எது நான்?


நீ யார்?
என்னை நானே கேட்டேன்

முட்டி மோதி,
முதலில் கடவுளெனவும்
முடிவிலினில் மிருகமெனவும்
மதிலினில் நின்ற பூனையாய்
பதில் தந்தது மனம்

எதை நான் கொல்வது?
எனக்குள்ளிருக்கிற
மிருகத்தினுள் கருணையும்
கடவுளினுள் குரூரமும்
மாறி மாறிக் கிடக்கிறது

கடவுளின் பார்வையில்
மிருகத்தின் கருணையை நேசிக்கிறேன்
மிருகத்தின் பார்வையில்
கடவுளின் குரூரத்தை நேசிக்கிறேன்

எதுதான் நான்?
கடவுளாய் வாழ நினைக்கிறேன்
நீ என்னை மிருகமாக்குகிறாய்
மிருகமாய் வாழ நினைக்கிறேன்
நீ என்னை கடவுளாக்குகிறாய்

இரண்டுமே நான்தான்
கடவுள் பக்கம் கரையேறுவதும்
மிருகம் பக்கம் மீண்டுமினைவதும்
என்னெதிரிலிருப்பவனின் முடிவின் தொடர்ச்சி.