அழுகுரல்


இருள் சாத்தான் பகலினை கொஞ்சம் கொஞ்சமாக மென்று விழுங்கிக் கொண்டிருந்தது. சில கணங்களில், இருளின் போர்வையில் அனைத்தும் மறைந்தது. சுற்றிப் பார்த்தால் ஆளும் இல்லை, அரவமும் இல்லை. அத்தனை அமைதி. மின்சாரம் வேறு அடிக்கடி விட்டு விட்டு வந்துக் கொண்டிருந்தது. மின்விளக்கு, அவளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டிருந்தது. அவளைச் சுற்றிலும் மயான அமைதி சூழ்ந்தது. அந்த அமைதியே அவளுக்கு கொஞ்சம் அச்சத்தையும் கூட்டியது.

அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். கண்மணி மட்டும்தான் தனியாக விடுதியில்  தங்கியிருக்கிறாள். நாளை காலை அவளும் வீீீீீீ்ட்டுக்கு புறப்படுவதாக உத்தேசம். அவள் ஆபத்தில் சத்தமாய் கத்தினாலும், கேட்கிற தூரத்தில் யாரும் இல்லை. அது இன்னும் அவள் இரத்த நாளங்களின் வேகத்தைக் கூட்டியது. தன்னைத் தானே எப்படியெப்படியோ ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றாள். ஆனாலும் பயனில்லை. இறுதியாக, படிக்கலாமென ஒரு புத்தகத்தை கையில் எடுக்கிறாள். அதன் பெயரோ, “மனிதர், தேவர், நரகர்“. அந்த வேலையில், விளக்குகள் சட்டென மூச்சற்றுப் போயின. மெழுகுவர்த்தியைத் தேடியெடுத்துப் பற்ற வைத்தாள். அதன் வெளிச்சம் கொஞ்சமாக இருளின் போர்வையைக் கிழித்தது. மீண்டும் படிக்கத் தொடங்கினாள். புத்தகத்தின் பக்கங்களில், அவள் மனம் தங்கவேயில்லை. அங்கு சூழ்ந்திருக்கிற இருளின் அமைதியில், ஏதேதோ எண்ணத்தோடு சுற்றிக் கொண்டிருந்தது.

அறைக்கதவின் வழியாக, வெளியிலிருந்து ஏதோவொரு சத்தம் உள்நோக்கி கசிந்தது. சத்ததின் திசையில் செவிகளைக் கூர்த் தீட்டினாள். என்ன சத்தமென்று புலப்படவில்லை. கதவின்மீது காதுகளை முத்தமிடச் செய்து, இன்னும் கூர்மையாய் கேட்டாள். “யாரோ அழும் சத்தம்“. பக்கென்றானது அவளுக்கு. கடிகாரத்தில், நேரம் 12:08-ஐ கடந்து, முட்கள் டிக்.. டிக்.. டிக்.. என ஓடிகொண்டிருந்தது. இதயத்தின் வேகம், உசைன் போல்ட்-ன் வேகத்தோடு போட்டிப் போட்டது. கட கடவென திறந்திருந்த சன்னல்களை எல்லாம் வேகமாய் மூடிவிட்டு நாற்காலியில் அமர்ந்தாள். முகமெல்லாம் வியர்த்து வடிந்தது. இரத்த நாளங்கள் எப்போது வெடித்துச் சிதறி, அதிலிருந்து இரத்தம் கொப்பளிக்குமோ என்கிற வேகத்தில் இதயம் துடித்தது.

அனைத்துக் கடவுள்களையும் துணைக்கு அழைத்தாள். அதே சமயத்தில், அந்த அழுகைச் சத்தம் இன்னும் அதிகமாகிக் கொண்டேப் போனது. துப்பட்டாவால் காதுகளை இறுக்கமாக கட்டிக் கொண்டாள். இருந்தும், அந்தச் சத்தம் அவளுக்கு கேட்டுக் கொண்டேயிருந்தது. வேறுவழியே இல்லை. உதவிடவும் யாரும் அங்கு இல்லை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அலைப்பேசியின் டார்ச் விளக்குகளை இயக்க முயன்றாள். அது அவளுக்கு முன்பே பயத்தில் செத்துவிட்டிருந்தது. மெழுகுவர்த்தியைக் கையிலேந்தினாள். கதவை மெல்லமாக திறக்க திறக்க. அழுகைச் சத்தம் அதிகமாகிக் கொண்டேப் போனது. மெதுவாக பாதம் வைக்கிற சத்தம் கேட்காத அளவுக்கு வெளியில் நடந்து வந்தாள். சட்டென மெழுகுவர்த்தி, காற்றின் வேகத்தில் அணைந்துப் போனது. பதறிப்போய் மீண்டும் அறைக்குள்ளே ஓடிப்போய் கதவையும், கண்களையும் இறுக்கமாக மூடிக் கொண்டாள். வேர்த்து விறுவிறுக்க, தீப்பெட்டியைத் துழாவியெடுத்து, மீண்டும் விளக்கை ஏற்றினாள். கைகளால் ஜோதியை மறைத்தபடி, ஒவ்வொரு அறையையும் உற்றுப் பார்த்துக் கொண்டே, அழுகுரல் வரும் திசையில் நடக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு அடியிலும், சத்தம் மேலும் கூடிக் கொண்டேப் போனது; கூடவே, இதயத்தின் வேகமும் கூடியது. பயத்தில் வியர்வை அருவியாய் கொட்டியது.

கழிவறையை நெருங்க நெருங்க, அழுகையின் சத்தம் காதைப் பிளந்தது. அழுகைச் சத்தம் அங்கிருந்துதான் வருகிறதென்பது உறுதியானது. தயங்கித் தயங்கி, அந்த அறையினுள் நுழைந்தாள். முழுவதும் இருட்டு. மெழுவர்த்தி நீட்டிய பக்கம் மட்டும் ஒளியானது கத்திப் போல கிழிக்க, கொஞ்ச கொஞ்சமாக வழிவிட்டது இருள். அறை முழுவதும் கண்களால் துழாவினாள். யாரையுமே காணவில்லை. அவளுக்கு நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது. காதுகளைக் கூர்மையாக்கி,  சத்தத்தை இன்னும் நுண்மையாக கவனித்தாள். அங்கிருக்கிற குழாயின் பக்கமாக சத்தம் வருவதை உணர்ந்தாள். பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக, குழாயின் அருகில் கொண்டுப் போனாள். அப்போதுதான் அவளுக்கு தெரிந்தது, குழாயின் கண்களில் வடிகிற கண்ணீர்த்துளிகள். குழாயின் தலையை இறுக்கமாக திருகினாள். அழுகிற சத்தம் முற்றிலும் அற்றுப் போனது. மின்சாரம், விளக்குகளுக்கு உயிரூட்டியது. மின் விளக்குகள் பளிச்சிட்டன. இருள் விலகி, அறை முழுவதும் வெளிச்சம் பரவியது.