பாறை நடுவே நான்


எத்தனை மின்னல்
எத்தனையெத்தனை இடி
இதற்கிடையில் மரணிக்கும் வலியோடு
பிரசவித்ததென்னை இந்த மேகம்.

தூய்மை குறையாது
சிப்பிக்குள் விழ வேண்டினேன்;
திசையில்லா நதியாய்
தேசந்தோறுந் திரிய வேண்டினேன்;
அலைக் கடலில்
ஆனந்தமாய் ஐக்கியாக வேண்டினேன்;
இன்னு மின்னும்
என்னன்னவோ ஏராளமாய் கனவுகள்;
எதுவும் நடக்கவில்லை.

காற்று சதி செய்தது;
கடும்பாறை நடுவே
கொண்டுச் சேர்த்தது.

வெளியேற நினைத்தேன்;
விடவில்லை யிந்த விதி
கரையேற நினைத்தேன்;
காலம் செய்தது சதி.

செய்வதறியாது
கலங்கி நின்றேன்;
வெண்தாமரை
வேரூன்றியது ஆழத்தில்.

ஆனந்தப்பட்டேன்;
பூவாகயென்னை வெளிக்காட்டினேன்.

உலகமென்னை
இரசித்துக் கொண்டாடுமென நினைத்தேன்;
அதுவும் நடந்தது.

ஆனால்,
முடிவினில் அடியோ டென்னை
பறித்துக் கொண்டது.

இருந்தும்,
அடுத்தப் பூவை நீட்டினேன்;
அதையும் பறித்துக் கொண்டது.

மீண்டுமீண்டும் நீட்டினேன்;
மீண்டுமீண்டும் பறித்துக் கொண்டது.

இனியும் ஈன்றுக் கொடுக்க
என்னிடம் எதுவுமில்லாமல் மலடானேன்;
கொடுத்தாலும் இரசிக்கிற பாவனையில்
பறிக்கவே காத்திருந்தது உலகம்.

மறுபடியும் கலங்கினேன்;
அழுக்கானேன்; அசுத்தமானேன்.

துர்நாற்றம் வீசியது;
என்மீதெனக்கே வெறுப்பானது.

மாண்டுப் போகவும் மனமில்லாது
மீட்டெடுக்க எதிர்நோக்கி காத்திருந்தேன்.

சூரியனதன் உதவிக்கரங்களை நீட்டியது;
தன்னோடு அணைத்துக் கொண்டது;
மேகத்திடம் மீண்டும் சேர்த்தது.

அதே மின்னல்,
அதே இடி,
இதற்கிடையில்
மீண்டும் பிறந்தேன்.

மீண்டும்
அதே கனவுகள்.

மீண்டும்
அதே காற்றின் சதி.

இப்போது
வேறொருப் பாறை.

மீண்டும்
கலங்கி நிற்கிறேன்.