உயர்திணை

இயற்கை, அளப்பறிய அற்புதங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது பல நேரங்களில் எனக்கு ஆறுதல் சொல்லும்; அழுகையைத் துடைத்துவிட்டு, ஆனந்தப்படுத்தும். நான் பேசப் பேச சலிக்காமல் செவிக் கொடுத்து, கேட்டுக் கொண்டே இருக்கும். சங்கடமென கலங்கி நின்றால், காதோரம் வந்து கவிதைப் பாடி, சமாதானப்படுத்தும். இங்கிருக்கிற ஒவ்வொரு தூணிலும், ஒவ்வொரு துரும்பிலும், உயிர் அடங்கியிருப்பதாகவே எண்ணுகிறேன். இயற்கையின் ஆன்மாவை பல நேரங்களில் நான் உணர்ந்திருக்கிறேன்; இலை நடுவே நெளிந்து நகருகிற பச்சைநிறப் புழுவாக; தூரத்தில் கூவுகிற குயிலாக; கள்ளமில்லாமல் சிரிக்கிற குழந்தையாக; நீரில் நீந்துகிற மீனாக; வாஞ்சையோடு காலையேச் சுற்றிவருகிற நாயாக; காற்றை என்மீதுப் பொழிகிற மின்விசிறியாக; இருளிலும் ஒளித் தருகிற விளக்காக; அமர்ந்திருக்கிற நாற்காலியாக; இன்னும் பற்பலப் பரிமாணங்களில். அனைத்திலுமே இயற்கையின் ஆன்மாவைக் காண்கிறேன். எதன்மீது கால் வைத்தாலும், சற்றே பாதங்களில் மென்னையைப் பரப்பிக் கொண்டு, வலிக்காமல் நடக்க முயலுகிறேன். அத்தனையும் என்னோடு பேசுகிறது; சிரிக்கிறது; விளையாடுகிறது.

ஆறறிவினைத் தாண்டி, உணர முடியாதவை எத்தனையெத்தனை இருக்கின்றன. என்னறிவுக்கு எட்டாததால், என்னால் உணர முடியாததால், அது இல்லையென்ற முடிவுக்கு வருவதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சம். புலன்வழி உணர்ந்தவையெல்லாம் இருக்கிறதென்றும், உணர முடியாதவையெல்லாம் இல்லையென்றும் முடிவெடுக்கிற முட்டாள்தனத்தை இனியாவது மாற்றிக் கொள்ள வேண்டுமென எண்ணுகிறேன். நான் உணர்ந்தாலும் உணராமல் போனாலும், அது எப்போதும் இருக்கிறது; அதை முழுமையாகவுணர, என்னறிவை இன்னமும் செம்மைப்படுத்துதலே சரியான வழி. அதுவரை, புலன்களே! நீங்கள் கூர்மையாய் திறந்தேயிருங்கள்.