மகிழ்ச்சியின் கதவு


வாழ்க்கை, பல நேரங்களில் நம் கழுத்தை இறுக்கிப் பிடிக்கும். மூச்சு முட்டும். இதற்குமேல் நமக்கெதற்கு இந்த வாழ்க்கை? என்றெல்லாம் கூட தோன்றும். நிதானமாய் இருங்கள். உடைந்துவிடாதீர்கள். ஏனென்றால், வாழ்க்கை நம் சிறகுகளை வளமாக்குகிறபோது இப்படித்தான் வலிக்கும். நம் சிறகுகள் வளமான அடுத்தகணத்தில், வான்நோக்கி பெரும் மகிழ்ச்சியுடன் நெடுந்தூரம் பறக்கலாம், பயணிக்கலாம். அதுவரை பொறுத்திருங்கள்.

காற்று நிறைந்த பலூன்தான் நாம். பலூனின் கழுத்தை இறுக்கிப் பிடிக்கிற நூல்தான் நம் வாழ்க்கை. பலூனின் கழுத்தை நூல் இறுக்கிப் பிடிக்காவிட்டால், உயரமாய் பறக்க முடியுமாயென யோசித்துப் பாருங்கள். இறுக்கிப் பிடிக்கிறவரைதான் உயர உயர பறக்க முடியும். கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தாலும், கண்மூடித் திறப்பதற்குள் தரையில்தான் இருப்போம். வாழ்க்கை, நம் கழுத்தை இறுக்குகிறது என்றால், நம்மை உயரத்துக்குக் கொண்டுச் செல்கிறதென்று அர்த்தம். அது இறுக்கமாய் இறுக்க இறுக்கத்தான் உயர உயர சிறகுகள் விரிக்க முடியும். எட்டாமுடியா இலக்குகளையெல்லாம் எட்ட முடியும்.

பல பிரச்சனைகளும், சோதனைகளும் வாழ்க்கையில் வரும், போகும். அதற்கெல்லாம் பயந்து முடங்கிவிடக் கூடாது. இயற்கையைப் பாருங்கள். அதன் அழகியலை இரசியுங்கள். அது நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தர காத்திருக்கிறது. ஆனால், நாம்தான் கண்டுக் கொள்வதேயில்லை. அந்த மரங்களைப் பாருங்கள். எப்படி இலை, பூ, காய், கனியெல்லாம் உதிர்ந்து, வெறுமனே வெற்றுடம்போடு விதவையாக நிற்கிறது. கையில் எதுவுமேயில்லையென்று, மரங்கள் ஒருபோதும் கலங்கியதேயில்லை. அதற்கு மாறாக, காலம் கனியும்வரைக் காத்திருக்கிறது. காலம் கனிந்ததும், இலைகளை மீண்டும் ஆடையாக உடுத்திக் கொள்ளும்; தலையில் மீண்டும் பூக்களைச் சூடிக் கொள்ளும்; கனிகளை மீண்டும் சுவைக்கத் தரும். காலச்சக்கரம் சுழன்றுக் கொண்டேயிருக்கும். நிரந்தரமென எதுவுமேயில்லை. நமக்கு வருகிற துன்பங்களும் அப்படிதான்; விரைவிலேயே இன்பமாக மாறும்.

பூட்டும் சாவியும் எப்போதும் ஒன்றாகவே உருவாக்கப்படும் என்பார்கள். அதுபோலத்தான் நமக்கு வருகிற பிரச்சனைகளும். கண்டிப்பாக பிரச்சனைகள் வருகிறபோதே, அதற்கான தீர்வையும் கூடவே கொண்டு வரும். நம் வேலை என்னவென்றால், சரியான சாவியை தேர்ந்தெடுத்து, சரியான பூட்டைத் திறப்பது மட்டும்தான். நிதானத்தோடு சரியான சாவியையும், பூட்டையும் தேர்ந்தெடுங்கள். மகிழ்ச்சியின் கதவுகள் தானாகத் திறக்கும்.