வெளிச்சம்

இருள் தின்னும் இரவுகள் தருகிற தனிமையின் சமபக்கத்தில் நீண்டுயர்ந்த நெடுங்கதவுக்குப் பின்னே நித்தமும் ஒளியில்லாமல் ஒளிந்துக் கிடக்கிற நான், உண்மையில் நான்தானா? இல்லை உள்ளிருப்பவன் வேறா? என்றெழுகிற கேள்விகளுக்கு, விளக்கின் வெளிச்சத்தைத் திருடி, வெளிச்ச சாயம் பூசி, ஒளியூட்ட எண்ணினேன். ஆனால், விளக்கிடமே வெளிச்சமில்லாதபோது, நான் எதைத் திருடுவது? அப்படியே வெளிச்சமிருந்தாலும் வெளிச்சத்தில் யார் திருடுவார்?. தேடிப்போனேன் நெடுந்தூரம்; தெரிந்ததொரு வெளிச்ச விளக்கு. வேறுவழியும் இல்லாமல், வெட்கமும் இல்லாமல், வெளிச்சத்திலேயே வெளிச்ச விளக்கிடமிருந்து வெளிச்சத்தைத் திருடினேன். சட்டென வெளிச்ச விளக்கு இருளானது; இருளன் நான் வெளிச்சமானேன். ஒளியில்லாமல் ஒளிந்துக் கிடந்தவன் வாழ்க்கை, ஒளிமயமானது.

வெளிச்ச விளக்கின் வெளிச்சத்தைத் திருடியதன் குற்றவுணர்வு, மிருகமாய் மாறியென்னைக் கொல்லத் துவங்கியது. திருடியவேளையில், எனைப் பார்த்து வெளிச்ச விளக்கு உதிர்த்த சிரிப்புமோர் புதிராகவே இருந்தது. என்னடா இது? வெளிச்சம் வந்தாலும் விந்தையாகவே இருக்கிறதே வாழ்க்கை என்றோசித்த வேளையில், மூளையின் முடுக்குகளில் வெளிச்சம் விருட்சமாய் பரவியது. தீக்குச்சியின் வெளிச்சத்தைத் திருடித்தானே தீபமேற்ற முடியுமென்றது அது.

கலங்காதே வெளிச்ச விளக்கே! உன் கருவை, என் மூளைப்பைக்குள் விதைத்திருக்கிறேன். வெளிவரும் வேளை வந்ததும், திருடிய வெளிச்சத்தை தீபமாக பிரசவிப்பேன். தந்தையாக நீயிரு; தாயாக நானிருக்கிறேன்; அறிவைத் தேடும் கண்களுக்கு, அறிவொளியாக இருக்கட்டும் நம் கவிப்பிள்ளைகள்.