மௌன ராகம் - 4’33’’


எங்கு நோக்கினும் இசை; எதை மீட்டினும் இசை. இசையின் அர்த்தங்கள் அளப்பரியது; அதன் எல்லையும் அளந்துவிடவே முடியாதது. பட்டாம்பூச்சியின் சிறகசைவும் இசைதான்; பறையின் ஓசையும் இசைதான். தூணில் இருப்பதும் இசைதான்; துரும்பில் இருப்பதும் இசைதான். இதுதான் இசை, இன்னதுதான் அதன் பொருளெனென இசையில் தேர்ந்த ஞானியால்கூட சொல்லிவிட முடியாது என்பதே என் கருத்து. இக்கருத்தோடு இசைபவர்கள் இதோடு சென்றுவிடுங்கள். இசையாதவர்கள் தொடருங்கள்.

தொடுவானம் என்கிற வார்த்தையின் அர்த்தம் பலருக்கும் தெரிந்திருக்குமென நம்புகிறேன். தரையிலிருந்து பார்க்கிறபோது, கூரையின்மீது ஏறினால் வானத்தின் நீலத்தை அள்ளி வந்துக் கைகளில் பூசிக் கொள்ளலாமென தோன்றும். கூரைமீது ஏறி நின்று பார்க்கிறபோதுதான் தெரியுமது மலையின் உச்சியைத் தொட்டுக் கொண்டிருப்பது. பெரும் முயற்சியெடுத்து மலையின் உச்சியை அடைந்துவிட்டப் பிறகாவது வானின் நீலத்தை வாரிக் கொள்ள முடியுமாயென்றால், கண்டிப்பாக முடியாது. ஏனென்றால், அங்குதான் தொடுவானத்தின்மீதான மாய பிம்பம் சுக்குநூறாக உடைந்து, சுய பிம்பம் கண்முன் விரியும்; நீலவானத்தின் நீளம் நாம் நினைக்கிற தூரத்தில் இல்லை என்கிற உண்மையும் புலப்படும்.

John Milton Cage

ஜான் மில்டன் கேஜ் (John Milton Cage), ஒரு பன்முக இசைக் கலைஞர். இசைப்பது மட்டுமில்லாது, இசையின் புதுவடிவத்தை அல்லது முழுவடிவத்தினை இசையுலகுக்கு உணர்த்த வேண்டுமென்பதில் உறுதியான எண்ணம் கொண்டவர். அந்த எண்ணத்தினை 1952-ஆம் ஆண்டில் 4 நிமிடம் 33 வினாடிகளில் ஒரு இசையாகக் கொடுத்து, இசையின்மீதான வேறொரு கோணத்தினை இசையுலகின் செவிகளுக்கு விருந்தாக்கினார். ஒட்டுமொத்த உலகமும் அந்த இசையினைக் கேட்டு மெய்ச் சிலிர்த்துப் போனது. அப்படி என்னதான் அந்தயிசையில் இருக்கிறதெனக் கேட்கிறீர்களா?. இதோ அந்த இசையினை ஒரு இசைக்கலைஞர் இசைத்துக் காட்டுகிறார், நீங்களே கேட்டுவிட்டு வாருங்கள்.


சீரான கால இடைவெளியில் பியானோ இசைக்கருவியை மூடி, திறந்து மூடி, திறந்து மூடி, திறப்பார் அவ்வளவே. இந்த இசையின் நீளம், 4 நிமிடம் 33 வினாடிகள். ஒலிகளின் கோர்வையே இசையென நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மத்தியில், ஒலிகளுக்கிடையில் மறைந்திருக்கிற மௌனமே உன்னத இசையென உணர்த்தினார் ஜான் மில்டன் கேஜ். இசையின் மகத்துவம் மௌனத்தில் மாயமாக புதைத்துக் கிடக்கிறது என்பது ஜான் மில்டன் கேஜின் நிலைப்பாடு.


"The material of music is sound and silence. Integrating these is composing"

-John Milton Cage