சமீரா

விடியற்காலைப் பொழுதின் முதல் பேருந்துக் கிளம்புவதற்கு இன்னும் சில நிமிடங்களே மிச்சமிருந்தது. அந்தப் பேருந்தை தவறவிட்டால், அடுத்தப் பேருந்து வருவதற்கு நீண்ட நேரமாகும். அதற்குள் சலீம்கானும், சமீராவும் ஊரைவிட்டு ஓடிவந்த விசயம் ஊரெல்லாம் பரவி, முஷாரப் அலியின் காதுகளுக்கும் எட்டி, இவர்களை தேடிவந்து விடுவார். அப்படி மட்டும் நடந்தால், பெரும் பிரச்சனை உண்டாவதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது.

சலீம்கான், தன் மகள் சமீராவின் வாயினை கையால் இறுக்கமாக மூடியபடி குப்பைத்தொட்டியின் ஓரமாக மறைந்துக் கொண்டிருந்தார். வழக்கத்தைவிட இன்று பயத்தினால் அதிகமாக மூச்சு வாங்கியது. அந்த மூச்சுக் காற்றின் சத்தமோ அந்த வழியாக செல்பவர்களை கூப்பிட்டுக் கொண்டிருந்தது. சலீம்கான் வேக வேகமாக தன் சட்டைப் பாக்கெட்டைத் துழாவினார். கிடைக்கவில்லை. பின்னர், ஃபேண்ட் பாக்கெட்டையும் துழாவிப் பார்த்தார். அப்போதும் கிடைக்கவில்லை. அவர் தேடிக் கொண்டிருந்த ஆஸ்துமா இன்ஹேலரை அவசரத்தில் எடுத்துவர மறந்துவிட்டிருந்தார். மூச்சுக் காற்றின் சத்தம் இன்னும் அதிகமானது. அது தோற்றுப்போய் ஓடுகிற ஒரு சிங்கத்தின் மூச்சுக் காற்றைப் போல பலமடங்கு இருந்தது. அந்த சத்தத்தைக் கேட்டு, அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த முஷாரப்பின் வீட்டுப் பணியாள் தன் பார்வையை குப்பைத்தொட்டியின் பக்கம் திருப்பினான். அதிர்ந்துப் போய், சலீம்கான் இன்னொரு கையால் தன் மூக்கையும், வாயையும் சேர்த்து இறுக்கமாக மூடிக் கொண்டு, சத்தம் வராமல் குப்பைத்தொட்டியின் பின்புறம் இன்னமும் மறைவாக அமர்ந்தார். மூச்சுக் காற்றின் வேகம் தடைப்பட்டதால், இறக்கப் போகிறவரின் கடைசி மூச்சுப் போல மேலும் கீழுமாக இழுத்தது. இருந்தும், முஷாரப்பின் பணியாள் அங்கிருந்து நகரும்வரை கைகளை விலக்கவே இல்லை. சமீரா, தான் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என நினைத்து கண்ணீர் சிந்தினாள். அவளின் கண்ணீரைத் துடைத்து, மூச்சு வாங்கியபடியே ஆறுதல் சொன்னார் சலீம்.

இந்தியாவின் நிலப்பரப்பில் பெயர் தெரியாதவொரு சிறு கிராமம். அங்கு பரந்து விரிந்திருக்கிற கடற்கரை மணல்வெளிகள், காலைச் சூரியனின் கதிர்கள் தீண்டியதும் அசல் வைரங்களைப் போலவே மின்னும். அதைப் பார்க்கிறபோதெல்லாம் சமீராவுக்கு ஒரு இனம்புரியாத பேரானந்தம் தொற்றிக் கொள்ளும். அந்தப் பேரானந்தத்திற்கு காரணமும் இருக்கிறது. அம்மா இல்லாத ஏக்கத்தில் சமீரா அழும்போதெல்லாம் இந்தச் சூரியனைக் காட்டித்தான் சமாதானப்படுத்துவார் சலீம். மேலிருந்து சூரியக்கதிர்களால் அந்த மணற்குவியலை வைரமாக மின்ன வைப்பது தன் அம்மாஜோதி“-தான் என்றும், அது உன் அம்மா உனக்காக அளிக்கிற பரிசு என்றும் சமீரா சிறுவயதாக இருக்கும்போது சலீம் சொன்னதும் நினைவுக்கு வரும். சலீம் சொன்னதை நம்பி அந்த வைர மணலைப் பரிசுப் பொருளாக பாவித்து, இரு கைகளிலும் அள்ளிவந்து தன் அம்மாவின் புகைப்படத்தின் கீழிருக்கும் ஜாடிகளில் சேர்த்து வைப்பாள். அவள் பெரியவளாக வளர்ந்தப் பின்னும் அந்தப் பழக்கம் இன்று வரை தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அது முட்டாள்தனமென்று சமீராவிற்கு தெரிந்தாலும், மனம் அதைத் தொடர்ந்து செய்யச் சொல்லும். அப்படிச் செய்வதில் அவளுக்கொரு பேரானந்தம் உண்டாகி, அந்த சூரியக் கதிர்கள் அவள் அம்மாவின் அரவணைப்பை நினைவூட்டும். இப்படியாக வைர மணலை சேர்த்து சேர்த்து, இப்போது அறை முழுவதும் ஜாடிகளாக நிரம்பி வழிந்தது.

சமீரா, ஒரு பேரழகியென்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. தேவதைக்கு அர்த்தம் தேடினால் அகராதியில் சமீரா என்றிருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், தன்னைத் தாண்டி வேறு யாரும் பேரழகியில்லை எனக் கூறும் பெண்கள் கூட்டம் கூட, சமீராவைப் பார்க்கிறபோது இவளைப் போல ஆகச்சிறந்த பேரழகி இந்த உலகிலேயே இல்லையென துதி பாடுவார்கள். சமீரா, அழகுக்கு கொஞ்சமும் குறைவில்லாத அறிவையும் கொண்டவள். சமீராவின் கிராமத்தில் பள்ளியெல்லாம் கிடையாது. அதனால் பல மைல் தாண்டியுள்ள பக்கத்து கிராமத்துப் பள்ளியில்தான் நன்றாக படித்து முடித்தாள். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்கு சலீம் சென்றால் போதும், ஆசிரியர்கள் சமீராவின் புகழைப் பேசிப் பேசியே சோர்ந்துப் போவார்கள். அத்தனை அறிவுஜீவி அவள். படிப்பைத் தாண்டி விளையாட்டு மாதிரியான மற்ற செயல்பாடுகளிலும் சமீராவிற்கு நிகர் சமீராதான். இப்போது, தன் படிப்பை மேலும் தொடர்வதற்காக நகரத்திலிருக்கிற பல கல்லூரிகளுக்கு ஆர்வத்தோடு விண்ணப்பித்திருக்கிறாள். தன் அப்பாவின் யோசனைப்படி, அங்கேயே தங்கிப் படிப்பதற்கு வசதியாக விடுதிகளுக்கும் சேர்த்து விண்ணப்பித்தாள். அப்பாவை பிரிவதில் சமீராவிற்கு விருப்பமில்லை என்றாலும், அப்பாவின் பேச்சை மீறாதவள். சலீமைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்த வையம் இதுவரை காணாத புதுமை ஆண். சமீராவை நிறைய படிக்க வைத்து உலகமே போற்றும்படியாக வளர்க்க வேண்டுமென்பதே சலீமின் வாழ்நாள் ஆசை.

பெண்ணுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணராத பலரும், “கியாரே சலீம்.. து பாகல் ஹோகையாகீ? கீ லட்கிக்கோ இத்னா பட்ரகிஹோ? (என்ன சலீம்.. உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? எதற்கு பெண்பிள்ளையை இவ்வளவு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறாய்?) எனக் கேட்பார்கள். அதையெல்லாம் ஒரு பொருட்படுத்தவே மாட்டார் சலீம். பதிலுக்கு அவர்கள்மீது ஒரு புன்னகையை மட்டுமே வீசுவார். கோழி, தன் குஞ்சுகளை ஆபத்துகளிலிருந்துக் காப்பாற்ற சிறகுகளால் மறைத்துக் கொள்வதைப் போல, இந்தப் பேச்சுக்கள் சமீராவின் காதுகளை எட்டாதபடி பார்த்துக் கொள்வார். சமீராவும், சலீமும் ஆகச்சிறந்த தந்தை மகளுக்கு உதாரணமாக மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். யாருடைய வாழ்க்கையாவது மகிழ்ச்சியாக இருந்தால், அந்தக் கடவுளுக்குத்தான் பிடிக்காதே. இவர்களின் மகிழ்ச்சியைக் குலைக்கும்படியான ஒரு நாள் வந்தது. அதுவும் சலீமின் நகமும் சதையுமான நண்பர் முஷாரப் அலியின் மூலமாகவே வந்தது. இவர்களின் இந்த இரவுநேர ஓட்டத்திற்கும் ஒருவிதத்தில் முஷாரப்தான் காரணம்.

அந்தப் பெயர் தெரியாத கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்தவொரு பெயர் முஷாரப் அலி. அந்த கிராம மக்களுக்கு தலைவர் போன்றவர். மக்களுக்கு சிறு துன்பமென்றாலும் முதல் ஆளாக ஓடிப்போய் உதவுவார். தன் செல்வங்களை எல்லாம் ஏழை எளியவருக்காக அள்ளிக் கொடுக்கிற நவீன உருவிலான கர்ண வள்ளல். ஏன் இப்படி செல்வங்களை அள்ளிக் கொடுக்கிறீர்கள் என்று யாராவது கேட்டால், மனிதர்களைப் போல ஆகச்சிறந்த செல்வம் இந்த உலகில் வேறெதுவும் கிடையாது; அந்த மனிதச் செல்வங்களை சேர்க்கவே இப்போது முதலீடு செய்துக் கொண்டிருக்கிறேன் என கம்யூனிச சித்தாந்தமெல்லாம் பேசி, பச்சிளங்குழந்தையைப் போல சிரிப்பார். ஆகச்சிறந்த நல்லவர் இந்த முஷாரப் அலி. இதையெல்லாம் தாண்டி, முஷாரப்புக்கும், சலீமுக்கும் ஒரு நெருங்கியத் தொடர்புண்டு. சலீம், தன் காதலி ஜோதியுடன் வீட்டுக்கு பயந்து ஓடிவந்து, முன்பின் தெரியாத இந்த கிராமத்தில் அனாதையாக நின்றபோது, இந்த முஷாரப்புதான் இவர்களுக்கு ஆதரவும் கொடுத்து, தன் கிராமத்தில் தங்குவதற்கு இடமும் கொடுத்து, திருமணமும் செய்து வைத்தவர். சில ஆண்டுகளிலேயே ஜோதி நோய்வயப்பட்டு இறந்தபோதும் கூட முஷாரப்தான் முதல் ஆளாக வந்து சலீமுக்கு துணையாக நின்று எல்லா இறுதிக் காரியங்களையும், இந்து முறைப்படி செய்தார். முஷாரப்பை பொறுத்தவரை, சாதி, மதம், இன வேறுபாடெல்லாம் கிடையாது. மனிதர்களை மனிதர்களாக மதிக்கக்கூடியவர். இப்படி சலீமின் வாழ்க்கையில் அனைத்து இன்பத் துன்பங்களிலும் பங்கெடுத்து, சலீமின் குடும்ப நபர்களில் ஒருவரைப் போலவே உறவாடினார்.

தன் வீட்டை நோக்கி வந்த முஷாரப்பை கண்களில் பேரான்பையும், முகத்தில் புன்னகையையும் ஏந்தியபடி வரவேற்றார் சலீம். இருவரும் தம் கலாச்சார முறைப்படி ஆரத்தழுவி கட்டியணைத்துக் கொண்டனர். சமீராவும் முஷாரப்பை வரவேற்று, தன் வீட்டுத் தோட்ட்த்தில் விளைந்த பழங்களினால் தயாரிக்கப்பட்ட பழச்சாறைக் குடிப்பதற்குக் கொடுத்தாள். பழச்சாறைக் குடித்துக் கொண்டே பேச்சைத் தொடந்தார் முஷாரப். சில பல முக்கியமற்ற பேச்சுகளுக்குப்பின், தான் தன் மகனுக்கு சமீராவை பெண் கேட்டு வந்த விசயத்தைச் சொன்னார். அவர் அப்படிக் கேட்டதும், மறுக்கவும் முடியாமல், ஆமோதிக்கவும் முடியாமல் அமைதியாக நின்றார்கள் சலீமும் சமீராவும். முஷாரப்பைப் போலவே அவரின் மகனும் மிகவும் நல்லவன்தான். ஒரு முறை, சலீம் மயங்கி தெருவில் விழுந்துக் கிடந்தபோது, இவன்தான் அவரைக் காப்பாற்றி வீட்டில் சேர்த்தான். இவனுக்கு சமீராவை மணமுடித்து வைப்பதில் சம்மதமிருந்தாலும், இப்போதே கட்டிக் கொடுப்பதில் விருப்பமில்லை. ஏனென்றால், சமீராவுக்கு படிப்பின்மீதான தீராக்காதல் சலீமுக்கு நன்றாகவே தெரியும். வேறு யாராக இருந்தால், இப்போது திருமணம் செய்து வைப்பதில் விருப்பமில்லை என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல சொல்லி இருப்பார். ஆனால், இங்கு கேட்பது தன் நெருங்கிய நண்பன் முஷாரப் ஆயிற்றே. எதுவும் பேச முடியாமல் நின்ற சலீமின் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, பழச்சாற்றின் குவளையை மேசையில் வைத்தபடி சந்தோசமாக கிளம்பினார் முஷாரப். சலீமும், சமீராவும் என்ன பேசுவதென தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

சலீம், தன் முடிவை பல சந்தர்ப்பங்களில் முஷாரப்பிடம் தெரிவிக்க முயன்றிருக்கிறார். ஆனால், அது சொல்லப்படாமலே தோல்வியில் முடிந்துப் போகும். சமீராவும் தன் பங்குக்கு பல உத்திகளை தன் தந்தைக்கு சொல்லி அனுப்பி வைப்பாள். ஆனால், அதுவும் சொல்லி வைத்த மாதிரி முஷாரப்பிடம் தெரிவிக்கப்படாமலே தோற்றுப் போகும். இப்படியாக, இருவரும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த வேளையில், முஷாரப் மகிழ்ச்சியாக திருமண வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். இறுதியில் சமீராவும், சலீமும் என்ன நடக்கிறதோ நடக்கட்டுமென அல்லாவின் கையில் விட்டுவிட்டனர். அப்படி இப்படியாக நாட்கள் நகர்ந்து, திருமண நாளும் வந்துவிட்டது.

அன்றிரவு வழக்கம்போல ஊரே தூங்கிக் கொண்டிருந்தது. சமீரா, திடீரென தூக்கிவாரிப் போட்டது போல விழித்துக் கொண்டாள். தன் தந்தையின் கையறு நிலையையும், இந்த தர்ம சங்கடமான சூழலையும் முழுமையாக உணர்ந்திருந்தாள். தன்னைப் பற்றி இந்த ஊர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்; ஆனால், தன் தந்தைக்கும், முஷாரப்புக்குமான நட்பு என்றைக்கும் நீடித்திருக்க வேண்டுமென நினைத்து, யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு கிளம்பிவிட முடிவெடுத்தாள். சமீராவின் படிப்பு அவளுக்கும், அடுத்துப் வரப்போகிற பெண் தலைமுறைக்கும் எவ்வளவு முக்கியமென பல முறை சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கிறார் சலீம். அந்த வளர்ப்பின் விளைவுதான் அல்லது தூண்டுதல்தான் சமீராவின் இந்த முடிவுக்கு காரணமென்றால் மிகையாகாது. தன்னுடைய முடிவு, தன் தந்தைக்கும், முஷாரப்புக்கும் இடையிலான நட்பில் சிறுவிரிசலை உண்டாக்கினாலும், முழுமையாக உடைக்காது என்பது சமீராவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், மனதுக்குள் இனம்புரியாத பயமும் கவலையும் நிறைந்திருந்தது.

தன் பள்ளிச் சான்றிதழ்களையும், ஆடைகளையும் பைகளில் எடுத்து வைத்துக் கொண்டாள். கூடவே, திருமணச் செலவுக்காக தன் அப்பா வைத்திருந்த பணத்தில் கொஞ்சமும் எடுத்துக் கொண்டு, கலைப்பில் தூங்கிக் கொண்டிருக்கும் தன் அப்பாவைப் பார்த்தபடி அசையாமல் நின்றாள். மனதுக்குள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அவளையும் அறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து சலீமின் பாதங்களில் விழுந்து ஆசிர்வாதம் வேண்டியது. அந்த தொடுதலில் சலீம் சட்டென விழித்துக் கொண்டார். சமீரா கைகளில் பையுடன் கிளம்பி நிற்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. பல குழப்பங்களையும் உண்டாக்கியது. என்னை தனியாக விட்டு எங்கேப் போகிறாய் மகளே..? என்பதைப் போல சலீமின் கண்கள் பேசியது. அதைப் புரிந்துக் கொண்ட சமீரா, தன் பையிலிருந்து கடிதத்தை எடுத்து நீட்டினாள். அந்தக் கடிதத்தின் இறுதியில்கல்லூரியில் சேருவதற்கு தேவையான சான்றிதழ்களுடன் நாளை நேரில் வரவும்எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தன் மகளுக்கு கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து மனதுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும், பொழுது விடிந்ததும் முஷாரப்புக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. இன்னும் சில மணி நேரங்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு, இப்போது போய் நிறுத்தச் சொன்னால் அது சரியாகவும் இருக்காது. கடிதத்தையும், தன் மகளையும் மாறி மாறி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கும், முஷாரப்புக்கும் ஏற்படப் போகிற இந்த கசப்பான சிக்கலை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். “இது எல்லாமே அல்லாவின் விளையாட்டு; அனைத்தையும் அல்லா பார்த்துக் கொள்வார்என்கிற நம்பிக்கையில் படுக்கையைவிட்டு எழுந்து ஆணியில் மாட்டியிருந்த சட்டையை எடுத்து உடுத்துக் கொண்டார். சமீராவின் கண்ணீரை துடைத்துவிட்டு, அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டு துணையாக சலீமும் ஊரைவிட்டு கிளம்பிவிட்டார்.

எப்படியோ யார் கண்ணிலும் படாமல் தப்பித்து, நீண்ட தூர நடைப்பயணத்தின் விளைவாகவும், ஆஸ்துமாவின் காரணமாகவும் பெருமூச்சு வாங்கியபடி, ஒரு வழியாக அந்தப் பேருந்தில் சலீமும், சமீராவும் ஏறி அமர்ந்தனர். பேருந்தில் ஏறியப் பின்னும் மூச்சுக் காற்றின் வேகம் குறையவேவில்லை. மேலும் கீழுமாக இழுத்துக் கொண்டுதான் இருந்தது. தன் தந்தையின் நிலையைப் பார்த்து பயந்த சமீரா, தன் படிப்பைவிட, தன் தந்தையின் வாழ்நாள் ஆசையைவிட, தன் வருங்கால வாழ்க்கையைவிட, தன் தந்தையின்  இன்ஹேலர்தான் இப்போதைக்கு மிக முக்கியமென நினைத்து வீட்டுக்கே திரும்ப முடிவெடுத்தாள். அந்த சமயத்தில், பின்னிருக்கையிலிருந்து ஒரு கை நீண்டுவந்து ஆஸ்துமா இன்ஹேலரை கொடுத்தது. இன்ஹேலரை தன் வாயில் வைத்து சில முறைகள் வேக வேகமாக அழுத்தி, தன் மூச்சை ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பிப் பார்த்தார் சலீம். பின்னிருக்கையில் புன்னகையோடு சலீமின் நண்பர் முஷாரப் இருந்தார். சலீம், இருக்கையிலிருந்து எழுந்துப் போய் முஷாரப்பை இறுக்கமாக ஆரத்தழுவிக் கொண்டார். முஷாரப், நட்பு கலந்த புன்னகையோடு சலீமின் தோள்களை தட்டிக் கொடுத்தார். சலீம், தன் மகளிடமிருந்த கடிதத்தை வாங்கி முஷாரப்பிடம் நீட்டினார். அதற்கு, தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போல தலையையும், கைகளையும் அசைத்தார் முஷாரப். இவர்களோடும், இன்னும் சிலரோடும் வெளிச்சத்தையும், நட்பையும், மகிழ்ச்சியையும் நிரப்பிக் கொண்டு, நகரத்திலிக்கும் கல்லூரியை நோக்கி புறப்பட்டது அந்தப் பெயர் தெரியாத கிராமத்தின் முதல் பேருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக