யாதும் ஊரே யாவரும் கேளிர்

“ஏதாச்சும் போத ஒன்னு
எப்போதும் தேவை கண்ணா
இல்லாட்டி மனுசனுக்கு சக்தி இல்ல

தாய் பாலும் போத தரும்
சாராயம் போத தரும்
ரெண்டையும் பிரித்தறிய புத்தியில்ல‌“

உண்மைதான். மனிதனுக்கு வாழும் காலம் வரை எப்பொழுதுமே ஏதோவொரு போதை, ஏதோவொரு விதத்தில், யாரோ ஒருவரிடமிருந்தோ, ஏதோ ஒன்றிடமிருந்தோ தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த போதை, எந்த போதை என்பதும், எதிலிருந்து பெறப்பட வேண்டுமென்பதும் அவரவரின் தனிப்பட்ட விருப்பத் தேர்வாக இருக்கிறது. என்னுடைய தனிப்பட்ட தேர்வாக என்னையும் போதையில் மயக்குகிற பல விசயங்கள் உண்டு. அதில் முக்கியமான மூன்று விசயங்கள் எதுவெனின் வாசித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் என்பேன். உங்களால் நம்பும்படியாக இல்லையென்றாலும், இதுதான் உண்மை. இதில் என்னை அதிகமாக போதையில் ஆழ்த்தி, தன்னிலையை மறக்கச் செய்து, பரவச நிலையில் திளைக்கச் செய்கிற ஆகச்சிறந்த போதை, பேச்சுப் போதைதான். தாயின் கருவிலிருந்த காலத்திலிருந்து இன்று வரை அந்த ஆகசிறந்த பேச்சுப் போதையில் மயங்கி, மீளாத மயக்கத்திலேயே கிடக்கிறோம். அது தருகிற இன்பமோ அத்தனை அலாதியானது. அதில் மூழ்கிக் கிடப்பதோ அத்தனை ஆனந்தமானது. அந்த அலாதியை, ஆனந்தத்தை நாம் அனைவருமே அனுபவித்து இருக்கிறோம், அனுபவித்துக் கொண்டும் இருக்கிறோம்.

போதைப் பொருள் தயாரிக்க கையாளப்படுகிற முறையைப் பொறுத்தும், தயாரிக்கப் பயன்படுத்துக்கிற பல்வேறு வகையான மூலப்பொருட்களைப் பொறுத்தும், மூலப்பொருட்கள் விளைந்த சூழலைப் பொறுத்தும், அதன் மயக்கும் தன்மையின், போதையூட்டும் தன்மையின் வீரியம் மாறுபடும். அதைப் போலவே இந்த பேச்சுப் போதையும் பேசப்படுகிறவரைப் பொறுத்தும், கேட்கப்படுகிறவரைப் பொறுத்தும், பேசப்படும் பொருளைப் பொறுத்தும், பேசப்படுகிற சூழலைப் பொறுத்தும், அந்த மாயை நிலையின், அந்த மயக்க நிலையின் தன்மையின் ஊடுருவல் மாறுபடும்.

இணையத்தில் அதிகம் போதைத் தரக்கூடிய சிறந்த ஐந்து போதைப் பொருட்கள் எதுவென தேடியபோது ஹெராயின், கொக்கைன், நிக்கோட்டின், ஸ்ட்ரீட் மெதடோன், பார்பிட்டுரேட்ஸ் என பட்டியலை நீட்டியது. என்னைக் கேட்டால் அந்தப் பட்டியலின் முதலிடத்தில் ஆகச்சிறந்த இந்த “பேச்சு போதை“யை சேர்க்கச் சொல்லி, நிச்சயம் சண்டையிடுவேன். ஏனெனில், பேச்சில் மயங்கியதில் கோவணத்தையும் சேர்த்து இழந்தவருமுண்டு, கோடீஸ்வரராக வாழ்ந்தவருமுண்டு. பேச்சுக்களால் ஒருவரை மயக்கி, ஆக்கப் பாதைக்கு அழைத்துச் செல்லவும் முடியும்; அழிவுப் பாதையில் தள்ளிவிடவும் முடியும். இதற்கு இதுவரை நாம் கண்ட அனைத்து வரலாற்று நிகழ்வுகளுமே சாட்சியாகும்.

இந்த ஆகச்சிறந்த பேச்சுப் போதையில் இசையை கலந்து இன்னும் உயிர்ப்பூட்டி, அகிலத்திலுள்ள அனைத்து மக்களையும் மயக்கி, ஆக்கப்பாதையில் கூட்டிச்செல்ல நினைத்த மார்கோனியின் அற்புதமான கண்டுபிடிப்புதான் வானொலி. முதன்முதலில் வானொலி சேவையானது அமெரிக்காவில் 1905-1906-ஆம் ஆண்டில் பேச்சு மற்றும் இசை சார்ந்தும், 1920-1923-ஆம் ஆண்டில் வணீகம் சார்ந்தும் சோதனை முயற்சியாக ஒலிபரப்பப்பட்டது. இதே காலவெளியில் நம் இந்தியாவின் அஞ்சல் மற்றும் தந்தி துறையானது, 1921-ஆம் ஆண்டில் “டைம்ஸ் ஆப் இந்தியா“ நிறுவனத்துடன் இணைந்து சோதனை ஒலிபரப்பை நிகழ்த்தி, வெற்றியும் கண்டது. பின்னர், இந்த வானொலி சேவையானது படிப்படியாக வளர்ந்து, அகிலம் முழுவதும் தன் கிளைகளை பரப்பி, இன்று காற்றோடு கதை கதையாய் பேசி, போதையில் மயங்கிக் கிடக்கிறது.

தனக்கென்று எந்தவித வாழ்வியல் முறைகளுமில்லாமல், எந்தவித அறிவுசார்ந்த மேம்பாடுமில்லாமல், காட்டில் கண்டபடி விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்துக் கொண்டிருந்த ஆதிமனிதனுக்கு “சிக்கி முக்கி“ கல்லில் எழுந்த ஒரு துளி தீப்பொறியானது அவனின் வாழ்வியலை தலைகீழாக மாற்றியமைத்தது. அந்த தீப்பொறிதான் அவனை அனைத்து விலங்குகளிடமிருந்தும் வேறுபடுத்தி, அதிகாரத்தின் தளத்திற்கு நகரச் செய்து, ஆளுமையை வளர்த்து, நாகரீக வளர்ச்சிக்கு வித்திட்டது. ஆதிமனிதனுக்கு கிடைத்த அந்தவொரு துளி தீப்பொறியைப் போல, இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற ஏராளமான தொழில்நுட்ப மேம்பாட்டுக் கருவிகளின் தொடக்கக் கால ஆதிப்புள்ளி இந்த வானொலி கண்டுபிடிப்புதான். அந்த சிறுபுள்ளி அளவிலான தீப்பொறிதான், காலப்போக்கில் பெரும் காட்டுத்தீயாக வளர்ந்து, சைகை முறையின் பரிமாணத்தை மாற்றி, சைகையில் பேசிக்கொண்டிருந்த மனிதனை சைகை வழியாக பேச கற்றுக் கொடுத்திருக்கிறது.

ஆகச்சிறந்த இந்த பேச்சுப் போதையை கடல் கடந்து, காடு மலைகள் கடந்து, கண்டம் கடந்து, காற்று வெளிகள் எல்லாம் கடந்து, யாதும் ஊரே யாவரும் கேளிரென அனைத்து மக்களிடத்திலும் கொண்டு சேர்ப்பதற்கான முன்னெடுப்புகளை முதன்முதலில் எடுத்த மார்கோனி மாதிரியான இன்னபிற அறிவியலாளர்கள் அனைவருமே நவீன கால கணியன் பூங்குன்றனார்கள் என்றே தோன்றுகிறது.

குறிப்பு:
இலக்கியா அறிவுசார் சமவெளியின் கட்டுரைப் போட்டிக்காக எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக