கொசு என் காதலி


மின்னல் கீற்றொளியில்
சன்னல் கணவாய் வழியே
என் மீது படையெடுத்தவளே..!

நீ கேட்டால்
உயிரையும் யோசிக்காமல் தருவேன்;
இரத்தத்தை மாட்டே னென்பேனா..?

எடுத்துக் கொள்,
எத்தனை லிட்டர் இரத்தம்
வேண்டுமானாலும் எடுத்துக் கொள்.

உண்ணும்போது இப்போதெல்லாம்
உனக்காக ஒரு பிடியுணவு
உள்ளன்போடு சேர்த்தே உண்கிறேன்

உனக்கு இரத்தம்
கொடுக்கவே உயிரைத் தாங்கி
ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன்

புராணக் காதலர்கள்,
காதலை நிரூபிக்க இரத்தத்தில்
கடித மெழுதுவது வழக்கமாம்

நான் அப்படியெல்லாம்
ஒருபோதும் செய்யவே மாட்டேன்;
அதுவுனக்கு இன்னொருவேளை உணவாகுமல்லவா..?

காலத்தின் கிழவர்கள்,
உப்பிட்டவனை உள்ளளவும் நினையென்றது
உன் காதுகளுக்கு கேட்கவில்லையா..?

இரத்தம் கொடுத்தவனின்
இதயத்தையும் உறிஞ்சிக் கொண்டது
எந்த விதத்தில் நியாயமாகும்..?

ஏனென்றுப் புரியவில்லை
தினந்தோறும் உடல் மெலிந்து
மனம் நொந்து வாடுகிறேன்

என்னவாக இருக்குமென
மருத்துவரை அணுகிக் கேட்டால்,
இது காதல் நோயென்றார்

மருந்துக் கொடுத்து
மரணத்தி லிருந்து என்னை
எப்படியாவது மீட்டெடுங்கள் என்றேன்

என்னிடம் எதுவுமில்லை;
காதல் நோய்க்கு காதலியின்
நேச முத்தம்தான் மருந்தென்றார்

வா உடனே..
வந்தமர்ந்து நுண்ணூசியால் முத்தமிட்டு
நம் காதலைக் காப்பாற்று.