மழலை

அவளும் அவனும்
உரசி செதுக்கியதில்
உருவான சிற்பமோ நீ..!

இருகவிகள் இணைந்து
இரட்டுற மொழிந்து
இயற்றிய கவியோ நீ..!

இருமேக உரசலில்
ஈரைந்தில் பூத்திட்ட
மின்னல் பூவோ நீ..!

கருவிழி கண்களின்
கருவினில் உதித்த
ஆனந்த காவியமோ நீ..!

பருவச் சிகரத்தின் 
பாசக் கலப்பில் 
பிறந்திட்ட அருவியோ நீ..!

பத்தில் பாதமிரண்டில் 
பொன்னென பூத்திருக்கும் 
பொய்கை மலரோ நீ..!

சிவனும் சக்தியும் 
கலந்ததில் கிடைத்த 
கிள்ளை வரமோ நீ..!

சிப்பியில் வீழ்ந்த 
மோக முத்தத்தில் 
முளைத்திட்ட முத்தோ நீ..!

மோகத்தில் கருவுற்று
மேகமென பொழியும் 
மழைத் துளியோ நீ..!

பூவின் கருவில் 
காற்று விதையிட்டு 
ஊறிய தேனோ நீ..!
 

கரு: நா. ஹரிஹரன்

2 கருத்துகள்: