சாதியை ஒழிக்காதீர்

சாதி, நம்மைப் பிரித்தாள கண்டுப்பிடிக்கப்பட்ட பல மோசமான யுக்திகளில் இதுவும் ஒன்று. இன்றைய  நாட்களில், நம்மிடையே சாதியின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதாகவே உணர்கிறேன். எங்கோ மூலைக்கொன்று நடந்துக் கொண்டிருந்த சாதிச் சண்டைகள், இன்றோ அதன் கிளைகளை அனைத்து இடங்களிலும் விரித்திருக்கிறது. இதில் சோகமான விசயம் என்னவென்றால், இன்றைய  இளந்தலைமுறையினரிடையே தீவிரமாக காணப்படுவதுதான். தெருவொரங்களில் தலை நரைத்தவர்களிடமிருந்த  சாதி, இன்று கொஞ்ச கொஞ்சமாக பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களென வேர்விட ஆரம்பித்திருக்கிறது. இதை முளையிலேயே கிள்ளியெறிதல் வேண்டும்.

எப்படித்தான் இந்த சாதியை ஒழிப்பது? என்று என்னைக் கேட்டால், கட்டாயமாக ஒழிக்க வேண்டாமெனவே கூறுவேன். ஏனென்றால், சாதியை ஒழிப்பது எப்படி என்று யோசிப்பதற்கு மாறாக, சகமனிதனிடம் அன்பு செய்தல் எப்படியென போதிக்க வேண்டும். அதுவே, மனிதத்துவத்தின்மீதான, உயிர்களின்மீதான பற்றை மேம்படுத்தும். அமைதிக்கான நோபல் விருதைப் பெற்ற அன்னை தெரசாவைப் பற்றி அனைவருக்கும் தெரியுமென நம்புகிறேன். ஒருமுறை, அவரை தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்களாம். ஆனால், அவரோ அதில் கலந்துக் கொள்ள மறுத்துவிட்டு, அமைதியை ஆதரிக்கிற போராட்டமாக இருந்தால் அழையுங்கள்; நிச்சயமாக கலந்துக் கொள்கிறேன் என்றாராம்.

அன்னை தெரசாவின் புரிதல்தான் நம்மெல்லோருக்கும் வேண்டும். தீவிரவாதத்தை எதிர்ப்பதும், அமைதியை ஆதரிப்பதும் ஒன்றுதான் என்பது போலவும், ஒரே நோக்கத்தை கொண்டதுதான் என்பது போலவும் தோன்றினாலும் இரண்டும் வேறு வேறு. தீவிரவாதமென்பது எதிர்மறையான சொல். அமைதியென்பது நேர்மறையான சொல். எந்தச் சொல்லை அல்லது எந்த எண்ணத்தை நாம் அதிகமாக உச்சரிக்கிறோமோ அல்லது நினைக்கிறோமோ, அது அதன் செயல் வடிவத்தைப் பெற்று, இன்னும் பலமாகுமென்று உளவியல் நிபுணர் சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud) கூறுகிறார். அது நல்ல எண்ணமாக இருந்தாலும் சரி, கெட்ட எண்ணமாக இருந்தாலும் சரி. தீவிரவாதத்தை எதிர்த்து நாம் குரல் கொடுக்க கொடுக்க, இன்னமும் தீவிரவாதம்தான் பலமாகும். அதற்கு மாறாக, அமைதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தால், அமைதி இன்னமும் பலமாகி மேலோங்கும். இதைத்தான் அன்னை தெரசா பின்பற்றினார்.

அன்னை தெரசாவின் வழிமுறையைத்தான் நாமிங்கு பின்பற்ற வேண்டும். அன்பு, சாதி; இது இரண்டில் எது நேர்மறையான, சரியான சொல், சரியான எண்ணமென உங்களுக்கே நன்றாக தெரியும். சாதியை எதிர்ப்பதை விட்டுவிட்டு, அன்பு செய்தலை அனைவரிடத்தும் கொண்டு செல்லுங்கள். அன்பு செய்தல் என்கிற அற்புதவொளி அனைவரிடத்தும் வெளிப்படுகிறபோது, சாதி என்கிற இருள் சாத்தான் இருந்தயிடம் தெரியாமல் அற்றுப் போகும்.

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்வோம்; அது மட்டுமே நம்மை ஒன்றினைக்கும்; அது மட்டுமே நம்மை உயிர்ப்புடன் வாழ வைக்கும்; அது மட்டுமே நம்மை மேன்மைப்படுத்தும்.


"மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமென்றே?
யானெதற்கும் அஞ்சுகிலேன்; மானுடரே, நீவிர்
என்மதத்தைக் கைக் கொண்மின்; பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!"

#பாரதி