதான் குவார்க் (Quark). குவார்க் என்பது இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிக நுண்ணிய அடிப்படைப் பொருள். குவார்க்குகளுக்கிடையில் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக வேதிப்பிணைப்பு உண்டாகி, துகளாக (Particle) மாற்றமடைந்தது. மாற்றமடைந்த, இந்த துகள்கள்தான் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் என்பவைகள். இந்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் போன்ற துகள்களுக்கிடையில் உண்டான ஈர்ப்பின் காரணமாக, அணு (Atom) என்கிற ஒரு கூட்டமைப்பு உருவானது. அணுக்களுக்களுக்கிடையில் உண்டான  ஈர்ப்பின் காரணமாக, மூலக்கூறு (Molecule) என்கிற வேதிச் சேர்ம்ம் உண்டானது. மூலக்கூறுகளுக்கிடையில் உண்டான ஈர்ப்பின் காரணமாக, ஒரு செல் உயிரி (Cell) உண்டானது. ஒரு செல் உயிரிகளுக்கிடையில் உண்டான ஈர்ப்பின் காரணமாக, பல செல் உயிரிகளான தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் இன்னபிற உயிர்களெல்லாம் உண்டானது.

குவார்க் துகள் அணு மூலக்கூறு ஒரு செல் உயிரி பல செல் உயிரி


ஒரு செல் உயிரி என்கிற நிலையை அடையவே பல கோடி ஆண்டுகள் ஆனதாம். இந்த ஒரு செல் உயிரி என்கிற நிலையிலிருந்து நம்மைப் போன்ற பல செல் உயிரி என்கிற நிலை உண்டாக இன்னும் சில கோடி ஆண்டுகள் தேவைப்பட்டதாம். உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், எல்லா மூலக்கூறுகளும் ஒரு செல் உயிரியாக மாறுமா என. கண்டிப்பாக மாறாது; ஏனென்றால், சரியான சூழல் இருந்தால் மட்டுமே ஒரு நிலையில் இருந்து, இன்னொரு நிலைக்கு மாற்றமடையும். எல்லா கரித்துண்டுகளும் வைரமாகிவிடாதல்லவா, அதைப் போலத்தான்.

காலச் சக்கரத்தில் மீண்டும் முன்னோக்கிப் பயணம். இன்றைய நாள், இந்த நேரம். இப்படியாக குவார்க்கிலிருந்து குரங்கு வரை (மன்னிக்கவும்) மனிதன் வரை, அனைத்திற்கும் இடையில் ஈர்ப்பு என்கிற கண்டுக்கொள்ள முடியாத விசை அல்லது சக்தி இன்னமும் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. மனிதனைத் தாண்டி இன்னொரு உயிரி உண்டானாலும், அதற்கிடையிலும் கண்டிப்பாக இந்த ஈர்ப்பு தொடர்ந்து நிலைக்குமென்பதில் எந்தவித ஐயமும் எனக்கில்லை.

குவார்க்கிலிருந்து குரங்கு வரை (இப்போது, சரியாகத்தான் சொல்கிறேன்), இந்த ஈர்ப்பின் பெயர் “காதல் என்றெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆனால், பின்னாளில் வந்த மேம்பட்ட குரங்கு இனமான மனிதர்கள்தான் அதற்கு “காதல் என்று பெயர் வைத்தனர். அந்தக் காதல்தான் குவார்க்கிலிருந்து, நம்மை மேம்பட்ட உயிரினமாக மாற்றியிருக்கிறது. ஒரு குவார்க்கிற்கும் இன்னொரு குவார்க்கிற்கும் இடையில் காதல் மலராமல் போயிருந்தால், நாம் இன்று உருவாகியே இருக்க மாட்டோம்.

இப்போது சொல்லுங்கள். உயிர்கள் தோன்றியது கடலிலா? அல்லது காதலிலா?. கொஞ்சம் சத்தமாக சொல்லுங்கள், சரியாக கேட்கவில்லை. ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான், உயிர்கள் தோன்றியது “காதல் கடலில்தான்.

பின்குறிப்பு:
முரட்டுச் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருந்த நம்முடைய The Great-Great Grandpa குவார்க்கிற்கு, இந்த 90's, 2K Kids-களைப்போல எந்தவித பந்தாவும் பண்ணாமல், காதலை ஏற்றுக் கொண்டு வாழ்க்கை தந்த The Great-Great Grandma குவார்க்கிற்கு கோடான கோடி நன்றிகள். காலமுள்ளவரை, காதல் வாழ்க!