மழை நீராட்டு விழா

சன்னல் வழியே, வரவேற்பு மத்தளம் கொட்டும் இசை. கூடவே, சன்னலைத் தட்டும் சத்தமும் கேட்டது. யாராக இருக்குமென சன்னலைத் திறந்துப் பார்க்க, என் கண்ணத்தை முத்தமிட்டபடி “விழாவிற்கு வாருங்கள்“ என்று அழைத்தது மென்தென்றல். அந்த நொடியில் யாரோ புகைப்படமெடுக்க, யார் நீயென கேட்டேன். “மின்னல்“ என பதில் தந்தது.

“என்ன இங்கு கொண்டாட்டம்?“ என மின்னலிடம் கேட்டேன்.

அதற்கு மின்னலோ, “மழை நீராட்டு விழா“ என்றது.

“யாருக்கு?“ என்றேன் மீண்டும் நான்.

“அதோ.. புதிதாய் பச்சைப் பசும் இலைகளைச் சூடி, அழகுத் ததும்பப் பூத்திருக்கும் இந்த மரங்களுக்குத்தான்“ என்றது மின்னல்.

“என்னை ஏன் அழைத்தீர்கள்?“ என்றேன்.

“மரமாட்டும் நிக்காத“ என காதில் விழுந்தது. அதனால், ஏதோவொரு மரம் அறைக்குள் சிக்கித் தவிக்கிறது போலும்; அதையும் விடுவித்து, மழை நீராட்டு விழாவில் கலந்ததுக் கொள்ளச் செய்வோமென சன்னலைத் தட்டினோமென்றது மின்னல்.

“ஓ.. சரி நான் கிளம்புகிறேன்“ என்றேன் நான்.

அதற்கு மின்னலோ, “வந்ததுதான் வந்துவிட்டாய்; இப்போதாவது கொஞ்சம் குளித்துவிட்டுப் போ என்றது மின்னல்.

     அதுவும் சரிதானென மரங்களோடு மரங்களாக நீண்ட நாட்களுக்குப்பின், நானும் மழை நீராட்டு விழாவில் நீராடினேன். மழையோடு சேர்ந்து, மரத்திலிருந்து சில துளிகள் என் மேல் விழுந்தது. ஒவ்வொரு துளியும் ஒருவிதமாக இருந்தது. முதலில், அதுவும் மழைத்துளிகள்தான் என்றிருந்தேன். ஆனால், போகப் போக வேறுவிதமாக என் மேல் விழுவதாய் தோன்றியது. அது மரங்கள், என் மேல் உமிழ்கிற எச்சிலைப் போல உணர்ந்தேன். வேக வேகமாய் ஓடிவந்து, கதவோடு என்னையும் சேர்த்து அடைத்துக் கொண்டேன்.

நான், என் கற்பனைகளுக்கு விலங்கிட்டுவிட்டு, நிழலிலிருந்து நிஜத்திற்கு வந்தேன். இப்போது, நிகழ்வெல்லாம் தலைக்கீழாகிப் போயிருந்தது. மத்தளவோசையானது இடியோசையாக கேட்டது. மென்தென்றல், வன்தென்றலாய் மாறிக் கண்ணத்தில் அறைந்தது. அதே நொடியில், மின்னலும் ஒளிவாளைக் கண்ணருகே வீசியது. இப்படியாக சில கணங்கள் கடந்தப் பின்பு, அது எனக்கு மழை நீராட்டு விழாவாக தோன்றவில்லை. அதற்கு மாறாக, மானுடர்களை எதிர்த்து நடக்கிற, “மழை போராட்ட விழா“வாக மாறியிருந்தது. என்னுடலின் ஒவ்வொரு செல்லிலும் குற்றவுணர்ச்சியின் வாசம் பரவியது.