சுவையிலா வாழ்வுதனில்

எத்தனை காலம்தான் சுவையில்லா வாழ்க்கையினில் சுவைத்து வாழ்வதுப் போலவே நடித்து வாழ்வது?! எந்திரத்தனமான வாழ்க்கையென பலர் அலுத்துக் கொண்டு புலம்புகையில், உள்ளூற புன்னகைத்திருக்கிறேன். ஆனால், இப்போது என் நிலைமை?. அனைவருக்குமே சில நேரங்களில் வாழ்க்கையானது முட்டுச் சந்தாகி, அடுத்து எதை நோக்கி செல்வதென தெரியாத நிலை வரும். அந்த நிலை இப்போது எனக்கு. இத்தனை நாட்கள் கடிவாளம் கட்டிய குதிரையாக முனைவர் பட்டம் வாங்க ஓடிக் கொண்டிருந்தேன். அதுவும் இப்போது முடிகிற தருவாயில் இருக்கவே, அடுத்து என்ன செய்வதென தெரியாது குழம்பி நிற்கிறேன்.

என்னை நானே மீள்நோக்க வேண்டிய தருணம் இது. என்னை நானே சந்தேகப்பட்டு, சரிப்பார்த்துக் கொள்ள வேண்டிய தருணமும் இதுவே. அடுத்து வைக்கிற அடியில் ஆழ்ந்த கவனம் தேவை. பண நிறைவான வாழ்க்கையை நோக்கி ஓடுவதா?, இல்லை மன நிறைவான வாழ்க்கையை நோக்கி ஓடுவதா? என்றொரு முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன். பண நிறைவான வாழ்க்கையென தீர்மானித்தால், அதற்கொரு முடிவென்பது கிடையவே கிடையாது. ஏனெனில், இவ்வளவு பணம் போதும் என்கிற மன நிலை, இந்த மானுடக் குலத்துக்கே கிடையாது. கூடவே, நல்ல மனிதர்களை சேர்க்காமல், காகிதங்களை மட்டுமே சேர்த்து வைப்பதில் விருப்பமுமில்லை. மன நிறைவான வாழ்க்கையென தீர்மானித்தால், அதற்கொரு எல்லையுண்டு. அந்த எல்லையைக் காண, எது பிடிக்குமோ அதை நோக்கி ஓட வேண்டும். ஆனால், இதிலுமொரு சிக்கல். எனக்குதான் எது பிடிக்குமென்றே தெரியாதே!. பின்னர், எதை நோக்கி ஓடுவது?. இப்படித்தான், குழப்பம உச்சாணியில் ஏறிக் கொண்டு என்னை உலுக்கியெடுக்கிறது. அந்த நேரங்களில் எனக்கும் பைத்தியக்காரனுக்கும் ஆறு வித்தியாசங்கள் இருந்தாலே அதிகம்.

எதிர்வரும் நண்பர்களெல்லாம், “என்ன நீ ரொம்ப அமைதியா இருக்க, முன்ன மாதிரி இல்லையே என வினவ, அவர்களுக்கு தெளிவுப்படுத்திவிட ஆசைதான் எனக்கும். ஆனால், என்னிடம் பதில்கள்தான் இல்லை. முழுமையும் தனிமையாய் மூழ்கிக் கிடக்க மனம் ஏங்குகிறது. ஆளில்லா அடர்ந்த காட்டினுள்ளே, வளர்ந்துக் கிடக்கிற செடி, கொடி, மரங்களோடு எனக்கும் கொஞ்சமிடம் கேட்டு, அவைகளிலுருந்து என்னை வேறுபடுத்தியறிய முடியாதவொரு வாழ்க்கையை வாழ மனம் எத்தனிக்கிறது. எதன் மீதும் பற்றில்லை; இயற்கையைத் தவிர. அதனால், இதுதான் பிடித்ததென்று எதுவும் இல்லை. அடுத்த நாள் என்னவாகுமோ என்கிற கவலையும் மனதில் சிறுதுளியுமில்லை. அது என்ன தர நினைக்கிறதோ தரட்டும்; அதை அகமகிழ்வோடு ஏற்றுக் கொள்கிற பக்குவம் நிறையவே உண்டு. எது கிடைக்கிறதோ, அதுவே பிடித்தது என்கிற மன நிலையில் வாழ்கிறவனுக்கு, அடுத்த நொடியில் இந்த வாழ்க்கை எதுக் கொடுத்தாலும், அது ஆனந்தம் நிரம்பியத் தருணமாகவே இருக்கும். நாளை வரட்டும்; அதை நாளைப் பார்த்துக் கொள்ளலாம். முட்டுச் சந்தின் முற்றத்தில், இதுவே இப்போதைய முடிபு.