கற்பு எனும் மாயை

பல காலக்கட்டங்களில், பல்வேறு நிலைகளில், பலராலும், பலவாறு விவாதிக்கப்படுகிற ஒரு சொல் “கற்பு“. இதைப் பற்றிய எனது எண்ணவோட்டத்தை எழுதலாமா வேண்டாமாயென எனக்குள்ளும் ஏகப்பட்டக் குழப்பங்கள். ஏனெனில், ஒரு சொல் மாற்றி எழுதிவிட்டாலும், எதிர்மறையாகிவிடும். நெடுநேர தேடலுக்குப் பின்னும், நீண்ட நேர யோசனைக்குப் பின்னும், ஒருமனதாய் எழுதிவிடுவோம் என்கிற முடிவில் முற்றுப் பெற்றது குழப்பங்கள்.

கற்பு என்பது பகுபதமா? அல்லது பகாப்பதமா? என்றெல்லாம் ஆராய்கிறார் ஈ.வெ.ரா. பகுபதமெனக் கொண்டால், கற்றபடி நடத்தல், கற்றவாறு நெறியோடு வாழ்தல் என்கிறப் பொருளைத் தருகிறதாம். பகாப்பதமெனக் கொண்டால், தமிழினில் பொருளில்லையாம். ஏனெனில், கற்பு என்பது தமிழ்ச் சொல்லா என்பதே பெரும் ஐயப்பாடு.

கற்பென்பது பகுபதமா, இல்லை பகாப்பதமா என்பதல்ல என்னுடைய கேள்வி. கற்பென்பது மனம் சார்ந்ததா, இல்லை உடல் சார்ந்ததா என்பதே என்னையும் சேர்த்து பலரது கேள்வி. மனம் சார்ந்ததெனக் கொண்டால், விபச்சாரியும் கற்புடையவள்தான். உடல் சார்ந்ததெனக் கொண்டால், கட்டிய மனைவியின் கற்பும் கேள்விக்குறிதான். விண்ணுலகும் மண்ணுலகும் போற்ற, சம்பிரதாய முறைப்படி திருமணமாகி கணவனோடுப் புணர்ந்து நீங்கியதும், அந்தப் பெண் கற்பற்றவளாகிவிடுவாளா என்ன?. மனைவியானவள் என்றைக்குமே கற்புடையவளெனில், விபச்சாரியும் என்றைக்குமே கற்புடையவள்தான். விபச்சாரியானவள் புணர்ந்து நீங்கியதும் கற்பற்றவளெனில், மனைவியும் கற்பற்றவள்தான்.

கற்றது தமிழ் என்கிற திரைப்பட்த்தின் நாயகனைப் போல, என் பார்வையிலும் கற்பென்பது மனம் சார்ந்ததாகவே புலப்படுகிறது. கற்பினை கால்களின் இடையில் தேடுவபர்களெல்லாம், இல்லாதவொரு கருப்புப் பூனையைக் குருட்டுக் கிழவன் இருட்டினில் தேடித் துழாவுவதற்குச் சமம்.

கற்பினை பெண்ணின் ஒழுக்கத்திற்கான அளவீடாய் கருதுவதெல்லாம், மரபணுவில் இன்னமும் மிச்சமிருக்கிற ஆணாதிக்கத்தின் எச்சமெனவே நினைக்கிறேன். பெரியாரைப் போல கற்பென்பது பகுபதமா அல்லது பகாப்பதமாவென ஆராயும் அளவிற்கான  புத்திக் கூர்மையெல்லாம் எனக்கில்லை. என்னைப் பொறுத்தவரை “கற்பு என்பது தகாப்பதம்.