ஜல்லிக்கட்டு


ஜல்லிக்கட்டுக்காக போரட்டம் நடந்த சமயத்தில் எழுதிய கவிதை இது. பதிவிடும் முன்னரே, என் கையினிலிருந்து காலம் களவாட, இன்று எதையோ தேடுகையில், இந்தக் கவிதை எழுதிய காகிதம் கையில் சிக்கியது. இப்போது உங்கள் கண்களிடம் கரைச் சேர்த்துவிட்டேன். இனி, இதைத் தொலைப்பதும், பாதுகாப்பதும் உங்கள் பொறுப்பு.

தமிழ்,
தமிழன்,
தமிழ்நாடு,
இதுவே எங்கள் பண்பாடு
இது தெரியாதவன்
நாட்டைவிட்டு ஓடு..!

மாட்டுக்காக
மகனையும் கொன்றவன்
மனுநீதி சோழனடா..!
அவனைச் சேர்ந்ததே
எங்களின் மரபடா..!

காலந் தொட்டு
வாழுமெங்களை உந்தன்
கால் தொட்டு
வாழ்வோமென நினைத்தாயோ..?

மாட்டோம்,
மாட்டையும் நாட்டையும்
மீட்காமல் மாய மாட்டோம்
அதுவரை ஒருபோதும் ஓய மாட்டோம்

தலைவெட்டி
தரையில் போட்டாலும்
தமிழனாய்
வீழ்வோமே தவிர
தமிழை ஒருபோதும்
தரையில் தீண்ட விட மாட்டோம்

திறங் கொண்டு
திமில் கண்டு
திரவியம் வென்று
திக்கெல்லாம் திரிந்தவன்
உன் திமிர் கண்டு
போவோமா மிரண்டு..?

அறங் கொண்டு
ஆறாத சினங் கொண்டு
வருகிறோம் அணியாய் திரண்டு..!

காளையை
அடக்கிய நாங்கள்,
நாளை
உன்னையும் அடக்குவோம்
உரிமையை மீட்போம்.