எச்சம்

மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்

காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து,
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளரம் வழியே
நுழைந்து சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.
- கவிக்கோ அப்துல் இரகுமான்

அடடா! எத்தனை அர்த்தங்கள் பொதிந்த வரிகள் இவை. எச்சரிக்கை மணிகளை அலறவிட்டு, காரிருள் களைவதற்குமுன் கண் திறந்து, சக்கரக் கால்களில் இந்த நாளுக்கான ஓட்டத்தைச் சுழற்றி, மீண்டும் காரிருள் போர்த்தியப் பின்னிரவில் துயிலி, மீண்டும் அடுத்த நாளுக்கான ஓட்டத்தைத் தொடர்வதா வாழ்க்கை?. ஒரு முறையாவது நிதானித்து நின்று, ஒரு நொடியாவது யோசித்ததுண்டா உங்கள் வாழ்வின் பொருளென்னவென்று?. சிறிது நிதானியுங்கள். உங்கள் ஓட்டத்தின் அர்த்தத்தை அகராதியின் அச்சுக்களில் சற்றே ஆராயுங்கள்; ஆழ்நிலை மனத்திடம் விவாதியுங்கள்.

அவன் ஓடுகிறான்; அதனால் நானும் ஓடுகிறேனென்பதெல்லாம், பக்கத்துவீட்டுக்காரி பிள்ளைப் பெற்றதற்கு, தன் மனைவியின் தொண்டைக்குள் விரலை விடுவதற்குச் சமம். அவனுக்கு இருக்கிற பசியின் அளவு வேறு; உங்களுக்கு இருக்கிற பசியின் அளவு வேறு. அனைவருக்கும் பசியிருப்பினும் ஒரே மாதிரியான உணவு அனைவரின் பசியினையும் தீர்த்துவிடுவதில்லை. அவரவர் வசதியைப் பொறுத்தும், ரசனையைப் பொறுத்தும் அது மாறிக் கொண்டேயிருக்கும்.

கடந்துவிட்ட நொடிகளானது, கடலில் கொட்டிய மழைத்துளிகளைப் போல; மீட்டுக் கொண்டு வருவது ஆகாதக் காரியம். கடக்கப் போகிற நொடிகளானது, மண்ணில் விழாத மழைத்துளிகளைப் போல; அவை பொய்த்தும் போகலாம். இருக்கிற, கடக்கிற இந்த நொடிகள் மெய். இந்த ஒவ்வொரு நொடியிலும் நிறைவு தங்கியிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்; அந்த மனநிறைவு, உங்களை எப்போதும் உயிர்ப்புடன் பார்த்துக் கொள்ளும்.

நீங்கள் இருக்கிறபோது, உங்களின் இருப்பை இந்தவுலக்குக் காட்டுங்கள். நீங்கள் இறந்தப்பின், நீங்கள் இருந்ததிற்கான தடயங்களை விட்டுச் செல்லுங்கள். அல்லது, எச்சங்களையாவது விட்டுச் செல்லுங்கள்.