கொசுவும் நம் சாதி

“காக்கை குருவி எங்கள் ஜாதி என்றார் நம் பாரதி. நான் அவரோடு சமகாலத்தில் வாழ்ந்திருந்தால், கொசுவையும் சேர்த்துக் கொள்ளச் சொல்லியிருப்பேன். இந்த மண்ணில் பிறந்தவர்களில் சிலரைத் தவிர்த்து, பலரால் அதிகமாக வெறுக்கப்படுகிற உயிரிகளில், கண்டிப்பாக கொசுவுக்குத்தான் முதலிடமாக இருக்குமென நினைக்கிறேன். ஆனால், எனக்கு மட்டும் ஏனோ அதன்மீது தீராத காதல். நான் காதலிக்கிற அழகிய பெண்களிடம் என் காதலை எப்போதுமே கவிதை மூலமாக வெளிப்படுத்துவது வழக்கம். அதே வழக்கத்தில், அந்த அழகிய கொசுவுக்கும் ஒரு கவிதை எழுதி நீட்டினேன். (கவிதையை படிக்க, இங்கே தொடவும்).

என்ன புரிந்ததோ தெரியவில்லை. இந்தக் கவிதையைப் படித்தப் பின்புதான், கொசுக்களெல்லாம் அதிகமாக என்னையும், நான் தங்கியிருக்கிற அறையையும் சூழ்ந்துக் கொள்கிறது. அடிக்கடி வலிக்குமளவிற்கு ஊசிக்குழலை என்னுள் செலுத்துகிறது. என் காதலிலும், கவிதையிலும் மயங்கிப்போய் முத்தமிடுகிறதோ, இல்லை “இதெல்லாம் ஒரு கவிதையா? என கடுப்பாகிப்போய் கடிக்கிறதோ என்று தெரியவில்லை. குழப்பம் நீடித்தாலும், அது என்னை முத்தமிடுவதாகவே எண்ணிக் கொண்டேன். அதனால், உண்டான ஒரு ஐக்கூ...

முத்தமிட்டே
கொல்லும்
அழகிய
இராட்சசி

பலருக்கு கொசுவானது, பொருட்டேயில்லாத ஒரு மிகவும் நுண்ணிய உயிரினமாக தெரியலாம். அதைக் கொல்வதும் பாவமேயில்லை என்றுகூட தோன்றலாம். ஆனால், என் கண்களுக்கோ வேறுவிதமாக தெரிந்தது. சிறியதோ பெரியதோ, நல்லதோ கெட்டதோ எல்லாமே உயிர்தானே.
    
“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது“ என்கிற முதுமொழிக்கு சிறந்தவொரு உதாரணம் தரவேண்டுமானால், கொசுவைத் தாண்டி வேறெதுவும் இருக்க முடியாது. ஏனென்றால், கொசுவானது டைனோசர் காலத்திற்கு முந்தையக் காலத்திலிருந்தே வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். காலத்தால் டைனோசரை அழிக்க முடிந்ததே தவிர, இந்த மிகவும் நுண்ணிய பொருட்டேயில்லாத கொசுவை ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதிலிருந்தே கொசுவின் பலத்தை நாம் தெளிவுற தெரிந்துக் கொள்ளலாம்.

“இரத்தம் உறிஞ்சி வாழ்ந்தவன்
இரத்தம் கக்கியே சாவான்“

     என்கிற வரிகளை யாரோ கொசுவின்மீது எழுதியதைப் படித்திருக்கிறேன். உண்மையில், கொசுக்களுக்கு எல்லா நேரங்களிலும், மனிதர்கள், விலங்குகள், பறவைகளின் இரத்தம் தேவைப்படுவதில்லை. இதிலும் குறிப்பாக, ஆண் கொசுக்களெல்லாம் சுத்த சைவம். அவை தாவரங்களின் சாறு மற்றும் பூக்களிலுள்ள தேன் ஆகியவைகளை உணவாக உட்கொள்ளும். கருமுட்டையை உருவாக்க புரதம் தேவையென்பதால், அந்த நேரங்களில் மட்டும் பெண் கொசுக்கள் நம் இரத்தத்தை உறிஞ்சி, அதிலிருக்கும் புரதங்களைக் கொண்டு கருமுட்டையை உருவாக்கும். மற்ற நேரங்களில், பெண் கொசுக்களுக்கும் நம் இரத்தம் தேவைப்படுவதில்லை. கருவுறாத காலங்களில் பெண் கொசுக்களும் சைவம்தான்.
    
     என்னதான் நியாயம் கற்பித்தாலும், பல நோய்கள் பரவுவதற்கு கொசுக்கள் காரணமாக இருப்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். என்னுடைய பணிவான வேண்டுகோள் என்னவெனில், கொசுக்களை கொல்வதற்குப் பதிலாக, அதிகமாக உருவாகாமல் தடுக்கலாமே என்பதுதான். ஏனெனில், எல்லா அறநூல்களும் உயிரைக் கொல்வது பாவமென்றே நமக்கு போதித்திருக்கிறது. அப்படியிருக்க, கொசுவைக் கொல்வது மட்டும் எந்தவிதத்தில் தர்மமாகும்?

கொசுவை கொன்றாலும், உருவாகாமல் தடுத்தாலும், கொசுவினத்திற்கு நாம் தீங்குதானே செய்கிறோம் என்கிற கேள்வி உங்களுக்குள் எழலாம். குழந்தை உருவாகாமல் தடுப்பதற்கும், உருவாகிய பின்னர் கொல்வதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டல்லவா?. அதே வித்தியாசங்கள்தான் கொசுக்களைக் கொல்வதிலும், உருவாகாமல் தடுப்பதிலும் உள்ளது.

உங்கள் நண்பரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் இரத்தம் தருவதைப்போல, கொசுக்களின் இனத்தைக் காப்பாற்றுவதற்காக இரத்தம் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். இயற்கையின் சமநிலைக்கு, இந்தப் பேரண்டத்திலுள்ள ஒவ்வொரு உயிரியுமே அவசியம்தான். ஆதலால், கொசுக்களை கொல்வதற்குப் பதிலாக கட்டுப்படுத்துங்கள். தேவையில்லாத இடங்களில் நீரினைத் தேங்கவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


குறிப்பு:
கொசுவைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிந்துக் கொள்ள, இங்கே தொடவும்.