இன்னுமொரு இராமாயணப் போர்


அழகான தூரல்
மின்னிடும் மின்னல்
இசைக்கும் இடியோசை
ஞாபக நாற்காலியில் நான்

சுபயோக சுபதினத்தில்
சுடரின் முன்னிலையில்
சுட்டது ஆறாம்விரலாய்
அவளாவியின் வெப்பம்
அடிமையானது என்னாவி

சிரிப்பாள்,
சிகரத்திலேறி சிடுசிடுப்பாள்
முறைப்பாள்,
மூச்சுமுட்ட முத்தமிடுவாள்

ஊராரின் கண்ணெல்லாம்
உன் மேலென
உப்புச் சுத்திடுவாள்

ஓசையின்றி ஓடிவந்து
உடம்பெலாம் அழுக்கென
உரசித் தேய்த்திடுவாள்

கண்ணில் தூசியென
கிட்டவரச் சொல்லி
கண்ணத்தில் முத்தமிடுவாள்

அவளை சுற்றிவர
உலகத்தை சுற்றுவதாய் உணர்ந்தேன்

அவளென்னை சுற்றிவர
உலகமே சுற்றுவதாய் உணர்ந்தேன்

பற்கள் இல்லா
பச்சிளங் குழந்தையாய் அவளும்
பாசமாய் கொஞ்சும் நானும்
பேசிப் பேசி மகிழ்ந்தது
ஒவ்வொரு செல்லினுள்ளும்
உறைந்துக் கிடக்கிறது

யார் கண்பட்டதோ
பாவித் தீக்கதிரவன்
பாதியிலேயே தின்றுவிட்டான்
என்னையும் கொன்றுவிட்டான்

ஞாபக மூட்டையை
நாளும் சுமந்தேன்
நினைவுகளின் காரத்தில்
நனைந்தது கண்கள்

ராதையில்லா கண்ணனாய்
சீதையில்லா இராமனாய்
இரவும் பகலுமாய்
இன்னமும் கடப்பதேனோ?

எமதர்மனே,
மனமிறங்கி வா
என்னையும் கொண்டு போ

இல்லையேல்,
இன்னுமொரு
இராமாயணப் போரை
இவ்வையம் சந்திக்கும்.

1 கருத்து: